Saturday, December 31, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - இனிக்கட்டும் 2012

இனிக்கட்டும் புதிய ஆண்டு.


எல்லா நலமும், எல்லா வளமும் பெற்று சிறந்து வாழ, இறையன்பர்களுக்கு எனது இதயம் நிறை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, December 24, 2011

திருக்கோவில் உழவாரப் பணி மன்றத்தின் அழைப்பிதழ்.

திருச்சிற்றம்பலம் 

சைவா போற்றி.
தலைவா போற்றி.

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நமது திருக்கோவில் உழவாரப் பணி மன்றத்தின் ஜனவரி மாத திருக்கோவில் உழவாரப் பணி 01.01.2012 ஞாயிறு காலை திருவாலங்காடு அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நிகழ திருவருள் கூட்டியுள்ளது.
இதனைக் கண்ணுறும் அன்பர்கள் சுற்றத்துடனும், நண்பர்களுடன் 31.12.2011 (சனிக்கிழமை) காலை எட்டு மணிக்கே வந்திருந்து உழவாரப் பணியினை சிறப்பாக நடத்தி தருமாறு வேண்டுகிறோம். 

சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் உழவாரப்பணி நடைபெற உள்ளது. திருவாலங்காடு திருமுறைப் பாடல் பெற்ற தலம். காரைக்கால் அம்மையார் பாடிய தலம். ஐந்து சபைகளில் ஒன்றான இரத்தின சபை தலம்.

இரண்டு நாட்களும் தங்கும் வசதியும், உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவிலின் தீப எண்ணெய்க்கு பெருமளவில் அடியார்களின் உதவி தேவைப்படுகிறது.

மதிய நேரத்தில் தொண்டர்களுக்கு அமுது செய்விக்கப்படும்.

திருவாலங்காடு திருக்கோவிலுக்கு செல்லும் வழி:
திருவள்ளூருக்கும், அரக்கோணத்துக்கும் இடையில் திருவாலங்காடு இரயில நிலையம் உள்ளது. அரசு பேருந்து வசதி திருவள்ளூரில் இருந்து உள்ளது. சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் மின்தொடர் வண்டிகள் அனைத்தும் திருவாலங்காடு இரயில நிலையத்தில் நிற்கும். இரயில நிலையத்தில் இருந்து திருக்கோயிலுக்கு செல்ல ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. திருவள்ளூர் பஸ் நிலைய எதிரில் உள்ள நீதிமன்ற வாசலில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை இரண்டு நாட்களிலும் காலை ஏழு மணிக்கு மன்றத்தின் மூலம் இலவசமாக திருவாலங்காடு வரை திருமுருகன் கல்லூரி பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைப்பாளர் சிவ. நா. ஆடலரசன் அவர்களை Cell No.9445121080 இல் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம்.
சிவத் தொண்டாற்றி சிவனருள் பெறுக.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

Monday, December 19, 2011

பழனி - கொடைக்கானல் யோகா-உடல் மன நலக்கலை முகாம் அழைப்பிதழ்.



மெய்த்தவம்.

மாநில அளவிலான உடல் நலக் கலை யோகா, தவம், இயற்கையோடு இணைந்த வாழ்வு முகாம் அழைப்பிதழ்.

நாள்: 26-12-2011 to 30-12-2011
(திங்கள் முதல் வெள்ளி வரை)

முகாமின் முக்கிய நிகழ்வுகள்
  • ஆத்ம விசாரத்தின் மூலம் உடல் உபாதைகளில் இருந்தும், மனச் சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தெளிவு பெறச் செய்தல்.
  • ஆசனங்கள், பிராணாயாம, தியானம் மற்றும் இயற்கை நலவாழ்வியல் முறைகள் மூலம் நோயற்ற வாழ்வு வாழ பயிற்சிகள்.
  • மருத்துவ விளக்கங்கள் மூலம் உண்மை நிலையை அறிதல்.

விளக்க உரை நிகழ்த்துவோர்.
  • யோக உரையோகி நீ.ராமலிங்கம், செயலர், தமிழ்நாடு யோகாசனச் சங்கம், மதுரை.
  • மெய்த்தவம்:  மெய்த்தவ. திருச்செந்தில் அடிகள், சுவாமி தயானந்த குருகுலம்
  • இயற்கை விஞ்ஞானம்கோ.சித்தர், இயற்கை விஞ்ஞானி, தஞ்சாவூர்.
  • இயற்கை நல உணவுஇயற்கை பிரியன் Er. இரத்தின சக்திவேல், சென்னை.
  • பிராண தத்துவம்: தவத்திரு நா. சின்னச்சாமி,இயற்கையாளர், தமிழ்நாடு இரும்பு வணிகம், பழனி.
  • மருத்துவ விளக்கம் அளிப்போர்
Dr.N.C.பேச்சிமுத்து, K.G.மருத்துவ மனை, பழனி.Dr.N.மணிமாறன், குழந்தை நல மருத்துவர், பழனி.Dr.B.ராஜேந்திரன், M.Acu, அக்குப்பங்ச்சர், கம்பம்.Dr. M.யோகலட்சுமி, அரசு மருத்துவர், பழனி.
  • நலம் தரும் யோகம்A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), தணிக்கையாளர், இந்திய ரயில்வே, சென்னை.
  • யோக வாழ்வு: 
யோகாசாரியா R.முருகன், சுவாமி தயானந்தா குருகுலம்
S.முருகேசன், பழனி சேவா சங்கம்.
பயிலரங்கம்: தினமும் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை. நடை பெறும் இடம்: ஐஸ்வர்யா பர்ம், இரும்பு வணிகத் தோட்டம், அண்ணா நகர் பஸ் ஸ்டாப், கொடைக்கானல் சாலை, பழனி.

கருத்தரங்கம்தினமும் காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை. நடைபெறும் இடம்; சாய் சதன், சன்முகபுரம், உழவர் சந்தை அருகில், பழனி.
முகாம் ஒருங்கிணைப்பாளர்கள்:
குருகுலம் மாணவர்கள், சுவாமி தயானந்தா குருகுலம்,
7/176, லட்சுமிபுரம், பழனி.

வலைத்தளம்: www.yogapoornavidya.com
தொடர்புக்கு: 9894685500 and 9444171339

முகாமில் தங்கி பயிற்சி பெற வருவோர் கீழ்க்கண்ட பொருட்களை தவறாமல் முகாமுக்கு வரும்போது எடுத்து வரவும்.
  1. உறங்கும் போது கீழே விரித்துக்கொள்ளவும், போர்த்திக் கொள்ளவும் தேவையான பெட்ஷீட் மற்றும் கம்பளி போர்வை.
  2. குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான உல்லன்/கம்பளி குல்லா, சால்வை, மஃப்ளர் மற்றும் ஸ்வெட்டர், காதுகளை குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் கவசம், etc..
  3. யோகா பயிற்சி செய்ய உதவும் வகையிலான உடைகள். (Track suits, Tshirts, bermuda and Sports outfits) 
  4. நோட்டுப் புத்தகம் மற்றும் பேனா (குறிப்பெடுக்க)
  5. டார்ச் லைட் (மின்சாரம் இல்லாத போது உதவும்)
  6. ஸ்பூன், ஒரு சிறிய கத்தி (பழம் நறுக்க உதவும்)
  7. நகைகள் போன்ற ஆடம்பரமான மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் கொண்டு வரவேண்டாம்.
  8. மூன்று நான்கு மெல்லிதான டவல்கள் (towels) கொண்டு வரவும்.
  9. உங்களுடன் கொண்டு வர வேண்டிய மிக மிக முக்கியமான ஒன்று: - சூழ் நிலைக்கேற்றமாதிரி அனுசரித்துச் செல்லும் மனப்பாங்கு.
நன்றி. 

நேரில் சந்திப்போம்.

வாழி நலம் சூழ.. 

Thursday, December 1, 2011

ஈசன் திருக்கோவில் உழவாரப் பணியில் இணைய வாருங்கள்.

திருச்சிற்றம்பலம்


ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. 615

தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. 616
(மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருப்படை எழுச்சி)

திருச்சிற்றம்பலம் 

திருக்கோவில் உழவாரப் பணி மன்றம் சார்பில் வருகிற 04-12-2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பழைய பெருங்களத்தூர் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப் பணி நிகழ திருவருள் கூட்டி உள்ளது. 


இதனைக் கண்ணுறும் அன்பர்கள் நண்பர்களுடன் வந்திருந்து உழவாரப் பணியினை சிறப்பாக நடத்தி தருமாறு வேண்டுகிறோம். 

திருக்கோவிலின் தீப எண்ணெய்க்கு பெருமளவில் அடியார்களின் உதவி தேவைப் படுகிறது.

மதிய நேரத்தில் தொண்டர்களுக்கு அமுது செய்விக்கப்படும்.

திருக்கோவிலுக்கு செல்லும் வழி:
தாம்பரத்தில் இருந்து இத்திருக்கோவில் மூன்று (3) கி.மீ தூரத்தில் உள்ளது. தாம்பரத்தில் இருந்து மண்ணிவாக்கம்-படப்பை செல்லும் பேருந்தில் ஏறி  முடிச்சூர் ரோட்டில் உள்ள பத்மாவதி திருமண மண்டபம் (அ) பழைய பெருங்களத்தூர் அம்பேத்கார் சிலை பஸ் நிறுத்தத்தில் இறங்கி பழைய பெருங்களத்தூர் பேரூராட்சி அலுவலகம் செல்லும் பாதையில் நடந்து சென்றால் திருக்கோயிலை அடையலாம்.

அமைப்பாளர் சிவ. நா. ஆடலரசன் அவர்களை Cell No.9445121080 இல் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம்.

சிவத் தொண்டாற்றி சிவனருள் பெறுக.

Tuesday, November 8, 2011

7. பத்தர் பரசும் பசுபதிநாதம் - நின் திரு யாழில் என் இறைவா...

ஓம் நமசிவாய.

இந்தச் சேதியை இங்கே பகிர்ந்து கொள்ளலாமா ? வேண்டாமா? என்றெல்லாம் பல முறை யோசித்து விட்டு இதனை இங்கே எழுதுகிறேன்.

நின் திருயாழில் என் இறைவா 
பல பண் தரும் நரம்புண்டு.
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே அதில் 
இணைத்திட வேண்டும் இசையரசே.
 (தாகூரின் கீதாஞ்சலியில் இருந்து)

கடந்த செப்டம்பர் மாதம் நேபாள யாத்திரையின் போது தாகூரின் மேற்கண்ட கீதாஞ்சலி பாடலை அழகிய குரலில் பாடி, எனக்கும் பாடக் கற்றுத் தந்த சகோதரி திருமதி மாதரசி நேற்று (07-11-2011 அன்று ) சிவனின் திருவடியை அடைந்து விட்டார்.

சகோதரி மாதரசி, கணவர் ராம்ராஜுடன் 
பசுபதி நாதர் திருக்கோவில் வாசலில்.
.
எங்களது யாத்திரை முழுதும் எல்லா நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் சிவபுராணம் பாடியும், எல்லா விதமான பக்திப் பாடல்களையும் பாடி எங்கள் அனைவரையும் பக்தி பரவசத்தில் திளைக்க வைத்த அந்த ஜீவன் சிவனைத் தேடிச் சென்று விட்டது.

சிவபுராணத்தினை பாடிடும் பொழுதெல்லாம் நெக்குருகி, கண்ணீர் பெருக பாடுவார்கள் இந்த அம்மையார். அன்பே சிவமாய் விளங்கி எங்கள் எல்லோரிடமும் பழகிய சகோதரி அன்பே சிவமாக அமர்ந்து விட்டார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளாக எனக்கு பரிச்சயமான இந்த அன்பு உள்ளம, தனது இரு மகள்களையும், அன்புக்கு ஏங்கும் கணவனையும் தவிக்க விட்டுவிட்டு இறைவனடியை சேர்ந்து விட்டது.

பயணம் முழுதும் சஹயாத்திரிகளிடம் பண்புடனும், தூய அன்புடனும் பழகி வந்த பாசப் பறவை பறந்து சென்று விட்டது.

மரணம் இனிதுதான். ஆனால் பிரிவு கொடிது.

பக்தி மயமாக விளங்கிய அந்த ஆன்மா அவரது குடும்பத்தை வழி நடத்தி உதவ எல்லாம் வல்ல பரமனை வேண்டுகிறேன். 

கல்மனம் கொண்ட எனது இதயத்தையும் கரையச் செய்து என்னை வாய் விட்டு அழவைத்துச் சென்ற சகோதரி மாதரசியின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சிவகணங்களில் ஒருவராக அவர் விளங்குவார் என்பதில் எனக்கு எந்த எவ்வித ஐயமும் இல்லை.  

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவர் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்ப் 
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
(மணிவாசகப் பெருமானின் சிவபுராண வரிகள்)

திருச்சிற்றம்பலம்.

பயணக் கட்டுரையை தொடர்வதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடியார்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். கூடிய விரைவில் தொடருகிறேன்.

-- 
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

Monday, October 31, 2011

6.பத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011


பசுபதிநாதம்.
நேபாள யாத்திரை - 2011

கங்காதரன்
(நன்றி : கூகிள் விக்கிபீடியா)

தெள்ளுநீர்க் கங்கைச் சடையுடையாய் போற்றி 
உள்ளுவோர்க்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
பசுபதிநாதனே போற்றி போற்றி.

இடுகை: ஆறு

25.09.2011 - இரயில் பயணங்களில்...

A.C.யில் உறங்குவதை நான் விரும்புவதில்லை. இல்லத்தில் கூட எனது அறையில் தரையில் தரைவிரிப்பில் படுத்துறங்கும் வழக்கம் உள்ளவன் நான். வேறு வழியில்லாமல் நீண்டதூ(நே)ரப் பயணம் என்பதால் ஏ.சி. இரயில பெட்டிப் பயணத்தை ஏற்றுக் கொள்ளவேண்டி வந்தது. ஒரு சில வசதிகளுக்காக குழுவினர் ஒன்றாக பயணிக்க வேண்டியதின் கட்டாயமும் ஒரு காரணம்.

தினமும் காலையில் நாலரை மணிக்கே எழுந்து விடும் பழக்கம் உடைய நான் ரயிலில் பயணிப்பதால் ஐந்து மணிக்கு அலாரம் வைத்தேன். அதிகாலை ஐந்து மணிக்கு எனது மொபைல் போன் அலாரம் அடித்து என்னை உசுப்பி எழுப்பியது. முந்தைய நாளில் அதிகாலை இரண்டு மணிக்குத் தான் உறங்கிய நான் அலாரம் சத்தம் கேட்டு கண் விழித்த அதே நேரத்தில் கோரக்பூரில் இருந்து கீதா பிரஸ் விஷ்ணுஜி என்னுடன் பேசினார். எத்தனை மணிக்கு வண்டி விஜயவாடா ரயில் நிலையத்துக்கு வரும் என்று விசாரித்தார். எனது கோச் நெம்பர், பெர்த் நெம்பர் போன்றவற்றை குறித்துக் கொண்டார். அவரது நண்பர் திரு.பிரசாத் எங்களுக்காக அரிசி மற்றும் சில மளிகை சாமான்களை வாங்கி கொண்டு வந்து எங்களிடம் சேர்ப்பார் எனவும் அவற்றை வாங்கி கொண்டுவர என்னிடம் விஷ்ணுஜி கூறினார். விஜயவாடா அன்பர் பிரசாத்தின் செல்பேசி எண் தந்து குறித்துக் கொள்ளச் சொன்னார். ரயில் வரும் நேரத்தை அந்த அன்பருக்கு நான் அவரது செல்பேசியில் அழைத்து சொன்னேன். அவரும் அதைக் குறித்து கொண்டார். என்னைச் சந்திக்க வரும் விஜயவாடா அன்பருக்கு தெலுங்கு மட்டுமே பேசத் தெரியும். எனக்கு தெலுங்கு மற்றவர் பேசக் கேட்டு புரிந்து கொள்ள முடியும். ஆனால் சரளமாக பேச வராது. எனினும் அவரிடம் செய்திகளை ஒருவாறாக பரிமாற என்னால் முடிந்தது. விஜயவாடா ரயில் நிலையத்தில் திரு.பிரசாத் வந்திருந்து பொருட்களை எங்களிடம் சேர்த்தார். அவருக்கு நன்றி தெரிவித்து பிளாட்பாரத்தில் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் கோரக்பூரில் இருந்து திரு விஷ்ணுஜி என்னுடன் மொபைலில் தொடர்பு கொண்டு பொருட்கள் வந்து சேர்ந்ததா என்று விசாரித்து அறிந்து கொண்டார்.

நான் சென்னையில் இருந்து புறப்படுவதற்கு ஒருவாரம் முன்னதாகத் துவங்கி சென்னை வந்து அவரவர் வீடு வந்து சேரும் வரை எங்களது பயணத்தின் போது விஷ்ணுஜி காட்டிய பேரன்பையும், ஆதரவினையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவுக்கு இருந்தன. அன்பு நிறை பண்பாளர் தேவ் அவர்கள் மூலம் கிடைத்த இந்த ஆதரவு திருவருட்பயனால் விளைந்தவை என்பதை உணர்ந்து இறைவனுக்கு இதயம் நிறைந்த நன்றிகளைச் சொன்னேன்.

காலைக்  கடன்களை முடித்ததும் எங்கள் குழுவினருடன் சேர்ந்து சிவபுராணம் பாடினோம். எங்கள் அணியில் திருமதி மாதரசி மிக அற்புதமாக சிவபுராணம் சொன்னார். இல்லத்தில் இருந்து கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களில் இருந்து சிற்றுண்டி அருந்தினோம். இட்லி, சப்பாத்தி, கொஞ்சம் ஸ்வீட் மற்றும் காரம் என கலவையாக காலைச் சிற்றுண்டி படலம் நிறைவேறியது. அதன் பின்னர் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

இறையவன் அமைத்த சத்சங்கம்.

என்னுடன் பயணம் செய்பவர்களைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். திரு.நடராஜன், திருமதி நடராஜன், திரு.ராமராஜ், திருமதி மாதரசி ராமராஜ், திரு.மங்களேஸ்வரன், திருமதி.மாலதி மங்களேஸ்வரன், குமாரி ஷோபனா மங்களேஸ்வரன் என்று என்னைத் தவிர்த்து ஏழு பேர்கள் எனது சஹாயாத்திரிகளாக அமைந்தார்கள்..

கடந்த பத்து வருடங்களாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் இவர்கள் அனைவரும் சிறந்த இறைஅடியார்கள். எளிமையை மிகவும் விரும்புபவர்கள். செல்லும் இடங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை அமைத்து கொள்ளும் சகிப்புத் தன்மை படைத்தவர்கள். அமைதி விரும்பிகள். ஒருவருக்கொருவர் அனுசரனையாக இருந்து கொண்டு வருபவர்கள். திரு.நடராஜன் விரைவில் ஓய்வு பெற இருப்பவர். ஹிந்தி நன்றாக பேசுவார். எங்களது மொழிபெயர்ப்பாளராக இவர் இருந்தார். தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர். ஹூப்ளியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தவர். கன்னடமும் நன்றாக பேசுவார். அவரது துணைவியார் பழகுவதற்கு இனிய மென்மையான சுபாவம் கொண்டவர். இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி அவர்களும் பிள்ளை குட்டிகளோடு வளமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த அடியார்கள் அனைவரும் அலுவலகம் மூலமாக அறிமுகமாகி 20வருடங்களுக்கு மேல் குடும்ப நண்பர்களாக இருப்பவர்கள். ஒருவருக்கொருவர் வாழ்வு தாழ்வுகளில் இணைந்தே உறவாடி, ஒத்தாசையாக இருந்து வாழ்க்கையை செம்மையாக வாழ்பவர்கள்.

திரு.ராம்ராஜ், திருமதி ராம்ராஜ் ஆதர்ச தம்பதியினர். அரவிந்த அன்னையின் பால் மாறாத பக்தி பூண்டவர்கள். ஆழ்நிலைத் தியானம், ரெய்கி, போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருபவர்கள். மற்றவர்களுக்கு பயன்தரும் இக்கலைகளை ஒரு ஆத்மார்த்த சேவையாக செய்துவருபவர்கள். இவர்களின் இரு மகள்களில் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. மற்றொரு மகள் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகிறாள். அந்தப் பெண்ணும் இந்த யாத்திரையில் கலந்து கொள்வதாக இருந்தது. பணியிடத்தில் லீவு கிடைக்காததினால் வரவில்லை. 


சஹயாத்திரிகளின் பிள்ளைகளை சிறு குழந்தையாக இருக்கும் போதே பார்த்திருக்கிறேன். இப்போது அவர்களில் பலர் திருமணமாகி குழந்தை குட்டிகளோடு சௌக்கியமாக இருக்கிறார்கள். இவர்களில் மங்களேஷ்வர் தம்பதியினரின் மகள் குமாரி ஷோபனா சிறுவயதில் இருந்தே தங்கள் பெற்றோருடன் அகில இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருபவள். வருகிற ஜனவரியில் அவளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அதற்குள் ஒரு நல்வாய்ப்பாக மகளுடன் காத்மாண்டு போய் வந்து விடலாம் என்று அழைத்து வந்திருக்கிறார்கள். திருமணம் நிச்சயமாகி விட்ட நிலையில் இந்த பெண்ணை அழைத்து வர வருங்கால கணவனிடமும், மாமனார்-மாமியாரிடமும் அனுமதி பெற்று அழைத்து வந்திருக்கிறார்கள். அடிக்கடி போனில் தனது வருங்கால கணவனிடம் பேசி தான் பத்திரமாக இருப்பதை தெரிவித்துக் கொண்டிருந்தது அந்தப் பெண்.

இரயில் தொடர்ந்து காலதாமதமாகவே சென்று கொண்டிருந்தது. குழு அன்பர்கள் தங்களது பயண அனுபவங்களை சுவாரஸ்யமாக என்னுடன் பகிர்ந்து கொண்டு வந்தார்கள். இந்தக் குழுவின் மற்றொரு அங்கத்தினரான அன்பர் சந்திரகுமாரால் இந்த முறை யாத்திரையில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் அவர் எண்ணமெல்லாம் எங்களுடனே இருந்தது. மணிக்கொரு தடவை போன் செய்து எங்களுடன் பேசிக் கொண்டே இருந்தார். ரயில் எங்கே செல்கிறது? சாப்பிட்டாச்சா? என்றெல்லாம் விசாரித்து கொண்டு இருந்தார். யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக மிகவும் வருந்தினார். திரும்பி சென்னை வந்து சேரும் வரை நண்பர் சந்திரகுமார் எங்களோடு தொடர்ந்து தொடர்பு கொண்டு உரையாடியது நெஞ்சினை நிறைத்து, நெகிழவும் வைத்தது. அன்பர் சந்திரகுமாரைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். திரு.சந்திரகுமார் ஒரு சிறந்த சிவனடியார். திருக்கோவில்களில் உழவாரப் பணிகளை செய்துவருபவர். சென்னையில் உள்ள உழவாரப் பணி குழுவில் பிரதி மாதம் முதல் ஞாயிறு அன்று முன்னதாகவே திட்டமிடப்பட்ட கோவிலுக்கு காலையிலேயே சென்று உழவாரப் பணியில் ஈடுபடுவார். யாத்திரையில் என்னுடன் வரும் அன்பர்கள் உழவாரப் பணியில் கலந்து கொள்ளுவார்கள். இந்த அளவுக்கு ஈடுபாடு கொண்ட அடியார்களுடன் யாத்திரையில் பயணிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

எல்லாம் அவன் செயல்.

அன்பர்.சந்திரகுமாருக்கு பதிலாக நான் முதன் முறையாக இந்த குழுவினருடன் யாத்திரையில் கலந்து கொள்கிறேன். பத்தாண்டுகளாக இவர்களது சத்சங்கத்தை இழந்திருக்கிறேன் என்பதை எண்ணி வருந்தினேன். எனது சூழல்கள் அப்படி அமைந்திருந்ததும் வினைப்பயனே. இப்போது இவர்களுடன் இணைந்திருப்பது இறைவனின் அருட்பயனே என்று மனநிறைவு கொண்டேன். ஆட்டுவிப்பதும், கூட்டுவிப்பதும் அந்த ஆடல்வல்லானின் திருவிளையாடல் அல்லவா?

இவர்கள் தங்களது குழுவில் வேறொருவரை சேர்ப்பதற்கு மிகவும் யோசனை செய்வார்கள். எல்லோருமே அனுசரணையுடன், ஒத்தியல்புடன் பழகுவார்களா என்ற ஐயம் அவர்களுக்கு உண்டு. என்னுடன் இருபது வருடங்களுக்கு மேலாக பழக்கம் இருந்தும் பயணத் திட்டங்களை பற்றி எதுவும் கூறியதில்லை. நேபாள யாத்திரை செல்ல ரயில் முன்பதிவு கூட அவர்கள் முன்னமேயே செய்துவிட்டார்கள். கிட்டத்தட்ட பத்துநாட்கள் கழித்து பேச்சு வாக்கில் என்னிடம் இது பற்றி சொல்லிய போதுதான், நானும் கலந்து கொள்ள எண்ணினேன். அவரசரம் அவசரமாக முன்பதிவு செய்யச் சென்ற போது இரண்டாம் வகுப்பு ஏ.சி.யில் வெயிட் லிஸ்ட் ஆகி இருந்தது. எனினும் மூன்றாம் வகுப்பு ஏ.சியில் கோரக்பூர் போக, திரும்ப சென்னை வர படுக்கைகள் கிடைத்தன. அவற்றை உடனே பதிவு செய்து கொண்டு நேபாள யாத்திரையில் நான் கலந்து கொள்வதை உடனே உறுதிப்படுத்திக் கொண்டேன்.

(பகிர்தல் தொடரும்)


--
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

Friday, October 28, 2011

5. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011


நேபாளப் பயணக் கட்டுரை- பத்தர் பரசும் பசுபதிநாதம் 

ஓம் நமசிவாய.

lord_shiva.jpg

எந்தையும் தாயுமாய் இருந்தாய் போற்றி.
சிந்தை முழுதும் நிறைந்தாய் போற்றி.
பசுபதிநாதனே போற்றி போற்றி.

இடுகை: ஐந்து 

நேபாளப் பயணம் துவங்குகிறது.

14.09.2011: சென்னையில் இருந்து கோரக்பூருக்கு (ரயில் பயணமாக).

எங்கள் பயணத் திட்டப் படி செப்டம்பர், 2011 பதினான்காம் தேதி அன்று ரப்திசாகர் எக்ஸ்ப்ரஸ் (திருவனந்தபுரம்-கோரக்பூர்) சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு பதினொன்று இருபதுக்கு புறப்படவேண்டும். ஆனாலோ திருவனந்தபுரத்தில் இருந்து வரும் ரயில் அன்று சென்டிரல் வருவதற்கு தாமதாமாகிக் கொண்டிருந்தது. காரணம் அதற்கு முந்தைய தினம் (13.09.2011 அன்று) அரக்கோணம் அருகே ஏற்பட்ட மின்தொடர் வண்டி மற்றொரு ரயிலின் மேல் மோதியதால் ஏற்பட்ட துயர விபத்தின் காரணமாக சென்னைக்கு வரும் ரயில்களின் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. எனவே பல இரயில்கள் மாற்றுப் பாதையில் சென்று கொண்டிருந்தன. 

பலமணிநேர காலதாமதம் தவிர்க்க முடியாததாக அமைந்து விட்டது. அன்று முழுவதும் அடிக்கடி கட்டுப்பாட்டு அறைக்கு போன் போட்டு அரக்கோணம்-சென்னை பாதை சீரமைக்கப் பட்டு விட்டதா? இரயில்கள் போக்குவரத்து  சீராகி விட்டதா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தோம். தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தில் பணி புரியும் எனது நண்பர்கள் எங்களுக்காக இந்த தகவல்களை அடிக்கடி சேகரித்து சரிபார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அன்று மாலை இல்லம் வந்து பயண ஏற்பாடுகளை கவனித்தேன். என் மனைவி பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், நிறைய சப்பாத்திகள், தொட்டுக் கொள்ள வெங்காயம்-தக்காளி தொக்கு மற்றும் புளிசாதம் போன்றவற்றை தயாரித்து வைத்திருந்தாள். அவற்றை பேக் செய்து எடுத்துக் கொண்டேன். இறையடியார் சேகர்ஜி என்னுடன் போனில் பேசினார். அவர் சென்டிரலில் வந்து எங்களை வழியனுப்ப ஆர்வமாக இருந்தார். அவருடன் மழலையும் சேர்ந்து வர திட்டமிருந்ததாம்.

சென்டிரல் ரயில் நிலையத்தில் நிறைய பயணிகள் கூட்டம் இருந்ததால், நிற்க இடமில்லாமல் இருந்தது முதல் நாள் இரவில் இருந்து பயணிகள் தாங்கள் புறப்படவேண்டிய இரயிலுக்காக காத்திருந்தார்கள். அந்த சந்தடியில் இறையடியார்கள் வந்தால் அவர்களுக்கு தொந்தரவாக அமையும் என்பதினால் அன்பர சேகர்ஜியை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டேன். அவர் பயணம் வெற்றியடைய வாழ்த்துக் கூறினார். சற்று நேரம் கழித்து மழலையும் என்னுடன் பேசியது. சாதுவாக பயணத்தை முடித்து வரச் சொல்லி வாழ்த்தியது மழலை. எனது துணைவியார் இல்லாமல் தனியாகச் செல்வதை சாதுவாகப் (சாமியார் மாதிரி) போய் வாருங்கள் என்று (நகைச்)சுவையாக குறிப்பிட்டார் மழலை.

இரத்தினமாலை குழும இறையடியார்கள் ஒவ்வொருவரும் எனது பயண வெற்றிக்கு மின்மடல் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்கள். மின் தமிழ் மடலாடற்குழும ஆன்றோர்களும் மின்மடல் மூலமாக வாழ்த்து சொல்லி எனது பயணத்தினை வளமாக்கினார்கள். மறவன்புலவு ஐயா, இன்னம்பூரார் போன்ற மற்றும் பல அறிஞர்கள் எல்லாம் போனில் அழைத்து வாழ்த்திட நான் என்ன புண்ணியம் செய்திருப்பேன்? என்று எண்ணி எண்ணி இறுமாந்தேன். இந்த பெரியோர்களின் அன்பும், ஆசியும் எங்களுக்கு பயண முழுமையும் ஆதரவாகவும், பக்க பலமாகவும் அமைய உதவியது.

இரவு எட்டு மணிக்கெல்லாம் சென்டிரல் இரயில நிலையம் சென்று விட்டேன். பின்னர் சக யாத்திரிகள் ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினர். இரவு ஒன்பதரை அளவில் அனைவரும் ஒரு இடத்தில் குழுமினோம். நிற்கக் கூட இடம் இல்லாமல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. கிட்டத்தட்ட இருபத்து நான்கு மணி நேரமாக இரயில்கள் வந்து சேர்தல், புறப்படுதலில் நிச்சயமற்ற தன்மை நிலவியதால் அனைவரும் எரிச்சலுடனும், சலிப்புடனும் காணப்பட்டார்கள். அந்த மன நிலையில் அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம். காரணம் எங்களுக்கு தெரியவந்த சேதி தான். அதாவது முந்தைய நாளிரவில் கேரளாவில் இருந்து வரும் ரயில்கள் அரக்கோணத்துக்கு முன்னதாக திருப்பி விடப்பட்டு ரேணிகுண்டா அல்லது கூடூர் இரயில நிலையத்தில் இருந்து புறப்பட்டனவாம். அந்த வண்டிகளில் முன்பதிவு சென்னைப் பயணிகள் சென்னையில் இருந்து வேறொரு ரயிலில் பயணித்து கூடூர்/ரேணிகுண்டா போய் அங்கு காத்திருந்த தத்தம் இரயில்களில் ஏறிச் சென்றிருக்கிறார்கள். இன்றும் அதுபோல நிகழுமா என்ற எதிர்பார்ப்பும் கவலையும் எங்களை கவ்விக் கொண்டன. இந்த மாதிரி நேரங்களில் முறையான அறிவிப்புகளை செய்யாமல் காத்திருக்கும் பயணிகளை சலிப்படையச் செய்வதில் இருந்து இரயில்வே நிர்வாகம் இன்னும் விடுபடவில்லை என்பதையும் வருத்தத்துடன் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். பரபரப்புடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிர்வாகம் இன்னமும் மக்கள்தொடர்பில் சரியாக முன்னேறவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகவே இருக்கிறது. எந்த பிளாட்பாரத்தில் எந்த இரயில புறப்படும் என்று அறிவிக்கும் டிஸ்ப்ளே பலகையில் உள்ள செய்தியும், CCTVயில் அறிவிக்கப்படும் செய்திகளும் பொருந்தவே இல்லை. 

இதனால் ஏற்பட்ட சங்கடங்கள் என்னவென்றால் டிஸ்ப்ளே பலகையில் பார்த்துவிட்டு ஒன்றாம் எண் பிளாட்பாரத்தில் நாங்கள் காத்திருக்க, நீண்ட நேரம் கழித்து CCTVயில் அறிவிக்கப்பட்ட பிளாட்பாரம் எண் வேறாக இருந்தது. இதனால் ஒன்றாம் எண் நடை மேடையில் இருந்து எட்டாம் எண் நடைமேடைக்கு பயணிகள் கூட்டத்தில் நீந்தி தவித்து வர வேண்டியதாயிற்று. ஏனெனில் எனது சகபயணிகள் ஏழு பேரில் ஒருவர் மாற்றுத் திறனாளி. ஒரு செயற்கைக் காலில் நடந்தாக வேண்டும். மற்ற இருவர் வயதானவர்கள். மற்ற நால்வரில் ஒரு இளைஞி தவிர மற்ற எல்லாருமே ஐம்பது வயதினைக் கடந்த ஆண் பெண்கள். பத்து நாள் பயணம் என்பதால் பெட்டிகள் நிறைய வந்திருந்தன. கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சென்று வந்த அனுபவம் காரணமாக எனது லக்கேஜ்களை பார்த்து பார்த்து எடுத்து வைத்திருந்தேன். சாப்பாட்டு பை ரயிலில் தீர்ந்து விடும். மற்ற பெட்டி/பைகள் சமாளிக்கக் கூடிய எடையுடன் அமைத்துக் கொண்டிருந்தேன். பிறர் உதவியின்றி இழுத்து/தூக்கிச் செல்லக்கூடியவிதமாக அவைகள் இருந்தன.

எது எப்படி இருப்பினும் நீண்ட நேர காத்திருத்தல், சலிப்பு, தூக்கம் இவற்றை எல்லாம் தாண்டி நள்ளிரவு/அதிகாலை பன்னிரண்டரை மணிக்கு ஒருவழியாக நாங்கள் பயணிக்க வேண்டிய ரப்திசாகர் எக்ஸ்ப்ரஸ் சென்டிரல் வந்து சேர்ந்தது. எங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு இரயிலில் எங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அதிகாலை ஒன்றரை மணிக்கு சென்டிரலில் இருந்து எங்களது வண்டி புறப்பட்டது. அவரவர் இல்லங்களுக்கு போன் செய்து விவரங்களைத் தெரிவித்து விட்டு, நல்லபடியாக பயணம் நடைபெற வேண்டும் என்று எல்லாம் வல்ல பசுபதிநாதரையும், அன்னை பராசக்தியையும் வேண்டிக்கொண்டு உறங்கச் சென்றோம். 

(பகிர்வுகள் தொடரும்)

அஷ்வின்ஜி.

4. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011


நேபாளப் பயணக் கட்டுரை.

பத்தர் பரசும் பசுபதிநாதம். 
இடுகை : நான்கு - பயண முன்னேற்பாடுகள்.

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 
(திருவாசகம் - மாணிக்கவாசகப் பெருமான்)


இரவில் ஒளிரும் அருள்மிகு பசுபதி நாதர் திருக்கோவில் 
(நன்றி: கூகிள் இமேஜஸ்)

எங்கள் அனைவருக்குமே நேபாளம் செல்வது முதல் முறை என்பதால் நேபாளப் பயணம் பற்றிய நிறைய ஐயங்கள் இருந்தன. 

திருக்கயிலைக்கு நேபாளம் வழியாக யாத்திரை சென்று வந்த திருவாளர்கள் கீதாசாம்பசிவம் தம்பதியினரை நேரில் சந்தித்து ஆலோசித்தேன். செப்டம்பர் மாதம் பதினான்கு தேதிகளில் நாங்கள் புறப்படுவதை கேட்ட கீதாஜி "அந்த சமயம் நேபாளத்தில் மழைக் காலமாய் இருக்குமே. சரியாக விசாரித்துத் தானே பயணம் செல்ல திட்டமிட்டீர்கள்?" என்று கேட்டார். செப்டம்பர் பதினைந்தில் இருந்து அக்டோபர் பதினைந்து வரை நல்ல பருவ நிலை நிலவும் சமயம் என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்னரே பயணத்துக்கு திட்டமிட்டிருப்பதை கூறினேன். கீதா-சாம்பசிவம்  தம்பதியர் எங்கள் பயணம் வெற்றி பெற ஆசி கூறி அனுப்பினார்கள்.

மேலும் விவரங்களைப் பெற கூகிளாரின் உதவியுடன் நேபாளம் பற்றிய செய்திகளை திரட்டினேன். எனது குழுவில் இருக்கும் திரு.மங்களேஸ்வர் இணையத்தில் இருந்து நிறைய செய்திகளை திரட்டித் தந்தார். 

எண்ணங்கள் தோறும நேபாளம் நிறைந்திருக்கநேபாளம் பற்றி திரு.அருசோ எழுதியுள்ள புத்தகத்தை மயிலை இராமகிருஷ்ணமடம் நூலகத்தில் இருந்து வாங்கி வந்து படித்தேன். ஏற்கனவே நேபாளம் பற்றி திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தனது கயிலை பயணக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்கள். மற்றும் எனது அலுவலக நண்பர் திரு சுதர்ஷன் பிரசாத் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நேபாள பயணம் சென்று வந்தவர் அவரும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கடந்த ஆண்டு வைஷ்நோதேவிக்கும், அமர்நாத்துக்கும் எங்களுடன் தனது சகோதர, சகோதரியுடன் பயணம் வந்த திரு.சுதர்ஷன் பிரசாத், தவிர்க்க முடியாத அலுவலகப் பணி காரணமாக எங்களுடன் இந்த முறை வர இயலவில்லை.

சுவாமி சித்பவானந்தாவின் ''திருக்கயிலை யாத்திரை'', மற்றும் சிங்கை கிருஷ்ணன் அவர்களின் நேபாளகயிலை யாத்திரை பற்றிய புத்தகங்களைப் படித்து நேபாளம் பற்றிய செய்திகளை மனதில் குறித்துக் கொண்டேன்.
  
(பகிர்வுகள் தொடரும்)

அஷ்வின்ஜி 

Wednesday, October 26, 2011

தீப ஒளி வாழ்த்துக்கள். இன்ப ஒளி பரவட்டும்.


இனிய இறையடியார்களுக்கு 

என் தீபாவளித் திருநாள் 

வாழ்த்துக்கள்.



உங்கள் வாழ்க்கையின் 
எண்ணக கோலங்கள் யாவும் 
வண்ணக் கோலங்களாக 
மிளிர சிவனருள் வேண்டுகிறேன். 

அன்பு ஒளி பரவட்டும்;
இன்பமெங்கும் நிலவட்டும்.

நன்மைஎன்றும் நிலைக்கட்டும்,
தீதெல்லாம் விலகட்டும்.

வாழி நலம் சூழ 
இறையருள் பொலிக.

Sunday, October 23, 2011

3. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011


நேபாளப் பயணம்: பசுபதிநாதரை தரிசித்தோம்.

இடுகை மூன்று.


சிவபாலன் (பசுபதிநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில்) 

திருச்சிற்றம்பலம்.
அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே
..
தாயுமானவரின் பராபரக்கண்ணி.

பசுபதிநாதர் அழைக்கிறார்.

நான் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்த சிவனடியார்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் (மார்ச் ஏப்ரல் மாதங்களில்) தொடர்ந்து சந்தித்து கயிலைப் பயணம் பற்றி பேசினேன். அவர்களுக்கு இந்த ஆண்டு கயிலைப் பயணம் செய்வதில் சில சிரமங்கள் இருந்தன. இந்த அன்பர்கள் குடும்பத்துடன் ஏற்கனவே சார்தாம் யாத்திரை (பத்ரிநாத், திருக்கேதாரம், கங்கோத்ரி, யமுநோத்ரி)  மற்றும் இந்தியாவில் வடக்குவடமேற்குவட கிழக்கு பகுதிகளில் உள்ள மிக பிரசித்தி பெற்ற சிவ/வைணவத் தலங்கள்சக்தி பீடங்களை கடந்த பல ஆண்டுகளாகத் தரிசித்தவர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு நேபாளம் செல்வதற்கான ஆயத்தங்களில் அவர்கள் ஈடுபட்டு இருந்தார்கள்.   

நான் சார்தாம் யாத்திரை இது வரை சென்றதில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஹரித்வார்ரிஷிகேசம் இரண்டு மூன்று முறை சென்ற அனுபவம் உண்டு. கடந்த ஆண்டு (2010ல்) அமர்நாத்-வைஷ்நோதேவி சென்று வந்த அனுபவம் உண்டு.

இந்த இறையடியார்கள் நேபாள யாத்திரை பற்றிய சிந்தனையில் இருந்ததால் இவர்களது சத்சங்கத்தில் இணைந்து கொண்டு பசுபதிநாதரை தரிசிக்க ஒரு வாய்ப்பினை அம்மையப்பனே எனக்குத் தந்திருப்பதாக உணர்ந்தேன்.

அவர்களது பயணத் திட்டத்தை அறிந்து கொண்டேன். என்னையும்  அவர்களுடன் இணைத்துக் கொள்ள தீர்மானித்தேன். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திர வந்த அன்பர்களிடம் நேபாளப் பயணம் பற்றித் தெரிவித்து அவர்களையும் எங்களது பயணத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்களோ, இந்த ஆண்டு பயணம் மேற்கொள்ள இயலாமல் இருப்பதை வருத்தத்துடன் என்னிடம் தெரிவித்து விட்டார்கள்.  பசுபதிநாதரை தரிசிக்க என்னையும் சேர்த்து பன்னிரண்டு பேர் பதிவு செய்து கொள்ள தயாரானார்கள்.

இதனைத் தொடர்ந்து நேபாள பயணத் திட்டத்தின் முதல் கட்டமாக செப்டம்பர் மாதப் பயணத்திற்கான எங்களது முன்பதிவுகளை ஜூலை மாதமே செய்தோம். 

        எங்களது பயணத் திட்டம் கீழ்க் காணும் வகையில் இருந்தது. 

  • 14-09-2011 அன்று சென்னையில் இருந்து ரப்திசாகர் (Raptisagar Express)எக்ஸ்ப்ரஸ் மூலம் கோரக்பூர்(Gorakhpur) செல்வதற்கான முன்பதிவு. 
  • 16-09-2011 அன்று மாலை கோரக்பூரை அடைதல். இரவு கோரக்பூரில் தங்குதல்.
  • 17-09-2011 அன்று காலை கோரக்பூரை விட்டு புறப்பட்டு பஸ் மூலம் சுனாவ்லியை அடைதல். (சுநாவ்லி இந்திய-நேபாளம் எல்லையில் இந்திய பகுதியில் அமைந்துள்ளது. கோரக்பூரில் இருந்து பஸ் மூலம் இந்த ஊருக்குச் செல்ல இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஆகும்)
  • பின்னர் இந்திய எல்லையை கடந்து நேபாள எல்லைக்குள் உள்ள பெலாஹியா என்னும் இடத்தை அடைதல். காத்மாண்டு செல்லும் பஸ்கள் (சிறு நடை தூரத்தில் பைரவா பஸ்/விமான நிலையம் உள்ளது) இங்கே கிடைக்கின்றன. அதன் பின்னர் அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் புறப்பட்டு காத்மாண்டு செல்ல. எட்டு மணி நேரப் பயணம் செய்யவேண்டும்.
  • 17-09-2011 அன்று இரவு காத்மாண்டுவில் தங்குதல்.
  • 18-09-2011: அன்று காலை காத்மாண்டுவில் பசுபதிநாதர் திருக்கோவில், புத்தநீல்கண்டா(ஜலநாராயணர்)புத்தநாத் (ஸ்வயம்புநாத்) மற்றும் குஹ்யேஸ்வரி திருக்கோவில்களை தரிசிப்பது.
  • இரவு காத்மாண்டுவில் தங்கி விட்டு பின்னர் அங்கிருந்து முக்திநாதம் (சாளக்ராமம்) செல்வது. முக்திநாதர் தரிசனம் பெற்ற பிறகு நேரம் கிடைத்தால் ஜனக்புரி (சீதாபிராட்டியாரின் ஜனனபூமி) செல்வதுபின்னர் லும்பினி (புத்தர் பிறந்த இடம்) செல்வது என பயணத் திட்டம் ஒன்றினை வகுத்துக் கொண்டோம். (எங்களது பயணத் திட்டங்கள் தேவைக்கு ஏற்ற படி மாற்றி அமைக்கக் கூடிய அளவுக்கு இருந்தன).
  • 22-02-02011 அன்று காலை கோரக் பூர் அடைதல்கோரக்னாதர் திருக்கோவிலை தரிசித்தல் அன்று இரவு தங்குதல்.
  • 23-09-2011 அன்று கோரக்பூரில் இருந்து காலை புறப்படும் ரப்திசாகர் விரைவு வண்டியில் பயணித்து 25-0-9-2011 அன்று நள்ளிரவு சென்னை அடைதல்.
மேற்கண்ட வகையில் எங்கள் பயணத் திட்டத்தை வடிவமைத்துக் கொண்ட பின்னர் பயணத்தை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களுடன் புறப்படுவதற்கான நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தோம். 

(பகிர்வுகள் தொடரும்)
--
   'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?