Saturday, October 10, 2009

ஷ்யமந்தக மணி - 3

உண்மையை கண்டறிய ஸ்ரீகிருஷ்ணர் தானே முன்னின்று தனது மெயக்காவலர்களுடன், பிரசேணன் வேட்டையாடச் சென்ற கானகத்துக்குள் நுழைந்தார். வெகு நேரம் தேடிய பின்னர் பிரசேணன் உடலையும், சிங்கத்தின் உடலையும் கண்டனர். சிங்கத்தின் உடல் இருந்த இடத்திலிருந்து காலடி தடங்களையும் கண்டார்கள். காலடித் தடங்கள் ஒரு கரடியுடையது என்பதையும் அறிந்து கொண்டார்கள். காலடித் தடங்களை பின்பற்றிச் சென்ற போது, அவர்கள் ஒரு குகையை அடைந்தனர். 

ஸ்ரீகிருஷ்ணர், மெய்க்காவலர்களை குகைக்கு வெளியே காத்திருக்கும் படி சொல்லிவிட்டு, குகைக்குள் நுழைந்தார். குகைக்குள் ஒரு நீண்ட வழி தென்பட்டது. குகைக்குள் நல்ல வெளிச்சமும், காற்றும் இருந்தது. மேலும், இரு மருங்கிலும் குகைச் சுவர்களில் இராம காவியத்தின் காட்சிகள் அழகுற வண்ணம் தீட்டி சித்தரிக்கப் பட்டிருந்தது. நெடிய குகைப்பாதையின் முடிவில் ஒரு விஸ்தாரமான கூடம் இருந்தது. நாகரீகம் மிக்க மனிதர்களின் இருப்பிடம் போல அந்த இடம் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கூடத்தின் நடுவே சிறிய கரடிக் குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவர்கள் கையில் ஷ்யமந்தகமணி இருப்பதை ஸ்ரீகிருஷ்ணர் கண்டார். முன் பின் தெரியாத ஒருவர் உள்ளே நுழைந்ததைக் கண்ட கரடி குட்டிகள் பெருங்குரலெடுத்து கத்தின. 

உடனே சற்றும் எதிர்பாராத வண்ணம் ஒரு பெரிய கரடி ஸ்ரீகிருஷ்ணரைத் தாக்கத் துவங்கியது. இந்த திடீர்த் தாக்குதலை ஸ்ரீகிருஷ்ணர் லாவகமாகச் சமாளித்தார். வந்திருப்பது யார்? என்ன விஷயம் என்று அறிந்து கொள்ளும் நோக்கமே இன்றி கரடி தாக்க, தான் எதற்காக வந்திருக்கிறோம் என்பதைச் சொல்லவும் ஸ்ரீகிருஷ்ணருக்கு வாய்ப்பு கிடைக்காததால், அவரும் தற்காப்பு கலைகளை கையாண்டார். சிறிது நேர போருக்குப் பின்னர், ஸ்ரீகிருஷ்ணர், அந்தக் கரடியை தூக்கி சுழற்றி சுவரின் மேல் விழும்படியாக எறிந்தார். கரடிக்கு இந்த தாக்குதல் அதிர்ச்சியாய் இருந்தது. யார் நம்மை இவ்வளவு எளிதாக தூக்கி எறிவது? என்று பார்த்தது. 

ஸ்ரீகிருஷ்ணருக்குத் தெரியும் தன்னை தாக்குவது இராமாவதாரத்தில் தனக்குப் பெரிதும் துணையாயிருந்த ஜாம்பவான் என்பது. அதனால் தான் அவர் பதிலுக்கு தாக்காமல் இருந்தார். ஜாம்பவான் இப்போதுதான் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தை பார்த்தார். தன்னை வெல்ல இராமன் தவிர யாராலும் முடியாத போது யார் இவர் என்று கூர்ந்து பார்த்தார். 

பார்த்த உடனே ஜாம்பவானுக்கு வந்திருப்பது இராமர் தான் என்று புரிந்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணரின் காலில் வீழ்ந்து பணிந்து கண்ணீர் பெருக்கி வரவேற்றார். சிறிது நேர அளவளாவல்கள், உபசாரங்கள், மற்றும் அறிமுகங்களுக்குப் பின்னர் தான் வந்த காரணத்தினை ஸ்ரீகிருஷ்ணர் தெரிவித்தார். ஜாம்பவான் அக மிக மகிழ்ந்து, ஷ்யமந்தகமணியை ஸ்ரீகிருஷ்ணரிடம் தந்தார். 

விடைபெற்றுக் கொண்டு தன் மெயக்காவலர்களுடன் ஸ்ரீகிருஷ்ணர் நேராக நகரம் சென்றார். சத்ரஜித் வீட்டுக்குச் சென்று நடந்த செய்திகளை சத்ரஜித்துக்கு தெரிவித்து, ஷ்யமந்தகமணியை அவனிடம் கொடுத்தார். சத்ரஜித் தன் தம்பி இறந்து போனதை விட ஸ்ரீகிருஷ்ணர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தியதை எண்ணி வருந்தி அவர் காலில் பணிந்து மன்னிப்புக் கேட்டான். ஷ்யமந்தகமணியை ஸ்ரீகிருஷ்ணரே வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டினான்.  ஆனால் ஸ்ரீகிருஷ்ணரோ மறுத்து ஷ்யமந்தகமணியை அவனே வைத்துக் கொள்ளச் சொல்லி தன் அரண்மனைக்கு திரும்பினார். விஷயம் அறிந்த நகர மக்கள் வதந்தியைப் பரப்பிய தங்கள் அறியாமைக்கு ஸ்ரீகிருஷ்ணரிடம் மன்னிப்பு கோரினர்.

என் குறிப்பு:  இந்தக் கானகமும், வதந்தியும் பரந்தாமனுக்கு புதிதல்லவே! இராமாவதாரத்தில் மரவுரி தாங்கி கானகம் சென்றதும், பட்டாபிஷேகத்துக்குப் பின்னர் சலவைத் தொழிலாளி ஒருவன் சொன்ன அவச்சொல்லால் சீதாதேவியை மீண்டும் காட்டுக்கு அனுப்பியதும் அதற்கு காரணமாக அமைந்ததும் வதந்திதானே? அவதாரங்களையும் வதந்திகள் துரத்தும் என்பதை இக்கதை விளக்குகிறது. (ஸ்ரீமத்பாகவத புராணம் மற்றும் நாராயணீயம் நூல்களில் ஷ்யமந்தகமணி பற்றிய கதையை காணலாம்)
 
(முற்றும்)

No comments: