Monday, December 2, 2013

6. தேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) யாத்திரை_2012

திருச்சிற்றம்பலம்.

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான்; தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான்; - இறைவனே
எந்தாய் எனஇரங்கும்; எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.
(காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி)

தெளிவுரை : பொதுவாக, உயிர்க் கூட்டங்களின் வினைக்கு ஈடாக அவர்களைத் தோற்றுவிக்கும் உடம்பினின்றும் பிரித்தும் செயல் புரியும் இறைவன், சிறப்பாகத் தன்னையன்றி வேறுயாரையும் புகலாக அடையாத அன்பர்களைத் துன்பத்தினின்றும் விடுவித்து, நலம் அருளுவான்)

====
6. தேவபூமியில் சில நாட்கள்.

எங்களது உத்தர்கண்ட் பயணத்தின் முதல் தரிசனமாக கேட்டவருக்கு கேட்ட வரம் அளிக்கும்  கோலு தேவதாவை தரிசித்தோம்.

அல்மோராவிலிருந்து சுமார் ஆறேழு கி.மீ. தூரத்தில் இருக்கும் சித்தாய் (Chitai) ஒரு அழகிய மலைக் கிராமம். சாலையோரத்திலேயே ஜாகேஷ்வர் செல்லும் பாதையில் வலது புறமாக கோலு தேவதாவின் திருக்கோவில் அமைந்திருக்கிறது. அல்மோரா அருகில் உள்ள சித்தாய் கிராமத்தில் உள்ள இந்த கோலு தேவதாவின் திருக்கோவில் குமாவுன் பிரதேசத்தின் மிகப் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். 

நாங்கள் சித்தாய் சென்று சேர்ந்த போது நேரம் காலை பத்தேகால் ஆகி விட்டிருந்தது. இங்கிருந்து ஜாகேஷ்வர் செல்ல மேலும் நாற்பது கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். மலைப் பாதை பல இடங்களில் நிலச் சரிவால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஜாகேஷ்வர் போய்ச் சேர குறைந்தது மூன்று மணிநேர பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கும். எனவே முதலில் கோலு தேவதா தரிசனத்தை முடித்துக் கொண்டு வந்து விடுங்கள்.  அதன் பிறகு நாம் சிற்றுண்டி அருந்தலாம் என்று திரு.மனோஜ் சொன்னார்.

மனோஜ் வெளியில் காரில் ஓய்வெடுப்பதாக சொல்ல நாங்கள் சுவாமி தரிசனம் செய்து வர கோவிலுக்குள் நுழைந்தோம்.

Inline images 2
கோலு தேவதா மந்திரின், பிரதான நுழைவு வாயில்.

Inline images 3
நுழையும் போதே தோரணங்களாக நம்மை வரவேற்கும் மணிகள்.

Inline images 4
எங்கிலும் மணித் தோரணங்கள்.

Inline images 5
காணக் கண்கொள்ளாக் காட்சி.

Inline images 6
பக்தர்களின் காணிக்கையாக கட்டிவிடப்பட்டிருக்கும் மணிகள்.

நம்மூரைப் போலின்றி நேரடியாக மூலவரிடம் நாம் போய் ஸ்வாமி தரிசனம் செய்யலாம். அழகான கருவறைக்குள் நாங்கள் நுழைந்தோம். பண்டிட்ஜி உள்ளே அமர்ந்து எங்களை வரவேற்றார். நெற்றியில் திலகமிட்டு எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் கோலு தேவதாவை மனமுருகி பிரார்த்தனை செய்து வணங்கிவிட்டு அங்கே சற்று நேரம் அமர்ந்தோம். கோலு தேவதா பற்றி பண்டிட்டிடம் கேட்டோம். திரு.நடராஜன் ஹிந்தியில் அவருடன் உரையாடினார். சென்னையில் இருந்து புறப்ப்படு முன்னரே நண்பர் திரு.மங்களீஸ்வரன் குமாவூன் பிரதேசம் பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகத்தை கன்னிமாரா நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருந்தார். குமாவூன் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் மிக அற்புதமாக புத்தகத்தை எழுதி இருந்தார்கள். 

ரயில் பயணத்தின் போது கிடைத்த நிறைய நேரங்களில் இந்தப் புத்தகத்தை படித்து குமாவூன் பிரதேசத்தைப் பற்றிய பல செய்திகளை மனதுக்குள் வாங்கிக் கொள்ள இயன்றது. அப்போது படித்த பல கதைகளில் என்னை கவர்ந்த கதை கோலு தேவதாவின் கதைதான். அதைப்பற்றி எனது சஹயாத்திரிகளிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன். வாய்ப்பு கிடைத்தால் இந்த தேவதாவின் கொள்வில்லை தரிசிக்கவேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் ஆன்மீகப் பயணத்தின் முதல் கோவிலாகவே கோலு மந்திர் அமைந்தது தேவபூமியின் முக்கிய கடவுளான கோலு தேவதாவிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த நல்லாசியாக கருதினோம்.

எங்கிருந்து வருகிறோம் என்று பண்டிட் எங்களிடம் கேட்டார். சென்னையில் இருந்து பல ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து நாங்கள் உத்தரகண்ட் மாநிலத்துக்கு ஆன்மீகப் பயணம் வந்திருப்பது பற்றி அறிந்து மிகவும் மகிழ்ந்தார். கோலு தேவதாவைப் பற்றி நாங்கள் படித்து அறிந்திருந்தது குறித்து அவரிடம் தெரிவித்தோம். அது அவரை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாகியது. கோலு தேவதாவின் ஒரிஜினல் கோவில் இதுதான் என்று கூறினார். குமாவுன் பிரதேசத்தின் காவல் தெய்வமாக, நீதி அரசனாக கோலு தேவதா விளங்குவதாக கூறினார். நாங்கள் மீண்டும் கோலு தேவதாவை வணங்கி விட்டு பண்டிட்ஜிக்கு நன்றி கூறிவிட்டு கருவறையை விட்டு வெளியே வந்தோம். வெளிப் பிரகாரத்தில் அமர்ந்திருந்த ஒருவர் எல்லாருக்கும் கையில் கயிறு கட்டி விடுகிறார். மற்றொருவர் துனி மாதிரி அமைந்திருக்கும் யாக குண்டத்தில் இருந்து திருநீற்றை வழங்குகிறார். கருவறைக்குள்ளும், வெளிச் சுற்றிலும் கோலு தேவதாவை வேண்டி நிறைய விண்ணப்பங்கள் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் ஹிந்தி மொழியில் கோரிக்கைகள் அமைந்திருக்கின்றன. ஓரிரு ஆங்கிலக் கடிதத்தையும் பார்த்தேன். வேலை வாய்ப்பு, உத்தியோக மாற்றல், பணி இட மாற்றல் கோரிக்கைகள், நிலத் தாவாக்கள் சாதகமாக முடியவேண்டும், தாமதமாகும் திருமணங்கள் கைகூட, பிள்ளை வரம் என எண்ணிலடங்கா கோரிக்கைகள் இங்கே வைக்கப்பட்டு அவைகள் அனைத்தும் நிறைவேறுவதாகவும், நேர்த்திக் கடனாக பக்தர்கள் மணிகளைக் கட்டி விட்டு செல்வதாகவும் பண்டிட்ஜி கூறினார். கட்டித் தொங்க விடப்பட்ட மணிகளே பல சைஸ்களில் பல ஆயிரக்கணக்கில் இருந்ததைக கண்டோம். நான்கடி உயர மணி ஒன்று தரையில் வைக்கப் பட்டிருக்கிறது. அதற்காக தனியாக பில்லர் ஒன்று கட்டவிருப்பதாக சொன்னார்கள். இது மட்டுமின்றி ஒரு அறை முழுவதும் காணிக்கையாக பெறப்பட்ட மணிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக கூறினார் அங்கிருந்த கோவில் பணியாளர் ஒருவர். நெடிதுயர்ந்த தேவதாரு, மற்றும் பைன், ஃ பர் மரங்கள் கோவிலைச் சுற்றி அமைந்திருக்க, குரங்குகள் நிறைய கோவிலுக்குள் விளையாடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்தன. நல்ல வேளையாக கோவிலுக்கு வரும் பக்தர்களை அவைகள் எந்த விதமான தொந்தரவும் செய்யாமல் இருப்பது வியப்பாக இருந்தது. 

குழந்தைகள், ஆடவர், மகளிர், பெரியவர்கள் என்று சாரி சாரியாக கோவிலுக்குள் வந்து வழிபட்டுக் விட்டு மிகவும் அமைதியாக திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். டூரிஸ்டுகளாக வந்திருந்த நாங்கள் தான் தொணதொணவென பேசிக் கொண்டும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் இருந்தோம். சுமார் அரை மணி நேரம் கோவிலில் இருந்து விட்டு பசி வயிற்றை கிள்ள காலைச் சிற்றுண்டி நினைவுக்கு வந்தது. கோவிலை விட்டு வெளியே வந்தோம். எங்கள் வரவுக்காக வெளியில் காரில் காத்திருந்த திரு.மனோஜ் எங்களை அருகாமையில் இருந்த சிற்றுண்டி  சாலைக்கு அழைத்துச் சென்றார். காலை பத்தரை மணி ஆகி விட்ட அந்த வேளையில் பூரி, சப்ஜி, சன்னா, ரைதா(தயிர்ப் பச்சடி) இவை மட்டுமே உண்ணக கிடைத்தன. காலையில் எண்ணைப் பலகாரமா என்று யோசித்த நான் ஜாகேஷ்வர் சென்று சேரும் வரை வேறு வழியில்லை என்று உணர்ந்து பூரி, சன்னா, ரைதா போன்றவற்றை சாப்பிட்டு விட்டு, தேநீர் அருந்தி காலை சிற்றுண்டியை ஒருவாறாக முடித்துக் கொண்டு கிளம்பினோம். 

ஆமாம். கோலு தேவ்தாவின் சுவாரஸ்யமான கதையை சொல்ல மறந்து விட்டேன். நீங்களும் என்னை நினைவு படுத்தாமல் விட்டு விட்டீர்களா? சரி. அடுத்த பகிர்வில் ஜாகேஷ்வருக்கு போகும் வரை கிடைக்கும் பயண நேரத்தில் கோலு தேவதாவின் உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமான கதையை சொல்கிறேன். சரிதானே?

(பகிர்தல் தொடரும்)

No comments: