Tuesday, March 8, 2011

பாகம் மூன்று: பகுதி பதின்மூன்று :- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.


கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை 13: யாத்திரையின் நிறைவும் யாத்ரீகனின் பிரிவும் 

தரிசனம் முடிந்து கீழே இறங்க ஆரம்பித்ததும் பசி தான் இருப்பதை நினைவூட்டியது. 

குகைக்கு மேலேறும் போது வந்த கம்பிக் கதவுகளைத் தாண்டி இறக்கத்தில் திரும்பிய இடத்தில் ஒரு பெரிய லங்கர் இருந்தது. 

அதில் தோசை வார்க்கும் காட்சியும் சப்தமும். 

அடடா....

''பசிக்கு அவனுக்கு தோசை கொடு, நீ குழந்தையா இருக்கச்சே அதைத்தான் கொடுத்தேன்'' என்று என் பாட்டி என் தாயிடம் சொல்வதாகப் பட்டது எனக்கு. 

ஆசை(பசி)யோடு லங்கரில் நுழைந்ததும் திரு பாண்டியனையும் அவர் துணைவியாரையும் கண்டோம். மேலும் சில தெரிந்த முகங்கள் (பெரிய அறிமுகமில்லாததால் நட்புடன் ஒரு சிரிப்பை உதிர்த்தேன்) உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்

தோசையை கைகளில் வாங்கி ஒரு விள்ளல் எடுத்து சுவைத்தேன். என் முகம் ஜாமெட்ரிக் பாக்ஸில் உள்ள செட்ஸ் ஸ்கொயர் போலானது அங்கிருந்த கண்ணாடித் துண்டில் தெரிந்தது. 

ஆம்! அது அவர்களது தோசை.

எதையோ தடவி சுட்ட தோசை. 

காட்சிக்கு அந்த தோசையையும் சுவைக்கு என் ஞாபகத்தில் உள்ள தோசையையும் சிங்க் (sinc)  செய்து சாப்பிட்டு முடித்தேன். இத்தகைய சித்து விளையாட்டெல்லாம் கல்யாணமான கனவான்களுக்கு கை வந்த கலையாயிற்றே. அதுவும் எனக்கு 22 வருட அனுபவம்.! விடுவேனா?

வெளுத்து கட்டினேன்..... சோகத்தோடு. 

பின் மெதுவாக வரிசையாக அடுக்கியிருந்த கடைகளை மெள்ள கண்களால் நிரடிக்கொண்டே நாங்கள் நால்வரும் நடந்து வந்தோம்.இப்போது திருச்சியிலிருந்து எங்களுடன் வந்திருந்த இரு நண்பர்களில் ஒருவரான திரு.மகேஷ்-ஐ அங்கே பார்த்தோம். மிகவும் களைத்துப் போனவராக காணப்பட்டார். எங்களை பார்த்ததும் அதிகம் உணர்ச்சிகளை காட்டாத அவர் முகத்திலும் சிரிப்பு வெளிப்படையாக தெரிந்தது. எங்கள் ஸ்நேகம் அங்கிருந்து அதிகமானது. 

அங்கிருந்த ஒரு கடையில் அமர்நாத் உள்ள புகைப்படங்களை வாங்கினோம் (ஒரு காம்ப்ரமைஸ் தான்). தொடர்ந்து வந்து ஷூ இரவல் தந்த நண்பரை எப்படியோ அடையாளம் கண்டு திரும்ப அவரிடம் என்னுடையதை வாங்கிக் கொண்டு அவருடைய பொருளைத் திருப்பி நன்றியுடன் தந்து விட்டு  நடந்தேன். 

வெயில் இருந்த வானம் சட்டென மேகமூட்டமாகியது. பின் சடுதியில் சடசடவென ஐஸ் தூறல் ஆரம்பித்து ஜோவென கொட்டியது.  நினைத்துப் பாருங்கள் ! அந்த கணவாய் பகுதியில் ஐஸ்கட்டி மழையால் ஏற்பட்ட சப்தமும், குளிரும் சடுதியில் அதிகமாகியது. 

என் கைகளால் கொஞ்சம் ஐஸ் கட்டிகளை பிடித்து தாங்க முடியாது குளிரால் அவற்றை அப்படியே போட்டு விட்டேன். 

ஐஸ் படிமங்கள்.
கணங்களில் கரைந்தாலும், உணர்வினில் உறைந்தவை.

ஆனால் அந்த ஐஸ் தூறல்கள் அழகோ அழகு!  வலியோ வலி! கல்கண்டு போல (அளவில்) இருந்தது. முதலில் அதில் நடக்க முயற்சித்தேன் ஆனால் ஐஸ்கட்டியால் தொடர்ந்து அடிவாங்க முடியாததால் ஏற்கெனவே அங்கு தஞ்சம் புகுந்து விட்ட அஷ்வின் அவர்களுடன் அருகிலிருந்த ஒரு கடைக்குள் நுழைந்து விட்டேன்.

சற்று தூரத்தில் ஒருவர்(ன்) பெரிய சட்டையைப் போலவே இருந்த மழைக் கோட்டை விற்றுக் கொண்டிருந்தார்(ன்). நான் ஓடிச் சென்று ஒன்று வாங்கிக் கொண்டேன் (விலை ரூ20 மட்டுமே. விலையைப் போலவே அதன் ஆயுளும் மிக குறைவு) உடனே தரித்தும் கொண்டேன். 

பின் ஐஸ் மழை அடங்கியதும் கொஞசம் பொறுப்புடன் எங்கள் உடமைகளை வைத்திருந்த கடையை நோக்கி சற்று வேகமாக நடந்தோம். அந்த வேகத்திற்கு காரணம் அங்கு நிலவிய நிச்சயமற்ற சீதோஷ்ண நிலைதான். வெயில் சட்டென்று மழையானதும் அந்த மழையால் குளிர் அதிகமானதும் எவருக்கும் பொறுப்புணர்வை வரவழைக்கும்.

நல்ல வேளையாக எங்கள் கடைக்கு வந்ததும் மழை கொட்ட ஆரம்பித்தது. காலில் இருந்த ஷூவை மட்டும் கழற்றி விட்டு நான் சாய்ந்து விட்டேன். நாஙகள் மழை விட்டும் சில மணித்துளிகள் அங்கிருந்தோம். அந்த நேரத்தில் எங்கள் கடைக்கெதிரே இருந்த பாதையில் ஒரு நாலைந்து பேராவது உருகிய ஐஸ் பாதையில் சறுக்கி விழுந்ததைப் பார்த்திருப்போம். 

இந்த நேரத்தில் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். எங்கள் குழுவில் 62 பேர் இருந்தாலும் வெறும் 4 நபர்கள் மட்டுமே பால்தாலில் இருந்து அமர்நாத் குகைக்கு நடந்த வந்து பின் நடந்தே திரும்பினர்.

மற்ற எல்லோரும் குதிரையிலாவது இல்லை டோலியிலாவதே இந்த திரும்பி வரும் பயணத்தை மேற்கொண்டனர். 

அந்த நால்வரில் ஒருவரான திரு சிவக்குமார் அப்போது எங்கள் டென்டிற்கு வந்திருந்தார். அவர் மனோபலம் எங்களை ஆச்சர்யப்பட வைத்தது. (பின்னர் ரெயில் பயணத்தில் தான் பட்ட உடற்துன்பங்களை என்னுடன் பகிர்ந்துக் கொண்டார்).அவருக்காக சில மணித்துளிகள் அங்கிருந்துவிட்டு கிளம்பினோம். 

அந்த நேரத்தில் நாங்கள் நடந்து வந்த பாதையே மழையால் சற்று மாறியிருந்ததைக் கண்டோம். ஒரு இடத்தில் உருகிய ஐஸூக்குள் நான் காலை வைத்து அது உடைந்து ஒரு கால் ஷூவையும் சாக்சையும் குளிர் நீரில் நனைத்துக் கொண்டேன். ஒருக்கால் ! (அந்தக் கால்) செய்த பாவத்திற்கான தண்டனையோ என்னவோ? 

பின் குதிரை பேசி (இந்த முறை குதிரைகளை நன்றாக பார்த்து கிட்டதட்ட அந்த குதிரையையே விலைக்கு வாங்குபவரது கூர்மையுடன்) குதிரை ஒன்றை மாற்றி பின் செட்டிலானோம். மெள்ள அக்குதிரைகள் பால்தாலை நோக்கி நடையிட்டன. 

குகையை மீண்டுமொருமுறை திரும்பி கண்களால் படமெடுத்து விட்டு கிளம்பினோம்... 

பம் பம் போலே......போலே.... 

பம் பம் போலே. 

(அமர அனுபவங்களுக்கு நிறைவு. நிறைவு எழுத்தில் மட்டுமே. ஆனால் அவை நம் நினைவுகளில் என்றென்றும் உறைந்திருக்கும்.)

கோவிந்த் மனோஹரின் நன்றி நவிலல்:-
அமரத்துவத்துமான அந்த கணங்களில் மறுமடியும் என்னை திளைக்க வைத்த அஷ்வின் அவர்களுக்கு ஒரு பெரிய விர்ச்சுவல் காஷ்மீர் சால்வைப் போர்த்துகிறேன். 

நிஜ யாத்திரைப் பயணத்தில் உள்ள துன்பமான உணர்வுகளை முழுமையாக வடிகட்டி இன்புற்ற கணங்களை மட்டுமே எழுதும் போது உணர்ந்தேன். ஆக இந்த செயற்கரிய செயலை(?) என்னை செய்விக்க ஊக்கப்படுத்தி என் எழுத்துக்களுக்கு ஒரு வேடந்தாங்கலையும் ஏற்படுத்தித் தந்த அஷ்வினுக்கு என் இதய பூர்வமான நன்றிகள் பல. 

மேலும் இந்த பதிவினைப் படித்த நண்பர்கள் பலர் என்னை பலமுறை நேரில் பாராட்டினாலும் கீதா மேடம் போன்ற ஆன்றோர் பலர் நோக்கும் ஒரு ப்ளாக்ஸ்பாட்டில் என் எண்ணப் பதிவுகளை வாரந்தோறும் அயராமல் (நான் சீக்கிரம் யாரையும் அயர வைத்து விடுவேன் - அதாவது நேரத்திற்கு என் படைப்புகளை தராமல் பல சமயங்களில் திரு.அஷ்வினை படுத்தியுள்ளேன்) வெளியிட்டு அதற்கான கருத்துரைகளை எனக்கு இமெயில் செய்தும் அவற்றுக்கும் அவரே என் சார்பில் நன்றியறிந்ததும் என்னை அவருக்கு மிகவும் கடமைப்பட்டவனாக்கியுள்ளது. 

ஒரு இடுகையில் அவர் "நான் எழுதிய வைஷ்ணோதேவி-அமர்நாத் தொடர் பயணக் கட்டுரையில் சில விஷயங்களை குறிப்பிடாமல் தவிர்த்து விட்டேன். நண்பர் கோவிந்த் மனோஹரின் பயண அனுபவங்களைப் படிக்கும் போது அந்த அனுபவங்களை அவரைப் போன்று சரியாக வெளிப்படுத்த என்னால் இயலாது போனமை தான் நான் அவற்றை எழுதாமைக்கு சரியான காரணம் என புரிந்தது" என்று கருத்திட்டிருந்தார். இதைப் படித்ததும் என் மேல் அவர் வைத்திருக்கும் அன்பு எவ்வளவு ஆழமானது என்று மற்றுமொரு முறை புரிந்தது. 

அவர் படைப்புக்கும் என் பகிர்வுக்குமான வித்தியாசம் ஒரியன்டேஷன் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது தான். அதாவது எழுத எடுத்துக் கொண்ட நிலைப்பாடு. அவர் "தகவலறிவு பகிர்வை" தளமாகக் கொண்டார் நானோ "அனுபவ பகிர்வை" தளமாகக் கொண்டேன். 

அவரது பதிவில் அமர்நாத் செல்லுவோர்க்கான அத்தனை செய்திகளும் இருக்கின்றன. ஆதலின் என்னிடம் புதிதாக சொல்ல தகவல்களை விட என் அனுபவம் இருந்தது. அதனால் அதை பகிர்வுத் தளமாக கொண்டேன். வேறுபாடு இது மட்டுமே. 

அவர் வலைப் பக்கத்தில் என்னை எழுத வைத்து அதையும் தாயுள்ளத்துடன் பாராட்டிய அஷ்வினுக்கு உங்கள் எல்லோரது சார்பாகவும் நான் நன்றி நவில்கிறேன். 

ஆன்றோர் பலர் அன்புடன் வெளியிட்ட, வெளியிடப் போகின்ற பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. 

மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதில் சந்திக்கலாம். 

இவண்

தங்கள்,

கோவிந்த் மனோஹர்.
-------------------------------

உங்களுடன் அஷ்வின்
பிரிய வலைப்பதிவர்களே.
மனம் இல்லாமல் தான் இந்த பதிவுகளை நிறைவு செய்கிறோம்.  சுவையான அனுபவங்களை தொடர்ந்து தந்த கோவிந்த் மனோஹருக்கும், பொறுமையுடன் வாசித்து பின்னூட்டங்கள் தந்து வரும் உங்களுக்கும் எங்கள் இதய நன்றி. 

கோவிந்த் மனோகர் வழங்கும் ஒரு புகைப்படத் தொகுப்பை அடுத்த இடுகையில் இட்டு இத் தொடரை நிறைவு செய்கிறேன். 

எல்லாம் வல்ல பரமனருள் அனைவருக்கும் எல்லா நலமும் தர பிரார்த்திக்கிறேன். 

ஓம் நமசிவாய.  

2 comments:

நிகழ்காலத்தில்... said...

//அவர் படைப்புக்கும் என் பகிர்வுக்குமான வித்தியாசம் ஒரியன்டேஷன் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது தான். அதாவது எழுத எடுத்துக் கொண்ட நிலைப்பாடு. அவர் "தகவலறிவு பகிர்வை" தளமாகக் கொண்டார் நானோ "அனுபவ பகிர்வை" தளமாகக் கொண்டேன். //

அஷ்வின்ஜிக்கும், கோவிந்த் மனோகரை இந்தப்பணியைச் செய்ய தேவையான உதவிகள் செய்து, எங்குமே குறை சொல்ல முடியாத அனுபவத்தை வழங்கியமைக்கு இருவருக்கும் நன்றிகள் பல,

Ashwinji said...

அன்பின் ஐயா,வணக்கம்.
தாங்கள் தொடர்ந்து வந்து வலைப்பதிவை பார்வையிட்டு வருபமைக்கும், கருத்துரைகளை வழங்கி வருபமைக்கும் கோவிந்த் மனோகர் சார்பாகவும் என் சார்பிலும் எனது இதய நன்றியை சமர்பிக்கிறேன்.

அஷ்வின்ஜி.