அமர்நாத் நினைவலைகள்.
கடந்த ஜூலை (2010) மாதம், நானும் என் நண்பர்களும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணோதேவி மற்றும் அமர்நாத் புனிதத் தளங்களுக்கு பயணம் சென்று இருந்தோம். பயண கட்டுரையை படிக்க விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்.
அறிவிப்பு:
கீழ் வரும் பதிவினைத் தொடர்ந்து பின்னர் என்னுடன் யாத்திரை வந்த நண்பர்களின் அனுபவக் கட்டுரைகள் வெளியாகவிருக்கின்றன.
சோட்டா அமர்நாத் அல்லது புத்த அமர்நாத்.
(இணைய வெளியில் படித்ததில் இருந்து இந்தச் செய்தியை வெளியிடுகிறேன். இந்தத் புனிதஸ்தலம் இருக்குமிடம் பாகிஸ்தான் எல்லையோர பகுதி என்பதினால் வெளி மாநில யாத்திரிகள் இங்கு பயணம் செல்ல தற்சமயம் அனுமதி கிடையாது)
காஷ்மீரில் மண்டி என்னும் கிராமம் பூஞ்ச் நகரிலிருந்து சுமார் பதினாறு மைல் தூரத்தில் இருக்கிறது. மண்டியில் இருந்து இரண்டு கி.மீ தூரத்தில் உள்ள ராஜ்புராமண்டி என்னும் ஊரில் அதன் அருகில் பாய்ந்தோடும் புல்சதா என்னும் சிற்றாற்றின் கிளை ஆறான லோரான் என்று அழைக்கப்படும் மற்றொரு சிற்றாற்றங்கரையில் புத்தா அமர்நாத் என்னும் சின்னஞ்சிறு கோயில் இருக்கிறது.
இப்போது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிற அமர்நாத் பனி லிங்கத்தை விட இந்த ஸ்தலம் பழமை வாய்ந்தது என்பதால் தான் இதற்கு புத்தா அமர்நாத் என்று பெயர் வழங்குகிறது. புத்தா என்றால் வயதான, மூத்த என்று பொருள். இந்த புத்தா அமர்நாத்தின் மூல விக்கிரகம் சுமார் நாலு அடி உயரமுள்ள வெள்ளை சலவைக்கல் மலை தான். அந்த மலைக்குத் தான் அபிஷேகம், ஆராதனைகள் எல்லாம் நடக்கின்றன..
இராவணனின் தாத்தா புல்சத்த மகரிஷி இந்த நதிக் கரையில் தவம் இருந்ததாக ஒரு கதை வழக்கில் இருக்கிறது. புகழ் பெற்ற இந்த புத்த அமர்நாத் கோவிலை கட்டியவர், மோதி மகாராஜா என்னும் இந்து சமயத்தை சார்ந்த மன்னர்.
இப்போது இந்த ஊரில் ஒரு இந்து கூட இல்லை என்பது வினோதமான செய்தி. இந்த கோவில் கட்டப் பட்ட சமயத்தில் இந்த ஊரில் ஒரு முஸ்லிம் கூட இல்லையாம். இப்போது இருப்பவர்கள் எல்லாம் நான்கு தலைமுறைக்கு முன்னர் இந்துக்களாக இருந்தவர்கள்தாம். ரக்ஷா பந்தன் தினத்தன்று பெருவாரியான மக்கள் இந்த கோவிலுக்கு வந்து பரமனின் அருளை வேண்டிச் செல்கிறார்கள்.
பாகிஸ்தானுக்கு வெகு அருகாமையில் இந்த இடம் இருப்பதினால் நம்மை போன்ற வெளிமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்புக் காரணங்கள் கருதி அனுமதி மறுக்கப்படுகிறது.
முன்பெல்லாம் எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து பெருவாரியான மக்கள் இந்தக் கோவிலுக்கு வருவதுண்டு என்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள்.






