Sunday, November 8, 2009

காஞ்சி மகாப் பெரியவாளின் அமுதமொழிகள் - 3


41. பிக்ஷாடனமூர்த்தி அதோமுகமாக இருண்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்கும்படியான முத்திரையைச் சின்முத்திரை என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். பிக்ஷாடன மூர்த்தியின் ஒரு கையில் இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு ஒரு குட்டிமான் நிற்கும். இவர் கையை வைத்துக் கொண்டிருக்கும்படியான முத்திரையை அது பார்த்துக் கொண்டு நிற்கிறாற்போல இருக்கும். ‘இதோ உனக்கு ஆகாரம் இருக்கிறது பார்’ என்று ஸ்வாமி சொல்வது போல் அந்த இரண்டு விரலையும் அதனிடம் காட்டிக் கொண்டிருப்பது போல இருக்கும். ஒரு புல்லை அதற்குக் காட்டுகிற மாதிரி, ‘உனக்கு ஒரு வஸ்து இருக்கிறது’ என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. இப்படி அனேகம் மூர்த்திகள்.
42. பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான ஒரு பெயர் அது. சகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேகத்தில் உயிர்போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. அதை வாக்கினால் சொல்ல வேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாகப் பிறந்தவன் சொல்ல வேண்டும். ஊமையாக இல்லாத எவனும் சொல்லலாம். அதைச் சொல்லுவதற்காகத்தான் நாக்கு இருக்கிறது. மனிதன் அதைச் செய்யாவிட்டால் ‘நாக்கினால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை. இவனுக்கு நாக்கு கொடுத்தது பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் திரும்பி வாங்கிவிடுவான். ஆகவே அதை எல்லோரும் சொல்லியாக வேண்டும். அதை ஒரு தரம் சொன்னால் போதும். வேறொரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே அது பாபத்தைப் போக்கிவிடும். (‘சிவ’ என்ற நாமாவே அது).
43. பரமேச்வரனை நாம் நேரில் பார்த்து நமஸ்காரம் பண்ண வேண்டாம். அவருடைய நாமாவே போதும். நமக்கு நன்றாகத் தெரிந்தது அது. நம்முடைய மதத்தில் பாப பரிகாரத்துக்கு சுலபமான மார்க்கம் இருப்பதாகச் சொன்னேன். அது இந்த ஸ்மரணந்தான். ப்ரதோஷ காலத்தில் இந்த நாமாவைச் சொன்னால் போதும். பெரியவர்கள் - சிஷ்டர்கள் சாயங்காலத்தில் இதைச் சொல்லுவார்கள். அப்பேர்ப்பட்ட பரமேச்வரன் சகல வேத சாஸ்த்திரங்களின் தாத்பர்யமாகிற ஓங்கார ஸ்வரூபமாக இருக்கிறார். ஓங்காரந் தான் எல்லாத் தத்துவங்களுக்கும் முடிவானது.
44. நேற்று ஒரு வைஷ்ணவர் குழந்தையோடும் தாயாரோடும் இங்கே வந்திருந்தார். குழந்தையைப் பார்த்து ‘உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்’ என்று அவர் சொன்னார். உம்மாச்சி என்றால் ஸ்வாமி என்பது அர்த்தம். குழந்தைகளின் பரம்பரையிலே சில வார்த்தைகள் வழங்கி வருகின்றன. அந்த வார்த்தைகள் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்கள் வார்த்தை மாறும். குழந்தைகள் வார்த்தைகள் மாறா. உம்மாச்சி என்ற வார்த்தையும் குழந்தைகள் பரம்பரையில் வந்த பழைய வார்த்தை - உம்மாச்சி என்பது யாரைக் குறிக்கிறது?
ஒரு நாள் மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே ஒருவரை ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். அங்கே உள்ள கோயில் ஸ்ரீபாதந்தாங்கிகள் வாத்திமப் பிராமணர்கள். அவர்களில் திருநல்லமென்னும் கோனேரி ராஜபுரத்திலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேச்வரர் என்பது. அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருந்த உமாமகேச்வரையர் என்று ஒருவர் அங்கே இருந்தார். அவரைத் தான் ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். ஆகவே உமாமகேச்வரர் என்பது ‘உம்மாச்சு’ என்றாயிற்று என்று தெரிகிறது. அதுவே தான் உம்மாச்சி என்றும் ஆயிற்று. ஆகையால் குழந்தை பாஷையிலிருந்து அவர்களுடைய ஸ்வாமி உமாமகேச்வரர் என்பது தெரிந்தது. அந்த ஸ்வாமி அவர்களுக்கு மாறவில்லை.
குழந்தைகளுடைய எண்ணப்படி பழைய காலத்திலிருந்து ஸ்வாமியாக எண்ணப்பட்டு வந்தவர் உமாமகேச்வரர் என்பது தெரிகிறது. குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தை தான் தெய்வம். அவர்களிடத்தில் காமக் குரோதங்கள் இல்லை. ‘குழந்தையாக இரு’ என்று உபநிஷத் சொல்லுகிறது. அதற்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. அவைகளெல்லாம் இல்லாதபோது வருவதுதான் உபநிஷத், உபநிஷத்தும் குழந்தையினுடைய வார்த்தையும் ஒன்றுதான். இந்த இரண்டும் பரமேச்வரரைச் சொல்லுகின்றன. பாகவதமும் அப்படியே சொல்லுகிறது. ஆகையால் நாம் எல்லோரும் சிவத்தியானம் செய்ய வேண்டும். சிவநாமோச்சாரணம் செய்ய வேண்டும். நல்ல கதியை அடைவதற்கு சுலபமான வழி அதுதான்.
45. சிவன் கோயில்களில் கர்ப்ப க்ருஹத்தில் உள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்கிறோம். எந்தக் கோயிலிலும் மஹாலிங்கத்திற்குக் கபாலீச்வரர் என்றோ வன்மீகநாதர் என்றோ பல பெயர்கள் உண்டு. ஆனால் ஒரு மஹாலிங்கத்துக்கு மாத்திரம் மஹாலிங்கம் என்றே பெயர். அந்த மஹாலிங்கம் மத்தியார்ஜுனத்தில் இருக்கிறது. மத்தியார்ஜுனம் என்பது திருவிடைமருதூர். அங்குள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்று விசேஷமாகச் சொல்லுகிறோம். காரணம் சோழதேசமே ஒரு கோயிலாக இருக்கிறது. “சிவ: சோளே” என்று சொல்வதுண்டு. சைவத்திற்குச் சோழதேசம் பிரசித்தம் என்பது அதன் அர்த்தம்.
46. எந்தச் சிவன் கோயிலிலும் கன்னி மூலையில் விக்நேச்வரரும், மேற்கில் சுப்பிரமணியரும், வடக்கில் சண்டேச்வரரும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியும், அக்கினி மூலையில் சோமாஸ்கந்தரும், ஈசானததில் நடராஜரும் இருப்பார்கள். மத்தியார்ஜுனத்திற்கு நேர்மேற்கில் பத்துமைல் தூரத்திலுள்ள ஸ்வாமிமலை சுப்பிரமணிய க்ஷேத்திரம். அதற்குச் சிறிது தெற்கில் கன்னி மூலையிலுள்ள திருவலஞ்சுழிக் கோயில் திருவிடைமருதூர் மஹாலிங்கத்துக்கு விக்நேச்வரர் சந்நிதி. திருவிடைமருதூருக்குப் பத்துமைல் தெற்கில் ஆலங்குடி என்ற ஊர் இருக்கிறது. அது தக்ஷிணாமூர்த்தி க்ஷேத்திரம். இடைமருதுக்கு நேர் வடக்கிலுள்ள திருச்சேய்ஞலூர் என்பது சண்டேச்வரர் கோயில். திருவிடைமருதூருக்கு நேர் கிழக்கிலுள்ளது திருவாவடுதுறை. அது நந்திகேசுவரர் சந்நிதி. திருவாரூரில் சோமாஸ்கந்தர், தில்லையில் நடராஜர், சீர்காழியில் பைரவர். இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக இருக்கிறது.
47. ஸ்வாமி இருக்கிறாரா? இருந்தால் அவர் எப்படி இருக்கிறார்? என்ன பண்ணுகிறார்? என்ற கேள்விக்குப் பதிலாகக் கண்ணன் கீதையில் அர்ஜுனனுக்கு உன்ன உபதேசம் பண்ணுகிறார் என்று கொஞ்சம் பார்ப்போம். “அப்பா, ஈச்வரன் தான் ஒவ்வொருத்தருடைய இருதயத்திற்குள்ளும் இருந்து அவர்களை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான்” என்று சொல்கிறார். நீங்கள் பொம்மலாட்டம் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உள்ளே ஒருத்தன் இருந்துகொண்டு பொம்மைகளை உள்ளேயிருந்தே அனேகம் கயிறுகளைக் கட்டிக்கொண்டு அவற்றை இழுப்பதன் மூலம் ஆடவைப்பான். அந்தப் பொம்மைகள்போல் இருக்கிற தேகத்தையுடைய எல்லாப் பிராணிகளையும் உள்ளேயிருந்து ஒருத்தன் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஆட்டுகிறதனால் தான் இவை ஆடுகின்றன. அந்த ஈச்வரன் தான் எல்லாப் பிராணிகளுடைய ஹ்ருத்தேசத்திலும் இருக்கிறான் என்று கண்ணபிரான் உபதேசம் செய்கிறார்.


 - ஹர ஹர மஹாதேவா -

அருள்மொழி அமுதம் முற்றிற்று
நன்றி: சைவம் டாட் ஆர்க்