Saturday, October 10, 2009

ஷ்யமந்தக மணி - 2


வேட்டைக்கு நண்பர்களுடன் காட்டுக்குள் சென்ற பிரசேணன் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தான். கண்ணில் பட்ட விலங்குகளையெல்லாம் அவனும் அவன் நண்பர்களும் வேட்டையாடினார்கள். போக்குக் காட்டிய ஒரு காட்டுப் பன்றியைத் துரத்திக் கொண்டு பிரசேணன் தனது நண்பர்களையெல்லாம் விட்டு விலகி காட்டுக்குள் வெகு தூரம் வந்து விட்டான். 


அப்போது திடீரென்று ஒரு சிங்கம் அவன் மேல பாய்ந்து தாக்கியது. பிரசேணனும் தனியாளாய் அந்த கொடிய விலங்குடன் வெகு நேரம் போராடினான். இறுதியில் சிங்கத்தின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் இறந்து போனான். அப்போது அங்கு வந்த மிகப் பெரிய கரடி ஒன்று சிங்கத்தைத் தாக்கிக் கொன்றது. பின்னர் பிரசேணன் அணிந்திருந்த ரத்தினக் கல்லினை எடுத்துக் கொண்டு தன் குகைக்குச் சென்றது. குகைக்குள் இருந்த கரடி குட்டிகள் ஆசையுடன் அந்த பிரகாசமான மணியை வாங்கி வைத்துக் கொண்டு விளையாடின. 


இது இவ்வாறிருக்க, மாலை வேலை வெகுநேரமாகியும் பிரசேணன் வீடு திரும்பாததைக் கண்டு சத்ரஜித் கவலையுற்றான். பிரசேனனோடு  வேட்டைக்கு சென்றிருந்தவர்கள் அனைவரும் எப்போதோ வீடு திரும்பி விட்டிருந்தார்கள். அவர்களால் பிரசேனனுக்கு என்ன நேர்ந்தது என்று சொல்ல இயலவில்லை. சத்ரஜித் தன் தம்பி வேறொரு நகருக்கு சென்றிருக்கலாம் என எண்ணினான். 


மறுநாளும் அவன் வராது போனதும் அவனுக்கு மிகுந்த சஞ்சலம் உண்டாயிற்று. கவலையுடன் அமர்ந்திருந்த சத்ரஜித்க்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு வேளை தன் தம்பியைக் கொன்று, ஷ்யமந்தகமணியை ஸ்ரீகிருஷ்ணர் கவர்ந்து கொண்டிருப்பாரோ என்று எண்ணினான். எனினும் நாட்டை ஆளும் அரசனைப் பற்றி யாரிடம் குறை கூறுவது என்றும் பயந்தான். அதே சமயம் மன ஆறுதலுக்காக அவனை கண்டு செல்ல வந்த நண்பர்களுடன் இந்த ஐயத்தினை பகிர்ந்து கொண்டான். அவர்களை அவன் இந்த செய்தியினை யாரிடமும் சொல்லாமல் இரகசியம் காக்க வேண்டினான். சரி என்று தலையாட்டிச் சென்ற சத்ரஜித்தின் நண்பர்கள் அவர்களது நெருங்கிய நண்பர்களிடம் இந்த செய்தியை சொல்லி ரகசியம் காக்க வேண்டினார்கள். அவர்கள் தங்கள் மனைவிமார்களிடம் இந்தச் செய்தியை பரம இரகசியமாகக் கூறி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார்கள். அந்தப் பெண்மணிகளும் பக்கத்துக்கு வீட்டு பெண்மணிகளிடம் காதும் காதும் வைத்தாற் போல இந்த செய்தியை மெல்லிய குரலில் சொன்னார்கள். இவ்வாறாக ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய தவறான வதந்தி காட்டுத் தீயாய் நகருக்குள் பரவியது. 


ஸ்ரீகிருஷ்ணர் அடிக்கடி நகரத் தெருக்களில் வந்து குழந்தைகளிடம் பேசி மகிழ்ந்து அவர்களுக்குப் பரிசுப் பொருட்களை தருவது வழக்கம். இந்த வதந்தீ காரணமாக தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எச்சரித்திருந்தார்கள். ''குழந்தைகளே! ஸ்ரீகிருஷ்ணர் உங்களோடு நெருங்கி வரவோ பழகவோ இடம் கொடுக்காதீர்கள். உங்கள் காது, மூக்கில் உள்ள நகைகளை திருடி கொள்ளலாம். ஏன்? உங்களை கொலை செய்யக் கூட தயங்க மாட்டான் அந்த திருட்டு கிருஷ்ணன்!" என்று எச்சரித்து வைத்திருந்தார்கள். அன்று மாலை ஸ்ரீகிருஷ்ணர் நகரத் தெருக்களில் வந்து குழந்தைகளை அருகில் வரச்சொல்லி அழைத்தார். வழக்கமாக அவரைக் கண்டாலே உற்சாகமாய் ஓடி வரும் அந்தக் குழந்தைகள் பதறி அடித்துக் கொண்டு ஓடத் துவங்கினர். ஸ்ரீகிருஷ்ணருக்கோ ஆச்சர்யம்! மேலும் ஓடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன், "எல்லாரும் ஓடிடுங்க. நம்ப நகைகளை எடுத்துக் கொள்ள நம்மை கொலை கூட செய்வான் இந்த கண்ணன். ஓடுங்க. ஓடுங்க." என்று கத்திக்கொண்டே ஓடினான். மற்ற குழந்தைகளும், 'ஆமாம், ஆமாம், எல்லாரும் ஓடுங்க' என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடின. இதைக் கண்ணுற்ற ஸ்ரீகிருஷ்ணர் துணுக்குற்றார். 


அன்று மாலையே உண்மை நிலவரம் அறிந்து கொள்ள மாறு வேடத்துடன் ஸ்ரீகிருஷ்ணர் கடை வீதிக்கு சென்றார். அங்கு வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த அதே நேரம் வதந்திக்கு கண், காது, மூக்கு வைத்து பலபல விதமாக, சத்ரஜித், ஷ்யமந்தகமணி, பிரசேணன் என்று விவரங்களை விதவிதமாய்க் கதை அளந்து கொண்டிருந்தார்கள். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் மறு நாளே தன் நெருக்கமான சேவகர்களை மட்டும் அழைத்துக் கொண்டு கானகம் சென்றார்.                                                                                 (தொடரும் )






No comments: