Sunday, February 6, 2011

பாகம் மூன்று: பகுதி நான்கு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.


இடுகை நான்கு: ஞானியாக சில கணங்கள் போதும்.


சங்கம் டாப் - ஞானியாக்கும் சில கணங்கள்.


காலை சுமார் 8 மணியளவில் ஒரு சின்ன தேநீர் கடை மற்றும் வீடு அருகே எங்கள் குதிரைக்காரர்கள் தாங்களும் தங்கள் குதிரைகளும் இளைப்பாற நின்றனர்,  நிறுத்தினர். 


குதிரைக்காரர்களுடன் அமர்ந்து போஸ் கொடுப்பவர் நண்பர் ஜி.கே.சுவாமி.


குதிரையிலிருந்து இறங்கி அருகேயிருந்த ஒரு திட்டில் உட்கார்வது பெரிய சாதனை போல் தெரிந்தது. 

உடம்பின் எல்லாவிடங்களும் கூவிக்கொண்டிருந்தன வலியில். இந்த நிலையில் குளிர் வேறு. எதற்கு துன்பப்படுவது என்ற குழப்பத்தில் மூளை வேடிக்கை பார்ப்பதாக தோன்றியது. 

அந்த வீட்டுக் கடையிலிருந்து ஆவி (பேயல்ல. நீராவி!) வருவதைக் கண்டு உடற்துன்பம் பார்க்காமல் வேகமாக எழுவதாக எண்ணிக் கொண்டு மெதுவாக படுதா பிரித்த சமைக்குமிடம் சென்று டீ பாத்திரத்திற்கு மேலாக கையை காட்டினேன். அப்பப்பா.... என்ன சுகம்!  

குளிரில் நடுங்கும் காலுக்கும் சுகமனுபவிக்கும் கைக்கும் சண்டை வேண்டாம் என்று கடையுள்ளேயே சற்று அமர்ந்தேன். திரு பாண்டியனும் அவர் துணைவியாரும் அருகே அமர்ந்து கொண்டனர். 


சமவெளி தெரிபுகளை சமாதியாக்கும் குளிர். பசிகுளிர்வலி அடடா... 


எங்களை அழைத்துச் சென்ற குதிரைக்காரர்கள்.

ஞானியாவதற்கு இன்னும் சற்று நேர துன்பமே பாக்கியிருப்பதாக எனக்குப் பட்டது. அந்த டீக்கடை ஒரு முகமதியருடையது என்பதை அறிந்தோம். அமர்நாத் குகைக்கு வருடத்தில் ஒரு மாதம் தான் செல்ல முடியும் (ஸ்ரவண மாதம்அதாவது ஜூலை 16ந்தேதியிலிருந்து ஆகஸ்ட் 15வரை சுமாராக). அதுவும் இந்திய ராணுவம் தான் அதற்கான பாதையை உருவாக்கி தரவேண்டும். மற்ற காலங்களில் மனித நடமாட்டம் இல்லாத பகுதியாகத்தான் இருக்கிறது. 

ஆக மனித நடமாட்டமுள்ள காலத்தில் இந்த பால்டால் சுற்று வட்டாரத்திலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இங்கு வரும் யாத்ரீகர்களை நம்பியே இருக்கின்றனர். 

குதிரைக்காரர்கள், தேநீர் விடுதிக்காரர்கள் யாவரும் இங்கு இந்த மாதத்தில் இங்கேயே தங்கி சம்பாதிக்க வேண்டியவர்களாகிறார்கள். இந்த உயரத்தில் இந்த டீக்கடையே இவர்கள் தங்கும் வீடாகவும் சம்பாதிக்க கடையாகவும் உபயோகப் படுத்துகிறார்கள். 


சற்று இளைப்பாறியபின் மீண்டும் குதிரைப் பயணம். 


தவமிருந்த காலைச் சூரியன் சற்றே மலை முகட்டில் எட்டிப் பார்த்தது. 


குளிர் அதிகமாவது குறைந்தது. பின் மெள்ள மெள்ள குளிர் குறைந்தது. 

இரவில் இந்த இடம் எவ்வளவு குளிரும் என்று நான் நினைத்துப் பார்த்தேன்.


ஜயன்ட் வீலின் உயரத்திலிருந்து சட்டென அறுந்து வீழ்ந்த சீட்டில் உட்கார்ந்திருப்பதாக தோன்றி பயந்து அந்த நினைப்பை உதறினேன். குதிரையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப உடம்பை அசைக்க கற்றுக் கொண்டாலும் சேணத்தில் கால் வைக்குமிடம் உடம்பின் அமைப்பிற்கேற்ப இல்லாததால் காலின் முழங்கால் தசைகள் மிகவும் வலித்தன.


வலியினூடே சங்கம் என்ற ஒரு முகடையடைந்தோம்.அந்த முகடிலிருந்து தொடர்ந்து எழுதப்பெற்ற ஆங்கில இசட் போல இறங்கி இறங்கி சென்ற பாதையை பார்த்து நாங்கள் விக்கித்து விட்டோம். 

வெயில் ஏறி குளிர் குறைந்ததும் மலையிறக்கம் ஆரம்பித்து விட்டது. அதன் இறங்கு பாதை ஆரம்பத்தில் யாத்ரீகர்களை குதிரையிலிருந்து இறக்கி விடுகின்றனர். 

ஏனெனில் பாதை 45 டிகிரிக்கு மேலே கீழே இறங்கியது. ஆபத்தான அந்த பாதையில் அனாயசமாக குதிரைகளை இறக்கி ஒரு பாலத்தைக் கடந்து சந்தைப்போல காட்சியளித்த கூடாரங்களுக்கு நடுவே சென்ற பாதையில் நிறுத்தினர். 

முகடிலிருந்து ஹன்டிகாம் மூலம் சுற்றுச்சூழ்நிலையை படம் பிடித்தேன். பனியுருகி ஓடையாய் ஆரம்பித்து பின் பெருக்கெடுத்து ஓடும் ஒரு சிற்றாறை கண்டேன். 



அந்த சிற்றாறின் மேலே தான் பாலம் அமைத்திருக்கின்றனர்அதை தாண்டி சென்றால் கூடாரங்களின் கூட்டம். அதை அடைந்த பின் சிறு ஓய்வு. 

அந்த முகடிலிருந்து இறங்கும் போது மெள்ள மெள்ள இறக்கத்தின் அளவு தெரிந்தது. இறங்கி நடப்பதுதான் சிறந்தது என்று புரிந்தது. பின் மீண்டும் மெள்ள மெள்ள மேலே ஏறவேண்டிய ஏற்றம் அதே ஆங்கில இசட் வடிவ ஆரம்பிக்க மறுபடியும் வலியுடன் கூடிய பயணம். 



இம்முறை நாங்கள் சென்ற பாதை மிகவும் குறுகியதாக இருந்தது. ஒவ்வொரு முறையும் எதிரில் வரும் டோலிக்கோ அல்லது குதிரைகளுக்கோ அல்லது நடந்து வரும் மனிதர்களுக்கோ வழிவிட வேண்டி சற்று நிற்க வேண்டிய வந்தது. ஒன்று சொல்ல மறந்து விட்டேன். 

அந்த முழுபயணத்தையும் நம்முடனேயே குதிரையை பற்றிக்கொண்டு நடந்தே வருகின்றனர் அந்த குதிரையோட்டிகள். 

தெய்வங்களப்பா அவர்கள். அந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர்கள் 20 முதல் 25 முறையாவது சென்று வருகின்றனர். சிவன் மதமற்ற தத்துவம் என்று இருக்கும் பட்சத்தில் சிவனருள் நம்மிலும் அவர்களுக்கே அதிகமாக கிடைக்க வேண்டும். 

இந்த பயணத்திலே குறைந்தது 20 முறையாவது குகைக்கு இன்னும் எத்தனைத் தூரம்என்ற கேள்வியை நான் கேட்டிருப்பேன். 

அவர்களும் சிரித்துக்கொண்டே "தோடா தூர்" அல்லது "சாம்னே" என்று சொல்லிக் கொண்டே குழந்தைகளை ஏமாற்றும் தாயைப் போல எங்களை அழைத்து சென்றனர். 

சமயத்தில் அவர்களும் "பம் பம் போலே" என்று சொல்லக் கேட்கும் போது மனிதனுக்கு முன் மதம் அத்தனை பெரிய விஷயமில்லை என்று தோன்றியது. சில இடங்களில் 10 லிருந்து 20 நிமிடம் வரை நிற்கவேண்டி வந்தது. 

குறிப்பாக செங்குத்தாக ஏறும் குதிரையின் முதுகில் அதை பிடித்துக்கொண்டு 20 நிமிடம் காத்திருப்பது.... உங்கள் கற்பனைக்கே விடுகிறேன். இந்த துன்பமெல்லாம் எனக்கு இரண்டாவது முறையாக வருகிறது என்பதை இதை படிக்கும் வாசக நண்பர்களுக்கு நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 

முதலில் 1995ல் இப்போது 2010ல். படைத்தவனு(ளு)டன் எனக்குள்ள தொடர்பே இத்தகைய துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் துணிவும் பலமும் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்ததாக நினைக்கிறேன். 

As basically I am a lazy person, there can be no other logical explanation behind this expedition. 

மணற்பாங்கான பாதை கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கான பனிப்பாளங்களூடே குளுமைபெற்று வந்தது. இதற்கிடையில் தலைக்கு மேலே அடிக்கடி பெரிய சைஸ் தும்பிகள் போலே கலர் கலராக ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டேயிருந்ததுகள். 

அதில் செல்பவர்கள் எல்லாம் சுகவாசிகள் என்று நான் நினைத்தது பின் தவறு என்று தெரிந்தது.

(கோவிந்த் மனோஹரின் அனுபவங்கள் தொடரும்)


இந்த தொடரை எனது வலைப்பூவான வேதாந்த வைபவத்தில் வெளியிடுவற்காக எழுதி தந்த நண்பர் கோவிந்த் மனோஹருக்கு என் இதய நன்றி.

4 comments:

நிகழ்காலத்தில்... said...

படிக்க படிக்க உற்சாகம் தொற்றிக்கொள்கிறது..

இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் நல்லா இருக்கு.


அடுத்த பகுதியில் சந்திப்போம்...

Ashwinji said...

வாருங்கள் நண்பரே.. உங்கள் இயற்பெயர் தெரியாததால் பெயர் சொல்லி அழைக்க முடியவில்லை. இந்த தொடரை வாசித்து வருபமைக்கு நன்றி. இதே தளத்தில் நான் எழுதிய வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை பற்றிய தொடர் பதிவுகள் (காண்க:Archive) காணக் கிடைக்கின்றன. படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
அஷ்வின்ஜி.

Ashwinji said...

வாருங்கள் சிவா...
இந்த தொடரை வாசித்து வருபமைக்கு நன்றி. இதே தளத்தில் வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை பற்றிய தொடர் பதிவுகள் (காண்க:Archive) காணக் கிடைக்கின்றன. படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
அஷ்வின்ஜி.

geethasmbsvm6 said...

சமயத்தில் அவர்களும் "பம் பம் போலே" என்று சொல்லக் கேட்கும் போது மனிதனுக்கு முன் மதம் அத்தனை பெரிய விஷயமில்லை என்று தோன்றியது//

how true! Bam Bam Bole!