Sunday, March 6, 2011

பாகம் மூன்று: பகுதி பன்னிரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை 12: சிவதரிசனமும் சுயநிதர்சனமும்

வரிசையில் நிற்கும் போது குடும்பத்தோடு வந்திருந்த யாத்ரீகர்களுடன் நிற்க வேண்டி வந்தது. 

திருப்பதியில் வரிசையில் நிற்கும் போது கலகலவென பேசிக் கொண்டிருக்கும் பக்த கோடிகளைப்போலவே இவர்களும் சிரித்து பேசிக் கொண்டிருந்தது அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பறை சாற்றிற்று.  நாம் அரிசி சாப்பிடும் பகுதியினரானதால் குளிர் தாங்குவதில் கோதுமை உணவுக்காரர்களைவிட சற்று சளைத்தவர்கள் தாம். 

அதனால் அவர்கள் அந்த பயணத்தின் முக்கிய தருணத்தில் இயல்பாய் இருப்பதைப் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது (எந்த செயற்கைத்தனமும் இல்லை). 

எங்களை அனுமதித்த வேளையில் மெள்ள மேலேறி அமரநாதன் மெள்ள மெள்ள எங்களுக்கு தரிசனம் தந்த பொழுதுகளில் சற்று சிலிர்த்துத்தான் போனேன்.

ஆனால் இரும்பு தடுப்புக்களின் பின்னால் (1995ல் அப்படி நான் பார்க்கவில்லை) அந்த அற்புத காட்சியை சிறை வைத்திருந்த மனிதர்கள் மேல் எனக்கு கோபமும் வருத்தமும் ஏற்பட்டது. 


மேலும் நெருங்கிச்  சென்று பார்த்ததில் பக்தர்களின் ப்ரசாத தட்டுகளும் பூக்களும் இலைகளும் சிகப்பு நூல்களும் அந்த ஐஸ் மேடையில் பரந்து விரிந்து படர்ந்திருந்ததும் எனக்கு சற்று அதிருப்தியாக இருந்தது. 


மனிதர்களின் ஆக்கிரமிப்பில் அந்த இடம் (1995க்கும் 2010க்குமான கால இடைவெளியில்) நிறையவே மாறியிருந்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. 

பக்தர்கள் தாயைக் கண்ட சேயாகத்தான் இத்தகைய புனித இடங்களில் நடந்து கொள்கிறார்கள்.

அவ்வேளைகளில் இடத்தின் புனிதத்தை விடவும் (சமயங்களில் மருத்துவ மனைகளில் கூட நாம் ஓங்கார அழுகையையும் வெடிச் சிரிப்பொலிகளையும் கேட்டிருக்கிறோமல்லவா?) தங்களின் பக்திப் பெருக்கமே அவர்களுக்கு முதன்மையாய்த் தெரியும்.

பொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த பக்தி பரவசமும் கெடாமல் இடத்தின் புனிதமும் கெடாமல் பார்த்துக் கொள்வது சற்று சிரமமான கடமையாகத்தான் உள்ளது. அதுவும் இந்த குகைக்கான சிறப்பம்சம் என்னவென்றால் வருடத்தில் அதிகபட்சம் இரண்டு மாதங்களே இங்கு மனிதர்கள் நடமாட, சேவைகள் புரிய முடியும். 

ஆதலின் பெரிய அல்லது நிரந்தரமான வசதி வாய்ப்புக்களை இங்கே யாருமே எதிர்பார்க்க முடியாது மேலும் செய்து தரவும் முடியாது. ராணுவத்தின் உதவியில்லாமல் இங்கு எதுவுமே நடக்கவியலாது. ஆக அங்கு செல்லும் பக்தர்களே தங்கள் கடமைகளாக இந்த இடத்தின் புனிதத்தைக் காக்கும் விதமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. கங்கைக்கு நேர்ந்த கதியை நாம் இந்த தருணத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஆனாலும் அந்த லிங்க வடிவம் எதையோ அமானுஷ்யமாக நமக்கு உணர்த்துவதாக இருந்தது. 

அப்படியே ஒரு ஓரத்தில் நின்று மொத்த இடத்தையும் கண்களால் பருகினேன். குகையின் கூரைப்பகுதி சுமார் 40லிருந்து 50 அடி உயரமிருக்கலாம். மேலே இருந்த ஏதோ ஒரு ஆதாரமான இடத்தில் ஒரு புறா இடம் மாறி இடம் மாறி பறந்து பறந்து உட்கார்ந்தது.. .

இதோ இன்னொன்று... 

இதோ இன்னொன்று...  

அட ! மொத்தம் மூன்று புறாக்கள். !!!

அந்த புறாக்களைப்பற்றி பெரிய கதையென்று கூறப்பட்டு அதைப் பார்ப்பதே பெரிய புண்ணியமென்ற செய்தி அல்லது நம்பிக்கை அங்கே உண்டு. சென்ற முறை அந்த வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை ஆனால் இம் முறை அந்த காட்சி கிடைக்கப் பெற்றேன். பார்வதிதேவியிடம் அமரத்துவம் பற்றி சிவனார் போதிக்கும் பொழுது அங்கிருந்த முட்டையிலிருந்த புறாக்கள் இரண்டு அதை கேட்டு விட்டன. அதனால் அவை இரண்டும் அமரத்துவம் பெற்று விட்டது என்றும் இன்று வரை அவை அந்த இடத்திலேயே இருப்பதாகவும் இந்துக்கள் நம்பிக்கை. 

அமரத்துவம் பற்றி போதித்த கயிலைநாதனே அமர்நாத் அல்லது அமரநாதன் என்று போற்றப்படுகிறார். இக்குகைக்கு வருகை தரும் யாருக்கும் அமரத்துவம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டென்பதும் ஒரு நம்பிக்கை. 


கூட இருந்த அஷ்வினே சற்று நேரங் கழித்து தான் என் ஞாபக்திற்கு வந்தார். அவர் ஏதோ ஸ்லோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அவர் பக்தி நிலையை மிகவும் அருகிலிருந்து பார்த்தவனானேன். கடவுளைப்போலவே உண்மையான பக்தியும் புனிதமானது, பார்க்க பரவசமானது.  அவர் உணர்ச்சிப் பிழம்பாக இருந்ததால் அவரிடம் அதிகம் பேசவில்லை. 

அந்த சமயத்தில் கேமிராவுடன் வந்த ஒருவர் போட்டோ எடுக்கவா? ஒரு ஸ்னாப் 100 ரூபாய் என்றார். சட்டென்று வேண்டாமென நான் மறுத்து விட்டேன். அதற்கு பிற்பாடு மிகவும் வருத்தப்பட்டேன். 

இன்றும் ஏன் அந்த வாய்ப்பை நான் மறுதலித்தேன் என்ற கேள்வி என்னை குடைந்து கொண்டு இருக்கிறது. அதற்கான விடைகளாய் நான் பலவாறாக யோசிக்கிறேன் இப்போதும். போட்டோ அந்த இடத்தின் புனிதத்தை கெடுத்துவிடும் என்று நான் நினைத்தேனோ என்று வியந்து போகிறேன் சில வேளைகளில். 

அந்த இடத்தின் புனிதத்தின் மேல் எனக்கு ஏற்பட்ட ஈடுபாடாய் அந்த மறுதலிப்பு தென்படுகிறது சில வேளைகளில்.

நான் என் மனக்கண்ணால் பார்த்து இதயத்தில் பதித்து கொண்ட காட்சிக்கு என் நினைவு உள்ளவரை நீங்காத உணர்வாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

அமரநாதனை பிரிய மனமில்லாது குகையைவிடடு இறங்கும் வழியில் ஒரு சடாமுடி சிவனடியார் கால்களில் எல்லோரும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கிச் சென்றனர். அவரும் கைகளிலிருந்த தட்டில் உள்ள குங்குமமோ வீபூதியோ பக்தர்களுக்கு நெற்றியிலிட்டு காணிக்கைப் பெற்றுக் கொண்டிருந்தார். 

எனக்கு அவரிடம் "சென்னைத்தனம்" இருப்பதாய்ப் பட்டதால் நான் அவரிடம் ஆசிபெறவில்லை. அவர் அதைக் கண்டு சின்ன புன்முறுவல் ஒன்றை எனக்கு பரிசாக தந்தார். நாங்கள் கண்களால் பேசிக் கொண்டது நிஜம்.! 

முதல் நாள் பள்ளி வகுப்புக்குச் செல்லும் குழந்தை தன் தாயை திரும்பி திரும்பிப் பார்த்து கொண்டு செல்வது போல நான் அந்த குகையோவியத்தை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே கீழே இறங்கினேன். 

என் பழுதுபட்ட கண்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிரப்பிக் கொண்டேன். இது வாழ்நாள் முழுக்க பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய பொக்கிஷமல்லவா? 

மறுமுறை கிடைக்க திருவுளம் எப்படியோ? 

அமரத்துவமான பொழுதுகளிலிருந்து சாதாரண கணங்களுக்கு திரும்பினேன். 

கீழே இறங்க ஆரம்பித்தோம்.........

(கோவிந்த் மனோகர் அடுத்த இடுகையில் நிறைவு செய்வார்)

இதய நன்றி:
படங்கள் தந்த கூகிலாருக்கு. 
பதிவு தந்த கோவிந்த் மனோஹருக்கு.
பின்னூட்டங்களையும், ஆதரவையும் தந்து வரும் அனைவருக்கும்.

அடுத்த பதிவு அடுத்த ஞாயிறு அன்று 
(வரும் புதன் அன்று நான் ஊரில் இல்லை)
-அஷ்வின்ஜி.

2 comments:

manoveli said...

அன்பு அஷ்வின்ஜீ அவர்களுக்கு,

என் முயற்சியில் உங்கள் பங்கு மகத்தானது. நான் மீண்டுமொருமுறை அமர்நாத் சென்றதைப் போலுணர்ந்தேன். தங்கள் மேடைக்கு வந்தனம். கருத்திட்ட அனைவருக்கும் உங்கள் சார்பில் என் நன்றிகள் பல. இது என் முதல் முயற்சி. மேலும் சில முயற்சிகளுக்கு உங்கள் ஆதரவு பெரிய உந்துதல்.

நட்புடன், கோவிந்த் மனோகர்

Ashwinji said...

எல்லாவற்றிற்கும் இறையருளே காரணம். அமரநாதன் நம்மை கருவிகளாகப் பயன்படுத்தி கொண்டதாகத் தான் நான் எண்ணுகிறேன்.
அன்பே சிவம்.
அமர நட்புடன்,
அஷ்வின்ஜி.