Sunday, February 27, 2011

பாகம் மூன்று: பகுதி பத்து:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை பத்து: உருவாக்கியவனி(ளி)ன் தோலுரிச் செயலாக்கம்.

எங்களால் முடிந்த வேகத்தில் நடந்து ஒரு மேட்டில் ஏறி அதன் திட்டில் அமைந்திருந்த லங்கரில் (கொஞ்சம் பெரிய உணவிடம்) ஏதேனும் சாப்பிடலாம் என்று நினைத்து அங்கு சென்று சற்று அமர்ந்தோம். 

கொஞ்சம் தெரிந்த முகங்களாக இருக்கவே எழுந்து தேட தீடீரென்று என் மனைவி ப்ரசன்னமாகி ஒரு குழந்தையைப்போல என்னை கட்டிக்கொண்டு கண்கலங்கினார். அவர் மனோநிலை எனக்கு சரியாக புரிந்ததால் சற்று நேரம் பேசாமல் இருந்தேன். காலையில் தன்னுடன் பால்தாலிலிருந்து டோலியில் கிளம்பிய தன் சகோதரி மற்றும் சிலரை தவறவிட்டு விட்டதாய் மிகவும் வருத்தபட்டவரை சமாதானப்படுத்தினேன். எல்லோரும் இந்த பயணத்தில் ஒன்றாக பயணிக்க முடியாது என்பதை சென்னையில் என் இல்லத்தில், இரயில் பயணத்தில் பல சமயம் பேச்சினூடேயும், பால்தாலில் பேஸ் கேம்ப்பிலும் (அடிவார முகாம்) நான் சொன்னதை நினைவுறுத்தினேன். 


ஆனால் அந்த நினைவூட்டல் காலம் கடந்தது என்பதை அவர் நிலைமை எனக்கு உணர்த்தியது. அவரின் நிலைப்பாடு பெரும்பான்மையோருக்கு அதாவது வருங்காலத்தில் இது போன்ற யாத்திரையில் அல்லது பயணத்தில் ஈடுபட போகும் அன்பர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகும் என்பது என் தெரிபு. 

ஆம். மொழி தெரியாததால், அங்கு நிலவும் சீதோஷ்ணம் பழகாததால், தனியே இருக்க பழக்கப்படுத்திக் கொள்ளாததால், சார்பு நிலையே நிரந்தரமானதாக கொண்ட பலரது நிலை அது தான். சமவெளியில் எல்லாம் சரியாக இருக்கும் அல்லது நம் நிலைக்கு ஒப்புக்கொள்ளும் வகையில் இருக்கும் சூழ்நிலையில் ஏற்படும் பக்திக்கும் முழுமையான ஒப்படைப்பு உள்ள பக்திக்கும் உள்ள வேறுபாடே இது என்பது என் கணிப்பு. 

நான் பகிர்ந்து கொள்ள நினைப்பது இதுதான். துச்சாதனன் துகிலுரியும் போது ஏற்பட்ட திரெளபதியின் வேறுபட்ட நிலைப்பாட்டை இங்கு பொருத்திப் பார்க்க விழைகிறேன். 

ஆம். துச்சாதனன் முதலில் துரெளபதியின் வஸ்திரத்தை உறியும் போது அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு எதிரே தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கும் ஐவரில் ஒருவராவது தன்னை காப்பாற்ற மாட்டாரோவென நினைத்து பின் அது நடவாது என்று தெரிந்து தானே தன் பலம் கொண்டு தன் மானத்தைக் காக்க போராடி பின் அந்த தீய எண்ணம் கொண்ட துச்சாதனின் உடல் பலத்தில் தோற்றுப் போய் பின் நிலைமையின் அதிதீவிரத்தை கொஞ்சம் தாமதமாக உணர்ந்து "கண்ணா எனைக் காப்பாற்று" என இருகரத்தையும் தலைக்கு மேல் கூப்பி பரந்தாமனே அபயம் என்று குளமான கண்களை மூடி தியானித்தாள். 

பிறகு நடந்ததும் காப்பியம். ஆக திரெளபதியின் மாறுபடும் நிலைப்பாடு போலவே தான் பலரது பக்தி நிலையும் உள்ளது என்பதை அன்பர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். நான் என்கின்ற தோலை உரித்து உள்ளே உள்ள ஆன்மாவால் தன்னை வழிபட வைக்கும் கைலாய வாசனின் விளையாடலே இந்த பயணம் என்று கூற விழைகிறேன். 



தனிமையாக்கி, குளிரூட்டி, வலியூட்டி தன்னை உளமார நினைக்க வைத்து விட்டான் இந்த அமரநாதன். 

சற்று சமாதானமாகிய என் மனைவி சொன்ன ஒரு யுக்தி நன்றாகவே இருந்தது. அதாவது அங்கிருந்த எல்லா காஷ்மீரச் சகோதரர்களும் நமக்கு ஒரே மாதிரி முகமுடையவர்களாக தெரிந்ததென்னவோ உண்மை தான்.

ஆனால் அவரிடமிருந்த அடையாள அட்டையை குதிரையில் வருபவர்களாயிருந்தாலும் சரி அல்லது டோலியில் வருபவர்களாயிருந்தாலும் சரி அவர்களிடம் தந்து விடுகிறார்கள். அதைக் கொண்டு அவர்களில் நமக்கு உதவுபவர்களை (நம்முடன் வருபவர்களை) அடையாளம் கண்டு கொள்ளலாம். 

மற்றொரு யுக்தி என் மனைவி எனக்கு விளக்கியது. தன்னிடமுள்ள ஒரு மஞ்சள் நிற சால்வையை தன்னைத் தூக்கிக் கொண்டு வந்தவர்களில் ஒருவருக்கு அணிவித்து அந்த பெருங்கூட்டத்தில் அவர் குழுவை மிகச் சுலபமாக அடையாளம் கண்டு கொண்டு வந்திருக்கிறார் வழி நெடுக. 

இந்த பதிவை படிக்க நேரும் அன்பர்கள் பிற்காலத்தில் அமர்நாத் செல்லும் பாக்கியம் பெற்றால் இந்த ஒரு யுக்தியையும் பயன் படத்திக் கொள்வார்களாக. 

கணவனாவது, மனைவியாவது. உறவென்றொன்று உண்டென்றால் அது அவனுடன் மட்டுமே என்பது சிறிய அளவில் அங்கு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. 

ஆம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த டோலி நண்பர்கள். "ச்சலியே ஜீ" என்று என் மனைவியை அழைத்துக் கொண்டு அமரநாதனைக் காணச் செல்ல ஆயத்தமானார்கள். பின்னாளில் (எந்நாளில் அது ஏற்படும் என்பது தெரியாது என்றாலும்) ஏற்படப் போகும் பெரிய பிரிவுக்கு ஒரு சிறிய ஒத்திகையாகப் பட்டது எனக்கு. 

எதையும் தத்துவார்த்தமாக பார்கக பழகிக் கொண்டால் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் சற்று தொலைவில் நிறுத்திப் பார்க்கும் மனோபலம் வாய்க்கப் பெறுவோம் என்பது அடியேனின் தாழ்மையான அபிப்பிராயம்.


(கோவிந்த் மனோஹரின் மனோபலம் கூட்டும் அனுபவங்கள் தொடரும்)


நன்றி: பதிவுகளை தொடர்ந்து அனுப்பி வரும் நண்பர் கோவிந்த் மனோஹருக்கும்,  தொடர்ந்து படித்து பின்னூட்டி வரும் அன்பர்களுக்கும் என் இதய நன்றி.
-அஷ்வின்ஜி.

4 comments:

நிகழ்காலத்தில்... said...

நீங்கள் எழுதும் விதத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை!!!!

நன்றி கோவிந்த் மனோஹர்

இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த அஷ்விஜிக்கும் நன்றிகள் பல

Ashwinji said...

@நிகழ் காலத்தில்...

வணக்கம் அன்பரே!
தங்களின் பாராட்டுக்கும் அன்புக்கும் என் இதய நன்றி.

அஷ்வின்ஜி.

geethasmbsvm6 said...

படிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

Ashwinji said...

உங்கள் பாணியில் தாங்க்கீஸ் கீதாஜீ. :)))))