Showing posts with label vaariyaar. Show all posts
Showing posts with label vaariyaar. Show all posts

Friday, October 2, 2009

இராமாயணத்திலிருந்து ஒரு பிளாஷ் பேக்

கங்கைக்கரையில் தர்மாங்கதர் என்ற ஓர் அந்தண முனிவர், '' ஓம் நமோ நாராயணாய'' என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார். 
ஓர் அக்கிரகாரத்தில் ஓர் அந்தணர் வாழ்ந்தார். அவர் மிகவும் சாந்த சீலர். சந்தனம் போல குளிர்ச்சியாக இருப்பவர். இவரது மனைவி பெயர் கலகை. இவள் அக்கினித் திராவகம் போன்றவள். நெருப்பு மலை போல கணவன் மீது சீறிச் சீறி விழுவாள். அவர் வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்வாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்ய மாட்டாள். ஏட்டிக்குப் போட்டியாக எதையும் செய்வாள்.  
''கலகை! எனக்கு சீதளத்தால் நீர் கொண்டிருக்கின்றது. மிளகுக் குழம்பு வை!'' என்றார். அவள் நீற்றுப் பூசணிக்காய் மோர்க்குழம்பு வைத்தாள். அது சீதளத்தை அதிகரிக்கச் செய்தது.  
மற்றொரு நாள், ''கலகை! சூடு அதிகமாகிச் சீதபேதி ஆகின்றது. மிளகாய் இல்லாமல் மிளகு ரசம் வை!'' என்றார். அவள் கத்திரிக்காயும், பச்சை மிளகாயும் கடைந்து வைத்தாள்.  
''கலகை! கண் எரிகின்றது. எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்'' என்றார். அவள் குளிர்ந்த தண்ணீரை அவர் தலையில் விட்டு கொதித்து நின்றாள். 
''கலகை! உறக்கம் வருகின்றது, நான் படுக்க வேண்டும்'' என்றார். படுக்கின்ற இடத்தில் தண்ணீரை வார்த்துக் குளமாக்கிப் படுக்க விடாமல் செய்து விட்டாள். 
இவ்வாறு எல்லாவற்றுக்கும் எதிர்மறையாக செய்து வந்தாள். 
இதனால் வெறுப்படைந்து வேதியர் தலையில் துண்டு போட்டுக் கொண்டு வெளியில் கிளம்பிச் சென்றார். எதிரில் ஓர் ஆப்த நண்பர் வந்தார். அவர், ''ஐயரே! எங்கே போகிறீர்?'' என்று கேட்டார்.  
''மனைவியின் துன்பம் என்னால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. அவள் பேய். அதனால் வீட்டை விட்டு வெளியேறிப் போகிறேன்'' என்றார். 
''பேய் வேப்பிலை அடித்தால் ஓடிப் போகுமே'' என்றார் அன்பர். 
''இவள் மிருகம்'' என்றார் அந்தணர்.  
''மிருகங்களை எல்லாம் அடக்கி ஆள்கிறார்களே! ஒரு பெண்ணை உன்னால் அடக்கி ஆள முடியவில்லையே?'' என்றார் நண்பர். 
''இவள் பூதம்'' என்றார். அவரோ, ''பிருதிவி, வாயு, தேயு, அப்பு, ஆகாசம் என்ற பஞ்ச பூதங்களை நாம் அடக்கி ஆள்கிறோமே! இந்த பெண் பிள்ளையை அடக்கி ஆள முடியவில்லையா? அவள் என்னதான் செய்கின்றாள் விளக்கமாக சொல்'' என்றார்.  
''ஐயா! அவள் செய்யும் கொடுமைகள் ஒன்றா, பத்தா, நூறா, ஆயிரமா! லட்சோப லட்சம் குற்றங்கள் செய்கிறாள். அவற்றை நான் எங்ஙனம் சொல்வேன்? சுருக்கமாக சொல்லுகிறேன். வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்கிறாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்கிறாள்''.  
நண்பர் சொல்லுவார்: ''அன்பரே! நான் சொல்வதைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வேண்டாம் என்பதை வேண்டும் என்று சொல்லுங்கள். முயற்சி உயர்ச்சி தரும்'' என்று கூறினார்.  
அந்தணர் வீட்டுக்குச் சென்றார். அவருக்கு அகோரப் பசி. 
''கலகை! இன்று நான் சாப்பிடமாட்டேன்'' என்றார். அவள் மிகுந்த கோபத்துடன், ''உனக்காக சமைத்து வைத்திருக்கிறேன், சாப்பிடு'' என்று உணவு கொடுத்தாள்.  
''கலகை! நான் உடுத்திய வேட்டியை நீ தொடக் கூடாது. அதில் உன் கை படக்கூடாது.'' அவள், ''உனக்கு ஆசாரம் மிகுந்து விட்டதா? ஞானம் முதிர்து விட்டதா? நான் இன்று முதல் உன் வேட்டியை துவைத்து போடுவேன். நீ செய்வதைச் செய்'' என்று கூறி அவருடைய உடைகளை தூய்மையாக தோய்த்து உயர்ந்த கொடியில் உலர்த்தி விடுவாள்.  
''கலகை! உன் மேல பட்ட காற்று என் மேல படக் கூடாது!'' என்றார். அவள் ''உனக்கு இவ்வளவு உயர்வு வந்து விட்டதா?'' என்று சீறி விழுந்து சிறிய விசிறியை எடுத்து சுகமாக விசிறி விட்டாள். கலகை! எண்ணெய் தேய்த்துக் குளிக்க மாட்டேன், என்றார். அவள் நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் நல்லது. எண்ணெய் தேய்த்து குளித்துத் தான் ஆக வேண்டும்'' என்று கூறி எண்ணையைக் கொண்டு வந்தாள். 
''சரி. நானே எண்ணெய் தேய்த்துக் கொள்கிறேன் நீ போ, என்றார்.  
அவளோ, ''ஏன்? நான் தேய்த்தால் என்ன குற்றம்? நான் தான் தேய்ப்பேன், வாயை மூடிக் கொண்டு இரு'', என்று கூறி, கணவனுடைய உடம்பு முழுதும் எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்தாள்.
இவ்வாறு அந்த அந்தணர், கலகையிடம் வேண்டும் என்பதை வேண்டாம்
என்றும், வேண்டாம் என்பதை வேண்டும் என்றும் கூறி சாதுர்யமாக சாதித்துக் கொண்டு சுகமாய் வாழ்ந்தார். அந்த ஆப்த நண்பரை ஒருநாள் வழியில் சந்தித்தார். அவர், ''ஐயரே! இப்பொழுது உன் வீட்டுக்காரி எப்படி நடந்து கொள்கிறாள்?'' என்று கேட்டார். இப்போது எல்லாம் வெகு சுகமாக நடைபெறுகின்றன.ஆனால், வேண்டாம் என்பதை வேண்டும் என்றும், வேண்டும் என்பதை வேண்டாம் என்றும் வெகு கவனமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. இப்போது, அவள் துணி துவைத்து போடுகின்றாள், எண்ணெய் தேய்த்துவிடுகின்றாள், விசிறி விடுகின்றாள், படுக்கை விரிகிறாள், எல்லாத் தொண்டும் செய்கின்றாள். ஒரு குறையும் இல்லை'' என்றார்.  
ஒரு நாள், அந்த வேதியர் மனைவியை பார்த்து, ''கலகை! நாளை என் தந்தையாருடைய ஸ்ரார்த்தம். வீடு வாசல் மெழுகாதே, நீராடாதே, சமைக்காதே, என்று கூறினார். அவளோ எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்து வைத்தாள். பிண்டப் பிரசாதம் போட்டு அவளிடம் அதை ஜலதாரையில் கொட்டும் படி சொல்லியிருக்க வேண்டும். சொல்லி இருந்தால் அவள் சுத்தமான தண்ணீரில் கொட்டியிருப்பாள். அவர் சற்று கவனக் குறைவாக, பிதுர் ப்ரசாதத்தினை சுத்தமான நீரில் கொட்டும் படி கூறி விட்டார். அவளோ அதை அசுத்தமான நீரில் கொண்டு போய்க் கொட்டிவிட்டாள். கோபமே வராத அந்த குணக்குன்றாகிய அந்தணர் கோபித்து, ''பாவி, எனக்கு ஆயிரம் ஆயிரம் குற்றங்கள் செய்தாய். அத்தனையும் பொறுத்துக் கொண்டேன். பிதுர்க்களின் தூய பிரசாதத்தை அசுத்தமான தண்ணீரில் கொட்டினாயே! இது எவ்வளவு பெரிய பாவம்! கலகை நீ அலகையாகப் போகக் கடவது'' என்று சாபமிட்டார். 
அந்த வேதவித்தின் சாபத்தால் அவள் பெண் பேயாக மாறினாள். குடிக்க நீரும், தங்க நிழலுமின்றி அங்கும், இங்குமாக அலைந்து, உலைந்து, திரிந்து வேதனைப் பட்டாள்.


நாம் ஆரம்பத்தில் பார்த்தோமே, கங்கைக்கரையில், ''ஓம் நமோ நாராயணாய" என்று மந்திர ஜபம் செய்து கொண்டிருந்த தர்மாங்கதரை இந்த பெண் பேய் பிடிக்கச் சென்றது. அதைப் பார்க்கும் பொது நெருப்பை விழுங்கச் சென்ற எறும்பு போல இருந்தது. முனிவர் புன்னகை புரிந்து கமண்டலத் தண்ணீரை, ''ஓம் நமோ நாராயணாய" என்று தெளித்தார். அந்த மந்திர நீரால் அவளது சகல பாவமும், சாபமும் விலகி விட்டன. அவள் அவருடைய அடிமலர் வீழ்ந்து, தொழுது, அழுது, ''தபோதனரே! நான் கலகை என்ற பெயருள்ள பெண். கணவன் மனம் நோகப் பலப் பல குற்றங்கள் செய்த பாவத்தால், அவருடைய சாபத்தால் பேயாக அலைந்து திரிந்து நொந்தேன். எனக்கு அருள் புரிவீராக'', என்று வேண்டி நின்றாள். தர்மாங்கத முனிவர் அவளுக்கு தண்ணருள் புரிந்து, ''அம்மா! அழாதே. நான் அறிவு தோன்றிய நாள் முதல் இன்று வரை செய்த தவத்தில் பாதியை உனக்குத் தந்தேன்'' என்றார்.  அப்போது, வைகுந்தத்திலிருந்து பொன்மணி விமானம் ஒன்று வந்து இருவரையும் வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றது. அவர்கள் பரவாசுதேவனை சேவித்து பேரின்பத்தை எய்தினார்கள். ஸ்ரீமன் நாராயணர் தர்மாங்கதரைப் பார்த்து, ''தர்மாங்கதரே! நீ பூவுலகில் ஆதித்த குலத்தில் பிறந்து, தசரதன் என்ற பேர் பெற்று அறுபதினாயிரம் ஆண்டு தவம் செய்வாயாக. நான் உனக்கு மகனாகப் பிறந்து ராமன் என்ற பெயருடன் விளங்கி ராவண வதம் செய்து நாட்டுக்கு நலம் செய்வேன். அம்மா, கலகை! நீ கேகய நாட்டில் அசுவபதி என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்து கைகேயி என்ற நாமத்துடன் வளர்வாய். தர்மாங்கதருடைய தவத்தில் பாதி பெற்றதனால், கௌஸலை வயிற்றில் நான் பிறந்தாலும் நீ என்னை அன்பு மகனாக வளர்ப்பாயாக. நீ பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பெருமையுடன் வாழ்வாய். சமயம் வரும் போது, நீ என்னை கானகம் போகச் சொல்லி கலகம் செய்வாய்'' என்றார்.
நன்றி:- திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் ''இராம காவியம்'' தொகுத்தவர்: DR.J.PERUMAL.M.B.A,Ph.D 
drjperumalphd@yahoo.com