Sunday, November 8, 2009

காஞ்சி மகாப் பெரியவாளின் அமுத மொழிகள் -2


17. சர்வஜகத்தும் பரமேச்வரனுடைய சரீரம். அதற்கு அப்படியே கவசம் மாதிரி இருப்பது அம்பிகை சரீரம். அப்படி இருக்கும்படியான நிலையில் பஞ்சபூதங்களுக்கும் மேலே மனசு என்று ஒன்று இருக்கிறதே அதுவும் நீதான். ஆகாசமும் நீதான். அக்னியும் காற்றும் ஜலமும் பூமியும் நீதான். நீயே எல்லா ஸ்வரூபமாகவும் ஆகியிருக்கிறாய் கொஞ்சம் கொஞ்சம் எங்களிடத்திலிருக்கும்படியான ஞானம், ஆனந்தம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக சிதானந்த ஸ்வரூபமாக இருப்பவளும் நீதான். சமஸ்த ப்ரபஞ்சமும் உன்பரிணாமத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. சிவன் சரீரி, நீ அவனுக்குச் சரீரம், சிவயுவதி பாவம் உங்கள் இரண்டு பேரிடத்திலும் இருக்கிறது. இப்படி ஆசார்யாள் சௌந்தர்ய லஹரியில் சொல்லியிருக்கிறார்கள்.
18. தொடர்ச்சியாக வந்த தாரையை நாம் அறுத்துவிடக் கூடாது. ப்ராணாயாமத்தோடு சித்த ஏகாக்ரத்தோடு மந்த்ரலோப மில்லாமல் பரமேச்வர அர்ப்பணம் பண்ணி எல்லாவற்றையும் கர்மானுஷ்டானங்கள் பண்ணவேண்டும். பக்திச்ரத்தையோடு கர்மகலாபத்தோடு பண்ண வேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
19. காயத்ரி என்னும் வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம். கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பதாகும். யார் தன்னைப் பயபக்தியுடனும் ப்ரேமையுடனும்த உச்சாரணம் செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும்.
20. ப்ரதோஷ காலத்தில் எல்லோரும் சிவஸ்மரணம் பண்ண வேண்டும். மனதினாலும் வாக்கினாலும் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்களைத் தியானித்துச் சொல்ல வேண்டும். நித்யம் சந்த்யாகாலம் ப்ரதோஷ காலமாகும். த்ரயோதசி சந்த்யா காலத்தில் இருக்கிறது மஹாபிரதோஷ காலமாகும். நித்யமும் சாயங்காலத்தில் ஐந்து நிமிஷமாவது சிவ ஸ்மரணை பண்ணிக்கொண்டு வர எல்லோரும் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். ஆயுள் பர்யந்தம் செய்வதாக சங்கல்பம் பண்ணிக் கொண்டு மனதினால் ஸ்மரணம் பண்ணிக்கொண்டு வாக்கினால் சிவநாமாவைச் சொல்ல வேண்டும்.
21. உஷ்ணத்தினால் உருக்கப்பட்ட நெய்யை நிறமற்றதாகக் காண்கிறோம். அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தையடைகிறது. ஈசனை உருவமற்றவர், அரூபி எனச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் பக்தர்களின் உள்ளத்தில் ஈசன்பால் அன்பு பரிபூரணமாக விளங்கும் பொழுது அந்தக் குளிர்ந்த நிலையில் உருவம் இல்லாத கடவுளும் அவர்களது பக்திக்குக் கட்டுண்டு அவர்களை உய்விக்க ஓர் உருவத்தை யடைகிறார்.
22. ஓரிடத்தில் ஆபரணம் எதுவுமின்றி இயற்கை எழிலுடன் ஈசன் பிக்ஷாண்டார் மூர்த்தியாகத் திருக்கோலங் கொள்ளுகிறார். மற்றொரு புறம் அழகே உருக்கொண்ட சுந்தரேச்வரராக அவர் காட்சியளிக்கிறார். அதே கடவுள் பயமுள்ளவர்களுக்குப் பயத்தைப் போக்கி அபயத்தை அளிக்கும் பைரவ மூர்த்தியாகத் தோன்றுகிறார். வீரத்தைக் காண்பிக்கும் நிலையில் அவரே வீரபத்திரராகவும் காட்சியளிக்கிறார். தேவர்கள் விரும்பிய ஆனந்தத்தைக் கொடுக்க சிற்சபையில் அந்த ஈசனே நடனமாடுகிறார். எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஞானத்தைக் கொடுக்கும் தெய்வமாக தக்ஷிணாமூர்த்தி வடிவத்துடன் அமர்ந்து மௌனத்தினால் சனகாதி முனிவர்களுக்கு அவரே உபதேசம் அருள்கிறார். இவைகளெல்லாம் பரமசிவனின் திருக்கோலங்கள்.
23. சுவாமி எங்கும் இருக்கிறார். அவரை ஒரு கல்லில் வைப்பானேன் என்று கேட்கலாம். எங்கும் அவர் இருப்பதாகச் சொல்லுகிறோமாயினும் எங்கும் அவர் இருக்கின்றார் என்ற நினைவு மனதில் இல்லை. சுவாமி எங்கும் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்துவிடின் பொய்சொலுவானா? கெட்ட காரியம் செய்வானா? எங்கும் அவர் இருப்பது உண்மையே, அவர் இருப்பது மாத்திரம் நமக்குப் போதாது. அவருடைய அருளைப்பெற வேண்டும்.
24. சூர்ய கிரணம் இருக்கிறது. ஒவ்வொரு கிரணமும் நெருப்பே. ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் அதில் தீப்பற்றிக் கொள்கிறது. பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது. அப்படியே எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய ஆலயம் அவசியமாக இருக்கிறது.
25. கோடிகோடி மக்கள் வீணாகப்போனாலும் ஒருவன் பூர்ணத்வம் அடைந்து விட்டால் அதுதான் நம்முடைய மதத்தின் ப்ரயோஜனம். அவன் ஒருவன் அனுக்ரஹகத்தாலேயே உலகம் க்ஷேமமடையும். அப்படிப்பட்ட ஒருவன் உண்டாவதற்காகத்தான் நாம் பிரசாரங்களைச் செய்கிறோம்.
26. உலகத்தில் பாவம் பண்ணாமல் இருக்கிறவன் யாராவது உண்டா என்றால் குழந்தை அல்லது பைத்தியக்காரன்தான். ஞானிகளின் உயர்ந்த நிலைக்கு உதாரணம் ‘பாலோன்மத்தவத்’ என்று சொல்லுவார்கள். பாலன் என்றால் குழந்தை. உன்மத்தன் என்றால் பைத்தியம். உன்மாதம் என்றால் தலைக்கு மேலே ஏறிப்போகிற பித்தம். உன்மாதத்தை உடையவன் உன்மத்தன். ஈசுவரனுக்கு உன்மத்தசேகரன் என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ. சம்ஸ்க்ருதத்தில் ஊமத்தைக்கு உன்மத்தம் என்று பெயர். ஊமத்தம் பூவை அவன் தரித்துக் கொண்டிருக்கிறான். அதில் சிவனுக்கு அதிகப் பிரியம். உன்மத்தசேகரன் என்பதற்கு இரண்டாவது அர்த்தம் பைத்தியத்துக்குள் தலைவன் என்பது.
27. பரமசிவனுக்கு உரிய ஐந்து அடையாளங்களில் பஸ்மமாகிய விபூதி ஒன்று; அவனுக்குப் பிரியமான மற்றோர் அடையாளம் ருத்ராக்ஷம். வில்வம் மற்றொன்று. பஸ்மம் சத்ய ஸ்வரூபமானது. அதை சாக்ஷாத் பரமசிவனுடைய ஸ்வரூபமே என்று சொல்லவேண்டும். ப்ரபஞ்சமெல்லாம் நசித்தாலும் தான் அழியாமல் இருப்பவன் பரமசிவன். உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் எரிந்துபோனால் பஸ்பமாகி விடுகிறது. அதை எரித்தால் அது அழிவதில்லை. சிவ ஸ்வரூபமும் அத்தகையதே.
28. ருத்ராக்ஷத்தின் பெருமை மிக அதிகம். ருத்ராக்ஷத்தைச் சிவபெருமானுடைய அடையாளமாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ருத்ரனுடைய நேத்திரம் அது. அதைத் தமிழில் ‘திருக்கண்மணி’ என்று சொல்லுவார்கள். மற்ற விருக்ஷங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராக்ஷத்திற்கு உண்டு. இயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ராக்ஷம் ஒன்றுதான். இந்த ருத்ராக்ஷம் பாரத தேசத்தில் நேபாளத்தில் இருக்கிறது.
29. அறுபத்தி நான்கு கலைகள், பதினான்கு வித்தைகள், இவற்றில் நான்கு வேதங்கள் பிரதானமானவை. நான்கு வேதங்களுள் மூன்று வேதங்கள் பிரதானமானவை. மூன்று வேதங்களுள் யஜுர்வேதம் பிரதானமானது. யஜுர் வேதத்திலும் மத்திய காண்டம் பிரதானமானது. மத்திய காண்டத்திலும் ஸ்ரீருத்ரம் பிரதானமானது. ஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாக்ஷரம் பிரதானமானது. பஞ்சாக்ஷரத்திலும் ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானவை, வேதத்துக்கு ஜீவாம்சமாக இருப்பவை ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்கள். பஞ்சாக்ஷர உபதேசம் நாவுக்கு ஆபரணமாக இருப்பது.
30. உலகத்திலுள்ள எல்லாருமே சிவன் குடிமக்கள். சிவன் மஹாபிதா. நாம் எல்லோரும் யக்ஞம் செய்கிறோம். அக்னி காரியம் இல்லாமல் வைதிகமதமே இல்லை. உலகம் முழுவதுமே வேதம் பரவியிருந்த காலத்தில் எல்லோருமே அக்னி காரியம் செய்தார்கள். அக்னி காரியத்தின் கடைசியில் பஸ்ம தாரணம் உண்டு. வைஷ்ணவர்களாக இருந்தால் பாஞ்சராத்ர ஆகமத்திலுங்கூட ஹோமங்களுக்குப் பிறகு ஹோம பஸ்மத்தை எடுத்துத் தரித்துக் கொள்ள வேண்டும்.
31. சப்தத்வீபங்களிலும் வேதமே பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்மதாரணம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை தவிர இதர தேசங்களில் மதாந்தரங்கள் வந்தவிட்டன. அதற்கு நாமே காரணம். நாம் மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம் சரிவர மேற்கொள்ள வேண்டும். வைதிகமதம் முன்போலவே எல்லா இடங்களிலும் வரவேண்டும். இதற்கு நம்மிடத்தில் அனுஷ்டானம் வரவேண்டும். பஸ்மதாரணம் அவசியம். பஸ்மம் சிவஸ்வரூபம். கலியுகத்தில் எல்லாவிதமான பாபங்களையும் போக்குவதற்கு பஸ்மதாரணம், ருத்ராக்ஷதாரணம், சுத்த ஸ்படிக ஸ்வரூபத்யானம், வில்வ அர்ச்சனை இவைமிக அவசியம்.
32. பெரியவர்கள் தங்களுடைய அனுபத்தின் மூலமே வெளியே சிவகாரியங்களைச் செய்து, உள்ளே அதற்கு ஏற்ற விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் மிலிட்டரிக்காரன் யூனிபாஃரம் போட்டால் வீரத்தன்மை வருகிறது என்று சொல்லுகிறான். அப்படித்தான் பக்தி வரவேண்டும், சாந்தம் வர வேண்டும், சத்தியம் வர வேண்டும் என்றால் ‘சிவ’ சின்னங்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னார்கள். வெளியில் நாம் செய்கின்ற சில சம்ஸ்காரங்களினாலே உள்ளே சில நன்மைகள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் வெளிவேஷம் என்று நினைத்தால் வெறும் வேஷமாகவே போய்விடுகின்றன. ஆத்மார்த்தமாக ஜீவனை பரிசுத்தம் செய்து கொள்வதற்காகச் சின்னங்களை அணிகிறேன் என்று நினைத்தால் சத்தியமாக உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது. புறத்திலே தரிக்கும் சின்னங்கள் ஆத்மாவுக்கு உபயோகப்படுகின்றன.
33. நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக்கொண்டு பரமேச்வரன் சகல புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்கிற அக்கிரமத்தைப் பார்த்தோமானால் நமக்கு ஒருவேளை அன்னங் கிடைக்கலாமா? அப்படி இருக்கிறபோது நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம் கிடைத்துக் கொண்டிருக்கும்படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜனத்தையும் எதிர்பார்க்காமல் சர்வேச்வரன் அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார்.
34. சகல வஸ்துக்களும் அழிந்தாலும் கடைசியில் தான் ஒன்று மட்டுமே சத்தியமாக இருக்கிற பஸ்மத்தை நெற்றியிலும், ஸ்வபாவமாகத் துவாரங்களுடனும் முகங்களுடனும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற ருத்ராக்ஷங்களைக் கழுத்திலும், சாக்ஷாத் மஹாலட்சுமியின் வாசஸ்தலமாகிய வில்வத்தைச் சிரசிலும், வேதத்தின் மத்யமணிக்கு, நடுநாயகமணிக்கு, ஒப்பாக விளங்குகிற ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்களை நாக்கிலும், சுத்த ஸ்படிக ப்ரகாச மஹாலிங்கத்தை உள்ளத்திலும் தரித்துக்கொண்டு ஜன்ம சாபல்யத்தை அடைய வேண்டும்.
35. நாம் எதை நினைக்கிறோமோ அது மயமாக ஆகிவிடுகிறோம். சுத்த ஸ்படிகமாக விளங்குகிற பரமேச்வரனை நினைத்தால் நம் மனசு சுத்த ஸ்படிகமாக ஆகும். அவர் தான் எப்போதும் துக்கமென்பதே இல்லாதவராக ஆனந்த ஸ்வரூபியாக இருக்கிறார். ஆகவே விபூதி ருத்ராக்ஷ தாரணம், பஞ்சாக்ஷர ஜபம், உள்ளே சுத்தஸ்படிக சங்காச ரூபியாகிய பரமேச்வரனுடைய தியானம், வில்வார்ச்சனை இவற்றை எப்போதும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
36. ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர் இருந்தார். இன்றைக்கு நாம் விபூதி ருத்ராக்ஷம் தரித்திருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம். அவர்கள் 104 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள். விஷ்ணு த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவத்வேஷத்தை வளர்ப்பதை அவர்கள் வெறுத்தார்கள். ‘சிவத்வேஷத்தை சகிக்க மாட்டேன்’ என்று சொல்லிச் சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள்.
37. ‘வேதத்தில் ஸ்வாமியைப் பற்றிச் சொல்லும்போது’ எதற்கு மேல ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. எதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. மிகப் பெரியனவற்றுக் கெல்லாம் பெரியது ஸ்வாமி மிகச் சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது ஸ்வாமி என்று வருகிறது. ஸ்வாமி என்பவர் மிகச் சிறியனவற்றுக்கெல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்? அவர்தாம் எல்லாமாய் இருக்கிறார். அதனால் அவரைத் தவிர வேறு ஒன்று இல்லாத நிலை வந்துவிடுகிறது. சின்னதும் அவர்தான், பெரியதும் அவர்தான், சின்னதைக் காட்டிலும் சின்னதாக, பெரியதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறவர் பட்டகட்டையாக ஸ்தாணுவாக-இருக்கிறார். அப்படி உட்கார்ந்திருப்பவர் காரியமே இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருப்பவர், ஆனந்தமாக உட்கார்ந்திருப்பவர் தக்ஷிணாமூர்த்தி.
38. சிவன் கோயிலுக்குப் போனால் மஹாலிங்கம் கிழக்கே பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு ஈசான்ய (வடகிழக்கு) திக்கில் நடராஜா தெற்கே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு காலை வேறு தூக்கிக்கொண்டு நற்பார். அவரை எப்பொழுதும் நாம் இருதயத்தில் தியானம் பண்ணிப்பண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை நினைத்து, அந்த ஆனந்த தாண்டவ மூர்த்தியின் ஸ்வரூபம் மனத்தில் ஸ்புரிக்கும்படி ஆகிவிட்டால் அதைத்தான் சித்தியாகி விட்டது என்று சொல்வது.
39. ஆனந்தத்திலே இரண்டு வகை இருக்கிறது. பொங்குகிற ஆனந்தம் ஒன்று, அடங்கி அனுபவிக்கின்ற நிலை ஒன்று. பொங்குகிற ஆனந்த தாண்டவ மூர்த்தி நடராஜா. அவர் சடையைப் பார்த்தாலே இது தெரியும். இப்படி இரண்டு பக்கமும் ‘கிர்ர்’ என்று அவர் சுற்றுகிற வேகத்தில் சடை தூக்கிக் கொண்டு நிற்கிறது. ‘விரித்த செஞ்சடையான்’ ஆகிவிடுகிறான். அப்போது அவன் கையில் இருக்கும் உடுக்கையிலிருந்து ‘அ இ உண், ருலுக்’ என்பதான பதினாறு சூத்திரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனந்த தாண்டவ மூர்த்தியின் கையிலிருந்து வரும்படியான அந்தப் பதினாலு சூத்திரங்களுந் தாம் அதிலிருந்து விரிந்த மஹா பாஷ்ய புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன. கூத்தாடும்போது பொங்கி வந்த சப்தங்கள் புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன.
ஆனந்தக் கூத்தின் சப்தங்கள் அடங்கியிருக்கும் படியான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாந்தமாக அமைந்திருக்கும் படியான ஆனந்தத்தோடு உட்கார்ந்திருக்கும்படியான மூர்த்தி தக்ஷிணாமூர்த்தி. இவரும் தெற்குப் பக்கம் பார்த்துக் கொண்டு தான் ஈச்வரனுடைய தென்னண்டைப் பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கிறார். நடராஜரின் கோலத்தில் சடைகள் நான்கு பக்கமும் விரிந்து கிடக்கின்றன. தக்ஷிணாமூர்த்திக் கோலத்தில் அவை அமைந்த ஜடா மண்டலமாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கே சந்திரன் தெறித்துக் கொண்டிருக்கிறது. இங்கே ஆனந்தமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஒருகால் பூமியிலிருக்க இன்னொரு காலைத் தூக்கிக் கொண்டு அங்கே கூத்தாடிக் கொண்டிருக்கிறார். ஒரு காலின் மேல் இன்னொரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கே ஆனந்தமூர்த்தி, இங்கே ஞானமூர்த்தி.
40. ‘சத் சித் ஆனந்தம்’ என்று நாம் கேட்டிருக்கிறோம். சச்சிதானந்தம் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். இதற்கு அர்த்தம் என்ன என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான் இருப்பார்கள். ‘சத்’ என்பது ஒரு புறம் இருக்கட்டும். ‘சித்’ என்பது தான் ஞானம். தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து, அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானம். தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் சந்நிதானம்.
(தொடரும்..)

நன்றி: சைவம் டாட் ஆர்க்