Friday, March 5, 2010

நம்பிக்கைக் கதைகள் - கனி தரும் மரம்...


ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான். மிகச் சிறிய பையன். விளையாடத் துணை இல்லாமல் ஏங்கிக் கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு அழகிய கானகம். அங்கே ஒரு கனி தரும் மரம் இருந்தது. அவன் அங்கே சென்றான். மரத்தில் ஏறி விளையாடினான். பழங்களைப் பறித்து உண்டான். மரத்தின் கீழே இளைப்பாறினான். மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த அவனைப் பார்த்து அந்த மரமும் மனம் மகிழ்ந்தது. அவன் அடிக்கடி வருவதும் விளையாடுவதும் இருவருக்கும் உவகை தரும் ஒரு நிகழ்வாக இருந்தது. மரம் அவன் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்திருக்கும். தன் கனிகளை அவன் உண்பது அதற்கு சொல்லொணா மகிழ்வு தந்தது. அவன் மரத்தின் மேல் ஏறி விளையாடும் போது மரமும் வாகாக தன் கிளைகளைத் தாழ்த்திக் கொடுக்கும். இருவரும் நண்பர்கள் ஆனார்கள். ஒருநாள் பார்க்க வராவிட்டாலும் இருவருக்கும் ஒரு ஏக்கம் பிறக்க ஆரம்பித்து விட்டது. நாளடைவில் மரமும் அந்த சிறுவனும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதற்குப் பின்னர் சில மாதங்களாக அவன் வராதது கண்டு மரம் வருத்தமுற்றது. தன் கிளைகளை சுழற்றி சுழற்றி அவன் வருகையை எதிர் பார்த்து நின்றது. அதற்கு வருத்தமாகவும் இருந்தது. சில நாட்கள் கழித்து அந்த சிறுவன் வந்தான். முன்பை விட வளர்ந்திருந்தான். ''வா... வா. வா. உனக்காக எத்தனை நாட்கள் காத்திருந்தேன் தெரியுமா. வா. வந்து என் மேல் ஏறி விளையாடு.கனிகளை உண்டு மகிழு!'' என்றது மரம் ஆவலுடன்.

பையன் சொன்னான், '' எனக்கு அதில் விருப்பம் இல்லை மரமே. நான் பெரியவனா வளர்ந்துட்டேன். ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சுட்டேன். எனக்கு விளையாட பொம்மைகள் தான் வேண்டும். ஆனால் அவற்றை வாங்க என்னிடம் பணம் இல்லையே.' என்றான் வருத்தத்துடன். 

மரம் அவனது வருத்தத்தை கண்டு தானும் வருந்தியது. மரம் அவனிடம் சொன்னது: ''அதனால் என்ன, சிறுவனே, என் கனிகளை கொண்டு போய் சந்தையில் விற்று விடு. கிடைக்கும் பணத்தில் உனக்கு தேவையான பொம்மைகளை வாங்கி விளையாடு'', என்றது. பையனும் மரம் சொல்லியபடியே செய்தான். கிடைத்த பணத்தில் பொம்மைகள் வாங்கி விளையாடினான். மறுபடியும் நீண்ட நாட்களாக பையன் வராததைக் கண்ட மரம் சோகமாய் காத்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவன் வரும் வழி நோக்கிக் காத்திருந்தது. 

மிக நீண்ட நாட்கள் கழித்து அவன் வந்தான். மரத்துக்கு ஏக குஷி. வா..  வா. என்ன ஆயிற்று? ஏன் முன்னைப் போல நீ வருவதில்லை. என்னுடன் விளையாடுவதில்லை? என்று ஆர்வத்துடன் கேட்டது மரம். பையன் சொன்னான்: ''மரமே நீ கொஞ்சம் கூட மாறவே இல்லையா? நான் இப்போ படிப்பு முடிச்சு பட்டதாரி ஆயிட்டேன். மரத்தில் ஏறி விளையாட நான் என்ன பச்சைக் குழந்தையா? எனக்கு என் குடும்பத்தை காப்பாத்த வேண்டிய பொறுப்பு இருக்கு. வீடு கட்ட கொஞ்சம் மரம் தேவை. என்ன செய்வது என்று புரியவில்லை'' என்றான் வருத்தத்துடன். அவனது வருத்தத்தைக் கண்ட மரம், ''நீ ஏன் வருத்தப் படுகிறாய்? என் கிளைகளில் கொஞ்சம் வெட்டிக்கோ. அவ்வளவுதானே? இதுக்கு போய் ஏன் இந்த வருத்தம்?'' என்று கேட்டது தன் கிளைகளை அசைத்தபடி. அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தின் எல்லாக் கிளைகளையும் வெட்டிக் கொண்டு சென்றான்.

வழக்கப்படி அவன் வராமல் போகவும், மரம் மிகவும் சோகமாக அவன் வரவை எதிர் நோக்கி காத்திருந்தது. பல வருடங்கள் உருண்டோடின. அவன் வந்தான். அவனைப் பார்த்த மரம், மகிழ்ச்சி அடைந்தது. '' வா. வா. இப்பத்தான் வழி தெரிந்ததா? எப்படி இருக்கே? ஏன் வருத்தமா இருக்கே? சொல்லு என்ன வேணும் உனக்கு? கேளு, என்னால முடிஞ்சதை செய்றேன். நீ வருந்துவதை பாக்க எனக்கு சகிக்கலை'' என்றது.

அதைக் கேட்ட அவனும், ''மரமே,  எனக்கு படகு ஒண்ணு செஞ்சு ஓட்டணும் போல ஆசையா இருக்கு. அதுக்கு மரம் வேணுமே! நான் எங்கே போவேன் அவ்வளவு பணத்துக்கு!.'' என்றான் வருத்தத்துடன். மரம் உடனே, அவ்வளோ தானே. என்னை வெட்டிக்கோ, என்னை படகா செஞ்சிக்கோ. சந்தோஷமா இரு. உன் மகிழ்ச்சிதான். என் மகிழ்ச்சி'' என்றது.

அவன் மரத்தை அடியோடு வெட்டிக் கொண்டு மகிழ்ச்சியோடு சென்றான்.  தன் நண்பனுக்கு இந்த அளவிலாவது உதவ முடிந்ததே என்று மரத்துக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி.  மரத்தின் அடிக்கட்டை மட்டும் வேர்களுடன் மிச்சம் இருந்தது. பல மாதங்கள் கழித்து மீண்டும் அவன் வந்தான். மிகவும் சோர்வாக இருந்தான். தளர்ந்து போய் இருந்தான் அவன். மரம் அவனைப் பார்த்து கேட்டது, ''ஏன் என்ன இவ்வளவு சோர்வா இருக்கே? உனக்கு வேண்டிய அளவுக்கு பழம் தர கூட இயலாத நிலையில் நான் இருக்கிறேனே'' என்றது வருத்தத்துடன். அவன் சொன்னான்: ''ஏ மரமே. கவலைப் படாதே. பழம் தின்னும் நிலையில் நான் இல்லை. என் எல்லாப் பற்களும் விழுந்து விட்டன'' என்றான். ''நீ ஏறி விளையாட எனக்கு கிளைகளும் , மரமும் இல்லையே, நான் உனக்கு எப்படி உதவுவேன்?'', என்று வருந்தியது மரம். அவனோ, ''எனக்கு அதற்கெல்லாம் தெம்பு இல்லை மரமே. எனக்கு ஓய்வு தான் தேவை'' என்றான். 

மரம் சொன்னது: ஆஹா, அவ்வளவு தானே, வா என் கட்டை மேல் அமர்ந்து கொள், கொஞ்சம் வேர்கள் உள்ளன அல்லவா அவற்றை கூட நீ கால் வைக்க பயன் படுத்திக் கொள்ளலாம். ஏதோ இந்த மட்டிலாவது என்னால் உனக்கு உதவ முடிந்ததே'' என்று, மகிழ்வுடன் கூறியது அந்த மரத்தின் அடிப்பகுதி. அவன் அதன் மேல் அமர்ந்து கொண்டான். ஓய்வெடுத்தான். மரத்துக்கு ஏகப் பட்ட மகிழ்ச்சி. இந்த அளவிற்காவது அவனுக்கு உதவ முடிந்ததே என்று.

நான் கற்ற பாடம்: நம் ஒவ்வொருவருக்கும் பிரதி பலனை எதிர் பாராமல் தன்னையே வருத்திக் கொண்டு உதவும் மரங்கள் இருக்கின்றன. அம்மா, அப்பா, நண்பர்கள், ஆசிரியர்கள் என்று. நாம் அவர்களிடம் இருந்து எவ்வளவோ பெற்றுக் கொண்டிருக்கிறோம். பெற்றுக் கொண்டே இருக்கிறோம். திரும்ப எதை தந்திருக்கிறோம்? அவர்கள் வயதான காலத்தில் அவர்களுக்குக் குறைந்த பட்சம் நம் அன்பையாவது தந்திருக்கிறோமா? சமூகத்திற்கு நாம் நிறைய கடன்பட்டிருக்கிறோம். பெற்றதில் மகிழ்கின்ற நாம் தந்தவரை நன்றி பாராட்டுகிறோமா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலோரது பதிலாய் இருக்கும்.
 
''மரந்தான்.. மரந்தான்... 
ஏனோ அதனை மனிதன் 
மறந்தான்.. மறந்தான்.''

குருவடி சரணம்...
திருவடி சரணம்..


--
அன்பே சிவம்
அஷ்வின்ஜி
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com
-----------------------------------------------------
ப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
------------------------------------------------------