எப்படி எலி நரம்பைக் கடித்து அறுத்து விடுமோ அது போல் காலம் நம் வாழ்க்கையை அழித்து விடும். மிகப் பெரிய மனிதர்களும் இதற்கு விதி விலக்கல்ல. உலகில் யாவற்றையும் விழுங்குவதால் காலம் மிகப் பெரிய சக்தியாகக் காணப்படுகின்றது.
எப்படி, வடவாக்னி என்ற நெருப்பு,கடலிலுள்ள எல்லாவற்றையும் அழிக்கிறதோ, அப்படி காலத்தால் உலகிலுள்ள யாவையும் விழுங்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் மேல் யாராலும் உயிர் வாழ இயலாது. ஆனால் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு காலம் மறுபடியும் அப்படியே இருக்கும். வரம் பெற்ற அரசர்களும் இதற்கு விதி விலக்கல்ல. முக்குணங்களாலும் கட்டுப்பட்ட மிகப் பெரிய தேவர்களும் அதற்கு இரையாகிறார்கள். காலம் சுழன்று கொண்டே இருக்கிறது. மகா கல்ப காலத்தில் எல்லாவற்றையும் அழித்துவிட்டு, காலம் மீண்டும் எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறது.
காலையில் மரங்களை உண்டாக்கி, மதியத்தில் பூ, காய், கனிகளை உண்டுபண்ணி, இரவில் அவற்றை காலம் அழித்து விடுகிறது. ஒரு நிமிடத்தில் பேரழிவு, மறுநிமிடத்தில் ஒரு நல்ல காலம், ஓரிடத்தில் பிறப்பு, மற்றோரிடத்தில் மரணம் என்று ஒரே நேரத்தில் என்னென்ன நடக்கின்றன?
குறைந்த அறிவுடையவர்கள் தேவையற்ற பேச்சு, எதையும் நம்பாமை, மதங்களிடையே சண்டை போன்றவற்றில் ஈடுபட்டு தானாக சவக் குழியில் வீழ்கிறார்கள்.
உலகில் மற்றுமின்றி இப்பிரபஞ்சத்தில் காணப்படும் யாவும் காலத்தால் விழுங்கப்படுகின்ற காரணத்தால், காலம் பிரபஞ்சத்தின் ஆன்மா என்று கூறப்படுகின்றது.
காலம் ஒரு சுழல் நீர் போன்றது. மனிதர்களை ஆசையாலும், தீயபழக்கத்தினாலும் பாழும் குழியில் தள்ளி விடுகின்றது. காலமே எல்லாப் பேராசைகளுக்கும், வெறுப்புகளுக்கும், துன்பங்களுக்கும், நம்முடைய ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணம். எப்படி சிறுவர்கள் பந்தை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்களோ, அது போல காலம், சூரியனையும், சந்திரனையும் வைத்துக் கொண்டு விளையாடுகிறது.
கற்பகால முடிவில் இறந்தவர்களின் எலும்பை மாலையாகப் போட்டுக் கொண்டு காலம் நடனமாடும். கடைசியில் பிரளயாக்னியை உண்டு பண்ணி உலகை ஒன்றுமில்லா ஆகாயத்தில் கரையச் செய்யும். அப்பொழுது பிரமன், இந்திரன் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.
பல கல்பங்கள் தோன்றி அழியலாம். ஆனால் காலத்தை யாரும் தடுக்க இயலாது. காரணம் காலம் எழுவதுமில்லை; அழிவதுமில்லை.
(ஆதாரம்: இராம கீதை என்னும் யோக வாசிஷ்டம் - முதல் காண்டம் - வைராக்கியப் பிரகரணம். இராமர் தனது 15-ம் வயதில் வசிஷ்ட முனிவரிடம் பல கேள்விகளை கேட்கிறார். அவைகளில் "காலம்" பற்றி இராமர் கேள்விகள் கேட்பதற்கு முன்னதாக தான் காலத்தினை பற்றி அறிந்து கொண்டதை விளக்குகிறார். அவற்றின் ஒரு பகுதியே மேலே நீங்கள் படித்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இராமரின் கூற்றான ''பல கல்பங்கள் தோன்றி அழியலாம். ஆனால் காலத்தை யாரும் தடுக்க இயலாது. காரணம் காலம் எழுவதுமில்லை; அழிவதுமில்லை'' என்ற கருத்து, அல்பர்ட் ஐன்ஸ்டீனின் "Relativity Theory of Time and Space" உடன் ஒத்துப் போவதைக் காணலாம்) .
2 comments:
நல்ல கட்டுரை. தேவர்களுக்கு மரணம் என்பது இப்போதுதான் கேள்விப் படுகின்றேன். பல கல்பத்தில் பல பிரம்மாக்கள் தோன்றுகின்றார்கள் என்றாலும். அமரர்களும் மரிப்பார்கள் என்று அறிவது இதுதான் முதல் முறை. நன்றி.
வணக்கம், திரு பித்தன் அய்யா
தங்கள் பாராட்டுக்களுக்கு இதய நன்றி.
தயவு செய்து யோக வாசிஷ்டம் முழுமையும் படிக்கும் படி வேண்டுகிறேன்.
சிறந்த தத்துவங்கள் நிறைய அதில் காணக் கிடைக்கின்றன.
தீபாவளி வாழ்த்துகள்
அஷ்வின் ஜி
Post a Comment