Saturday, October 17, 2009

இராம கீதை என்னும் யோகவாசிஷ்டம் - 2 (வசிஷ்டமுனிவரிடம் ஸ்ரீ ராமர் சொன்னது)

உலகம் மிகவும் மாறும் தன்மை உடையது. 

இப்போது பாலைவனமாகிக் காணப்படுவது,நாளைக்கு கடலின் அடிப்பாகமாகி மழைத்தண்ணீர் நிறைந்திருக்கும். 

இன்று வானளாவிக் காணப்படும் மலை, நாளை அழிந்து குழி போல் காணப்படும். 

அழகான உடையணிந்த இந்த உடலை இறப்புக்குப் பின் துணியின்றி குழியில் தள்ளுவார்கள். 

இன்று நரமாகக் காணப்படும் ஒரு ஊர், நாளை யாருமில்லாத காட்டுப் பகுதியாக மாறும். 

இன்றைய காடு நாளை நகரமாகும். 

இன்றைய தலைவன் நாளை வெறும் சாம்பலாகிறான். 

நிலம் நீராகிறது. நீர்நிலை நிலமாகிறது. 

குழந்தை, இளமை, மனித உடம்பு, சொத்துக்கள் போன்ற யாவையும் மாறும் தன்மை கொண்டவை. 

ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும் தன்மை உடையவை. 

நாம் விடும் மூச்சால் நம்முடைய உடம்பு அழிகிறது. இந்த உலக மேடையில் ஆடப்படும் நடனம் போல் மனத்தில் பலவித கற்பனைகள் உண்டாகிறது. பெரிய மனிதர்களின் செயல்கள் நம் மனதில் ஞாபகத்தில் மட்டும் நிற்கின்றன. காரியங்கள் மறைந்து விடுகின்றன. 

பல விஷயங்கள், பொருள்கள், காலத்தால் சீரழிந்து விடும். பல புதிய பொருள்களை இந்த உலகம் உண்டாக்கும். மனிதர்களில் மிருகத்தன்மை உடையவர்களாக பலர் மாறுவர். 

கடவுள்கள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். எதுவும் ஒரே மாதிரியாக இருக்காது. 

சூரியன் தன வெளிச்சத்தால் எல்லாவற்றையும் நமக்குக் காட்டுகிறார். பகல், இரவு அன்று மாறி மாறி காலத்தால் உண்டாகும் எல்லா மாறுதல்களையும் பார்வையிடுகிறார். 

பிரம்மா, சிவன், விஷ்ணு மற்றும் எல்லா பௌதிகப் பொருள்களும் ஒரு நாள் ஒன்றும் இல்லை என்று  ஆகிவிடும். 

ஸ்வர்க்கம், பூமி, காற்று, ஆகாயம், நதிகள், மலைகள், உலகிலுள்ள யாவையும் மரம் நெருப்பில் எரிவதைப் போல காலத்தால் எரிந்து விடும். 

உறவினர், செல்வம், வேலைக்காரர்கள் ஆகியவற்றால் மரண பயத்தில் உள்ளவர்களுக்கு பயனில்லை. ஒரு நேரத்தில் செல்வத்தில் மிதக்கிறோம். மறு நேரத்தில் வறுமையில் வாடுகிறோம். ஒரு நேரம் உடல் நலமாக இருக்கிறது. மறுநேரம் நோய்வாய்ப்பட்டு கஷ்டப் படுகிறோம். மரண பயம் தோன்றாத வரையில் மனத்தில் எல்லாம் இன்ப மயமாக இருக்கிறது. 

மற்றவர்களின் தீய செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால், அந்தத் தீய செயல்களால் நாட்டில் உள்ள நல்லவர்களும் பாதிக்கப் படுவார்கள்.

இதனால் நாட்டில் கோழைத்தனம் அதிகரிக்கும். முட்டாள்களுடன் தொடர்பு கொள்ளுதல் எளிதாகும். ஆனால் அறிவாளிகளுடனும், ஞானிகளுடனும் தொடர்பு கொள்ளுதல் மிகக் கடுமையானதாகும். 

காலப் போக்கில் உலகிலுள்ள எல்லோரும் இறந்து போவார்கள். வாழ்க்கை  முழுவதும் மனைவி, குழந்தைகள், அவர்களுக்காக செல்வம் சேர்ப்பது என்று எண்ணி அதற்காகவே வாழ்ந்து, பின்பு அவைகள் காலத்தால் காணாமல் போக, மனிதர்கள் மனம் கலங்குகிறார்கள். துன்பமும் வேதனையும் படுகிறார்கள்.

2 comments:

பித்தனின் வாக்கு said...

மாற்றம் என்பது ஒன்றுதான் உலகில் என்றுமே மாறாத ஒன்று. அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற்றுவிட்டால் எப்போதும் பரமானந்தம்தான். நன்றி.

Ashwinji said...

வணக்கம் பித்தன் அய்யா
உண்மை.
நன்றி.