Wednesday, March 2, 2011

பாகம் மூன்று: பகுதி பதினொன்று:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

இன்று மஹா சிவராத்திரி-2011
(மஹா பிரதோஷம்)
ஓம் நமசிவாய. சிவாய நம ஓம்.
ஓம் சிவோஹம்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை 11: நாதனை நெருங்க... வேதனை மயங்க... 

இது இப்படியிருக்க அதே சமயத்தில் நான் பின் தொடர்ந்து வருவதாக நினைத்த அஷ்வின் மெள்ள நடந்து சென்று என்னைக் கடந்து மிகவும் தள்ளிச் சென்று விட்டார். ஆதலின் இருவரும் பிரிந்து விட்டோம்! சிவனும் சாதித்து விட்டார் !! 

பாண்டியனும் அவர் மனைவியும் எப்போதோ எங்களை தவறவிட்டு விட்டார்கள் (அது நிச்சயமாக தற்செயல் என்று தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்) நட்பின் ஆயுளுக்கு இத்தகைய தற்செயல்களை புரிந்து(?) கொள்ளும் பக்குவம் வேண்டும் என்பது நிச்சயம். 

தனியாளானவுடன் காலில் இருந்த ஷூ தைரியமாக அதிகம் கடித்து தானிருப்பதை எனக்கு ஞாபகப்படுத்தியது. 

வலியில் வெட்கம் மறந்து எனக்கு இந்தி தெரியாதென்ற உண்மையையும் மறந்து அங்கிருந்த ஒரு ப்ரசாதக் கடையில் உட்கார்ந்து அந்த கடையின் உரிமையாள நண்பரை (ஆம் நண்பர்தான்!) உடைந்த இந்தியில் என் நிலைமையை விளக்கி அவர் ஷூவை (இரவல்) தர முடியுமாவென்று கேட்டேன். 

நான் இப்படிக் கேட்டது அவருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் பின் என் வலி நிறைந்த முகத்தைப் பார்த்து தன் ஷூவை தர ஒப்புக்கொண்டார். சடுதியில் அவர் ஷூவுக்குள் நுழைந்தேன். 

ஷூ மாற்றிய சற்று நேரத்தில் வலி குறைந்ததும், அவரிடம் குகைக்கு சென்று விட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வரவில்லையென்றால் அவர் என் உட்லன்ட்ஸ் ஷூக்களை எடுத்துக் கொள்ளலாம் என்று புரிய வைத்து விட்டு, அவர் பரோபகாரத்திற்கு (இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை அங்கு இந்தியில் முயற்சித்து தோற்றேன் ! ) நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினேன். 

ஐஸ் பாதை முடிந்து சிமெண்ட் படிக்கட்டுகள் ஆரம்பித்த இடம் கொஞ்சம் மேலேறியதும் வந்தது. வலியில் எப்போதும் பாதையையே பார்த்து சென்று கொண்டிருக்கையில் காட்சியோவியங்களை ரசிக்கும் மனமிருந்தாலும் பார்க்கும் பலமில்லாதிருந்தது.

மேலே பார்த்து ஏறவேண்டிய கட்டாயமான ஒரு இடத்தில் அதிர்ச்சியான காட்சியைக் கண்டேன். 

மொத்த பாதையையும் இரும்பு கம்பிகளாலான கதவு வைத்து மூடியிருந்தார்கள். அஙகே இரண்டு பெரிய கேட் மற்றும் ஒருவர் மட்டுமே சென்று வரக்கூடிய ஒரு சிறிய கேட்டையும் அமைந்திருந்தனர். மூடி வைத்த சிறு கேட்டுக்கருகில் எப்போது திறக்கும் என்று எல்லோரும் குழுமியிருந்தனர். 
காத்திருக்கும் அடியவர்களை ஒழுங்கு செய்யும் ராணுவத்தினர்.

நேரம் செல்ல செல்ல கூட்டம் பெருங்கூட்டமாகிக் கொண்டிருந்து.

அவ்வளவு பெரிய பாதைக்கு அந்த சிறிய வழி மிகவும் அபத்தமானது. 

ஏனெனில் சறுக்கு பாதையின் குறுக்கே கதவு வைக்கும் உபாயம் மிகவும அபாயமானது என்று யாருக்கும் தோன்றாமல் போனது சற்று விபரீதந்தான்!

கூட்டத்திற்குள் சிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கேட்டிற்கு மிக அருகில் சென்று நின்று கொண்டேன். தீடீரென்று கதவை திறக்கவே பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டு மரணபயம் பலர் கண்களில் தெரிந்தது (என்னை நான் பார்க்கவில்லை!). ஸ்டாம்பீட் என்று பத்திரிக்கைகளில் படித்திருப்போம்! அன்று அதற்கு நான் ஆளாகி விடுவேனோ என்று பயந்து விட்டேன். அந்த பயத்தில் கைகளில் துணையாயிருந்த மரக்குச்சியை தவறவிட்டேன். ஆனால் களேபரத்தில் வேறொரு மரக்குச்சி கிடைத்தது. 

திக்கி திணறி அந்த கேட்டுக்கு அந்த பக்கம் (குகைப்பக்கம்) சென்று சற்று நிதானித்து நிமிர்ந்த போது சற்று தூரத்தில் என்னை எதிர்பார்த்து காத்திருந்த திரு அஷ்வின் கண்களில் பட்டார். எந்த நிகழ்வையும் உணர்ச்சி வசப்படாமல் ஆராயும் எங்களிருவருக்கும் அங்கு அவ்வளவு பெரிய அமளி நடந்தும் எதுவும் பேசத் தோன்றவில்லை என்பதை வைத்தே அங்கு நிகழ்ந்த கலவரத்தை அன்பர்கள் புரிந்து கொள்வார்களாக. கீழே சறுக்கி விழக்கூடிய பாதையில் மக்கள் கூட்டம் முண்டியடித்து முன்னேற முயன்ற முயற்சியில் நடுவில் சிக்கிக்கொண்ட மொழி தெரியாத இருவரின் நிலைமை...... 

அங்கிருந்து மெள்ள தூரதூரமாக அமைந்திருந்த படிகளில் ஏறி சென்றோம். நடுவில் ஓரிடத்தில் மிலிட்ரி கேம்ப் அமைத்து யாத்ரீகர்களுக்கு வெதுவெதுப்பான நீர் பருக தந்தார்கள்.

எனக்கு அது லாஜிக்காகவே படவில்லை. 

அந்த கேம்ப்பை நெருங்கும் வரை. 

ஆம். அந்த கேம்ப்பை நெருங்கிய போது ஏற்பட்ட மூச்சுத்திணறலுக்கு வெதுவெதுப்பான நீர் எத்தனை இதமாக இருந்து தெரியுமா? 

அப்போது தான் எத்தனை புரிதலோடு அங்கே அந்த வெந்நீர்ப் (!) பந்தலை அமைத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. 

தண்ணீர் பருகியதுமே மேலே நடக்க முடிந்தது. எங்கள் ஷூக்களை வைக்க அங்கு ஓரிடம் இருந்தது. 

அங்கு செல்ல பெரிய பெரிய கயிறுகளை தாண்டவோ அல்லது குனிந்தோ செல்ல வேண்டிய அவசியம் வந்தது. 

ஷூவை கழற்றியதும் வேறு ஒரு பிரச்சனை வருமென எதிர்பார்த்தேன். அதாவது குளிர் கால்களை பதம் பார்க்குமோ என்ற ஐயம் எனக்கு உண்டாயிற்று. 

ஆனால் நல்லவேளையாக அமர(கயிலை)நாதன் குகைக்கருகே ஐஸ் பாளங்களில்லை.

மேலும் வெயில் சரியான நேரத்தில் வெதுவெதுப்பாக காய்ந்ததால் அந்த படிக்கட்டுகள் தாங்குமளவிற்கு சில்லென்றிருந்தது. 

ஆனால் மிகவும் மெள்ளமாகத்தான் ஓரொரு படிக்கட்டையும் கடக்க முடிந்தது.

மூச்சுவிட மூக்கை விட வாயையே அதிகம் உபயோகப்படுத்தினேன். ஆனால் அப்படி சுவாசித்தால் அது உங்கள் சக்தியை அதிகமாக விரயமாக்கும் என்று என் இஎன்டி டாக்டர் சென்னையிலேயே சொல்லியிருந்தார். ஆனால் அவர் சொன்னபடி நடக்க முடியவில்லை.

குகைக்கு படிகளிலேயே சுமார் முக்கால் கி.மீ. நடக்கவேண்டியிருந்தது. நடுவில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஜவான்கள் நின்றிருந்தார்கள். கூட்டத்தை நிறுத்தி நிறுத்தி அனுமதித்தார்கள். 

உடற்துன்பம் இன்னும் சற்று நேரத்தில் விலகி ஓடப்போகிறது என்ற நினைப்பு என்பது நிஜமா? இல்லை ஐஸ் வடிவ சிவனை பார்க்கப் போகிறோம் என்ற துடிப்பா?. 

எது என்று விளக்க ஆளில்லாமல், பலன் கிடைக்கப் போகும் தருணத்திற்காக எல்லோரும் காத்திருந்தோம். 

பலன் தர படைத்தவனுக்கல்லாமல் வேறு யாருக்கு அந்த தகுதி வந்துவிடும்?

சமவெளியில் சமமான இடைவெளிகளில் தோன்றும் சாமியார்களிடம் தம் நம்பிக்கையை மொத்தமாக ஒப்படைக்கும் சராசரி பக்தனுக்கு இந்த இடம் எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப் பார்க்க அந்த நிறுத்தங்கள் தந்த தருணங்களை உபயோகப்படுத்திக் கொண்டேன்.

(அடுத்த நிறைவு இடுகையில் அமரனாதனின் தரிசனம் - கோவிந்த் மனோஹரின் பார்வையில்)

பதிவுலக அன்பர்களே. வணக்கம்.
நான் எழுதிய (இணைப்பினைச் சொடுக்குக) வைஷ்ணோதேவி-அமர்நாத் தொடர் பயணக் கட்டுரையில் சில விஷயங்களை குறிப்பிடாமல் தவிர்த்து விட்டேன். நண்பர் கோவிந்த் மனோஹரின் பயண அனுபவங்களைப் படிக்கும் போது அந்த அனுபவங்களை அவரைப் போன்று சரியாக வெளிப்படுத்த என்னால் இயலாது போனமை தான் நான் அவற்றை எழுதாமைக்கு சரியான காரணம் என புரிந்தது. அமரநாதரை தரிசித்த போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை படிக்க உங்களை போன்றே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.  பதிவுகளை தொடர்ந்து அனுப்பி வரும் நண்பர் கோவிந்த் மனோஹருக்கும்,  தொடர்ந்து படித்து பின்னூட்டி வரும் அன்பர்களுக்கும் என் இதய நன்றி.
-அஷ்வின்ஜி.

2 comments:

geethasmbsvm6 said...

அவர் பரோபகாரத்திற்கு (இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை அங்கு இந்தியில்

आप की मेहरबानी இதான் இங்கே பொருத்தம், உங்கள் கருணையிலென்ற பொருளில் வரும். உதவி என்றால் मदद என்று சொல்லலாம். இந்த ஸ்டாம்பீட் பத்தில் எல்லாம் அஷ்வின் ஜி சொல்லலை, மறந்துட்டார் போல.

Ashwinji said...

இந்த பின்னூட்டத்தை இப்போ மனோகர் கவனிக்கிறாரா தெரியலை.

அவர் சார்பில் கீதாஜிக்கு எனது நன்றி.

நான் நிறைய விஷயங்களை எனது பதிவில் சொல்லவில்லை. எதிர்காலத்தில் அமர்நாத் யாத்ரை போக விரும்புபவர்களை பயமுறுத்தாத சங்கதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து எழுதினேன்.
பயணத்திற்கு தேவையான சில முக்கியமான சங்கதிகளை சேர்த்தேன். நான் சொல்ல விட்டவற்றை கோவிந்த் மனோகர் இட்டு நிரப்பிவிட்டார். :)))