Sunday, February 7, 2010

திருவடி சரணம்.. குருவடி சரணம்...


பல ஆண்டுகள் மலை ஏறும் பயிற்சியை மேற்கொண்டு இப்போது மிக உயரமான இந்த சிகரத்தினை வெற்றி கொள்ள அவன் வந்திருக்கிறான். இந்த வெற்றி தனக்கு மட்டுமே வேண்டும் என்பதினால் குழுவோடு வராமல் தனியே அவன் வந்திருக்கிறான். தனிமனித சாதனையாளர் என்ற புகழ் தனக்கு வேண்டும் என்ற சிந்தனை ஒன்றே அவனை ஆக்கிரமித்திருந்தது. மலை ஏறத் துவங்கி இரவும் கவிழ்ந்து விட்டது. தன முயற்சியில் மனம் தளராமல் மலை ஏறுவதை தொடர்ந்து கொண்டிருந்தான் அவன். மையிருட்டில் எதிரில் இருப்பது எதுவும் தெரியவில்லை.  இரவுப் பூச்சிகளின் சப்தங்கள் ஒன்று தான் அவனுக்கு பேச்சுத் துணை.  

நாளை பத்திரிகைகளில் அவனை பற்றிய செய்திகள் வரும். தொலைக் காட்சிகள், ஜனாதிபதி, பிரதம மந்திரி, கவர்னர்,.முதல் மந்திரி எல்லோரும் பாராட்டுவார்கள். நினைக்கவே பெருமிதமாய் இருந்தது அவனுக்கு. 

மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா, உறவினர்கள் எல்லோரும் சுற்றி நின்று பாராட்டுவார்கள்.

வானத்திலிருந்த நிலவும், நட்சத்திரங்களும் தந்த ஒளி மட்டுமே அவனுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தது. சிகரத்தினை இன்னும் கொஞ்சம் நேரத்தில் எட்டிவிடலாம்.  

அப்போது பெரும் மேகக்குவியல்கள் நிலவை மறைக்க ஆரம்பித்தன. கண்ணிமைக்கும் பொழுதில் கால் தவறியதா என்று கூட எண்ணிப்பார்க்கும் முன்னதாக அவன் மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தான். கீழே கீழே விழுந்து கொண்டிருந்த போது குளிர் காற்று அவனை வேகமாய் உரசியது. புவி ஈர்ப்பு அவனை வேகமாக கீழே உறிஞ்சிக் கொண்டிருந்தது. 

மனதில் பயம் கவ்விக் கொள்ள, சாதனை எண்ணங்களோடு மலையில் ஏறியவன் கீழே விழுந்து கொண்டிருந்தான். வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் அவன் மனதில் ஃப்ளாஷ்பேக் போல ஓடின. தான் வாழ்ந்த வாழ்க்கையின் சந்தோஷமான கணங்கள், மோசமான நிகழ்வுகள் எல்லாம் வேகமாக அவனுக்குள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. 

எப்போது இறப்பு அவனுக்கு நிகழப் போகிறது? 

இன்னும் எத்தனை நொடிகள் நாம் உயிருடன் இருக்கப் போகிறோம்? 

புரியாத நிலையில் அவன் விழுந்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு நிறுத்தம். 

அவன் இடுப்பில் பாதுகாப்புக்காக கட்டியிருந்த கயிறு அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தான். 

அவன் இப்போது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான். கயிற்றின் இறுக்கம் தந்த வலி அவன் நினைவுக்கு வந்தது. 

அட, நான் இன்னும் சாகவில்லையா? சுற்றிலும் அந்தகாரம் நிறைந்திருக்க அவன் வேதனையுடன் கூக்குரலிட்டான்: ''கடவுளே என்னைக் காப்பாற்று.''

வானத்திலிருந்து ஒரு குரல் அவனுக்குக் கேட்டது: ''நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்?''

அவன் மீண்டும் கத்தினான்: ''கடவுளே என்னைக் காப்பாற்று''.

''நான் உன்னைக் காப்பாற்ற முடியும் என்று உண்மையிலேயே நீ நினைக்கிறாயா?'', வானத்தின் குரல் அவனைக் கேட்டது.

''ஆமாம் கடவுளே உன்னால் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும்'', தீனமான குரலில் அவன் சொன்னான்.

''உன் இடுப்பில் கட்டியிருக்கும் கயிறை கத்தியால் வெட்டி விடு. நீ பிழைத்துக் கொள்வாய்'' என்றது வானின் குரல்.

சற்று நேரம் மௌனம் நிலவியது. பிறகு ஒரு தீர்மானத்துடன் அவன் இடுப்புக் கயிற்றை தனது சக்தியெல்லாம் ஒன்று திரட்டி இறுகப் பற்றிக் கொண்டான். 

----

காலையில் வந்த மீட்புக் குழுவினர் மலை ஏறுபவனின் உயிரற்ற உடல் குளிரில் விரைத்துப் போய் கயிற்றில் தொங்கி கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவன் கைகள் அப்போது கூட கயிறை இறுகப் பற்றிக் கொண்டிருந்தன. அவனது உடையில் கத்தி இருந்தும் கூட அவனது உடல் சம தரையிலிருந்து பத்து அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தததை அவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். .

நான் கற்ற பாடம்: வாழ்க்கை ஒரு மலை ஏறும் முயற்சி போன்றது. தடுக்கல்கள், விழல்கள் எல்லாம் சகஜம் தான். இறைவனை நாம் மனமுருகிக் கேட்கும் போது அவன் நமக்குத் தருகிறான். நாம் தான் அதனை இருகரம் நீட்டிப் பெற்றுக்  கொள்ளத் தவறி விடுகிறோம். நம்பிக்கையைப் பற்றி கொண்டிருப்பவனை கடவுள் கைவிடுவதில்லை. கயிறை விட்டு விடுங்கள். இறைவனை இருகரங்களாலும் கெட்டியாக பற்றிக் கொள்ளுங்கள்.

ஆன்ம சாதனை செய்யும் போது கூட இறைவனின் திருவடிகளை பற்றிக் கொள்ளாமல் தன்னையே பற்றிக் கொள்பவர்களின் நிலை கூட கதையின் நாயகன் போலத் தான் ஆகி விடுகிறது.

எல்லாவற்றிக்கும் காரணமான பரம் பொருளுக்கும், ஆசிகள் தந்த ஆன்மீகப் பெரியவர்களுக்கும், இதனை என்னை எழுதத் தூண்டிய நம்பிக்கை ராமாவுக்கும் நன்றி.

--
அன்பே சிவம்
அஷ்வின்ஜி
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com
-----------------------------------------------------
ப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
------------------------------------------------------