Saturday, November 16, 2013

4. தேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) யாத்திரை_2012

4. தேவபூமியில் சில நாட்கள். 

திருச்சிற்றம்பலம்.
காயத்தில் பாம்பு கழுத்திலே நஞ்(சு)இடத்தில்
வேயனைய தோளினாள் வெண்சடையில் – தோயமொடு
பிஞ்சு மதிசுமப்பாய் பெம்மானேநின்னையென்றன்
நெஞ்சில் சுமப்பேன் நிதம்.
(வேட்டை முதற்பெயரோனின் பிரதோஷப் பாடல்களில் இருந்து) நன்றி: இரத்தினமாலை குழுமம்.

ராம்கரில் இருந்து புறப்பட்டு ஜாகேஷ்வர் நோக்கி பயணம் தொடர்ந்த போது நாங்கள் மேற்கொண்ட மலைப்பாதை பயணம் ரம்மியமான காட்சிகளை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கியது. 
பொழுது புலர்ந்து சற்றே மூடுபனி விலகத் தொடங்கிய அந்த நேரத்தில் காலைக் கதிரவனின் பொற்கிரணங்களில் குளித்திருந்த இமய மலையின் எண்ணற்ற இயற்கைக் காட்சிகளை என்னென்று சொல்வது! எப்படிச் சொல்வது! வானுயர்ந்த மலைமுகடுகளும், பள்ளத்தாக்கின் மரகதப் புல்வெளிகளும், வளர்ந்தோங்கிய பைன், ஓக், தேவதாரு மரங்களும், காட்டுச் செடிகளின் கிளைகளில் பல்வேறு வண்ணச் சிதறல்களாய் விளங்கிய பூங்கொத்துக்களும், இயற்கையெனும் இளநங்கையின் சந்தோஷச் சிரிப்புக்களாய் வெளிப்பட்டன. கம்பனோ, காளிதாசனோ, கீட்சோ அல்லது பாரதியோ இப்போதும் இங்கே இருந்திருந்தால் நமக்கு மீண்டும் நிறைய கவிதைகள் கிடைத்திருக்குமே என்று எண்ணிக கொண்டேன்.

ஏன், இப்போதைய காலகட்டத்தில் நம் இரத்தினமாலைக் குழுமத்தின் நாயன்மாரும்(சிவசிவ), அனந்த்ஜீயும், ஆசுகவி டாக்டர்  சங்கர்குமாரும் இந்தக் காட்சிகளைக் கண்டிருந்தால் எவ்வளவு சிவநேசக் கவிதைகள் நமக்கு கிடைத்திருக்கும்? என்றும் எண்ணிக கொண்டேன். என்னையும் ஒரு பொருளாக்கி, நாயைச் சிவிகையில் ஏற்றியது போல ஏதும் அறியாத என்னை இறைவன் இது போன்ற இடங்களுக்கெல்லாம் அனுப்பி எனது ஆணவத்தை குறைத்துக் கொண்டிருக்கிற சிவக் கருணையை எண்ணி எண்ணி ஆடல்வல்லானுக்கு என் நன்றிதனைக் இதயபூர்வமாக கூறிக் கொண்டிருந்தேன்.

அந்தக் குளிரிலும் காலை நேரத்தில் சின்னஞ்சிறு குழந்தைகள் அழகான சீருடை அணிந்து புத்தகப் பைகளுடன் தங்களது பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். இந்த ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகள் மலைப்பாதைகளில் குறைந்தது நான்கைந்து கி.மீ தூரமாவது நடந்தே செல்கிறார்கள். நடக்கும் போது நான்கைந்து குழந்தைகள் குழுவாகச் சேர்ந்து கொண்டு செல்கின்றனர். காலைக் குளிரை பொருட்படுத்தாது அவர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்களது பெற்றோர்கள் பள்ளி வரை உடன் வருவதில்லை. எனக்கு நம்மூர் காட்சிகள் நினைவுக்கு வந்தன. காலையில் அவைகளை எழுப்பி பள்ளிக்கூடம் வரை உடன் செல்வதோடு மட்டுமல்லாது அந்தக் குழந்தைகள் வகுப்பறைக்குள் செல்வது வரை டாட்டா காட்டி விட்டு வரும் பெற்றோர்களது நினைவு வந்தது. நாம் நம் குழந்தைகளை அதிகமாக செல்லம் கொடுத்து comfort zoneஇல் வைத்து வளர்த்து அவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் உறுதி இல்லாதவர்களாக்கி விடுகிறோமோ என்று அஞ்சுகிறேன். சமவெளி மனிதர்களை விட மலைவாழ் மனிதர்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் உறுதியுடன் விளங்குகிறார்கள் என்றே நான் நம்புகிறேன்.

அதைப்போலவே பள்ளி மாணவ, மாணவியர்களும் நடந்து செல்வதைக் கண்டேன். தினமும் காலையும், மாலையும் இருவேளைப் பொழுதிலும் ஐந்து கி.மீ தூரம் நடப்பது எந்த அளவுக்கு அவர்களது நலவாழ்வை மேம்படுத்துகிறது தெரியுமா? உத்தரகண்ட் மாநில மக்கள் இதன் காரணமாக நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்கள். எல்லா வயது ஆடவரும், பெண்டிரும் உடல் நலத்தில் வளமாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அரசின் நிதி பயனுள்ள மற்ற திசைகளில் செலவு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். கல்வியில் இந்த நிதி முறையாக பயன்படுத்தப்படுவதால் சிறந்த கல்வி தரும் மாநிலங்களில் ஒன்றாக உத்தரகண்ட் மாநிலம் மாறி வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த மாநிலம் மின்பற்றாக்குறை இல்லாத தன்னிறைவு பெற்ற மாநிலமாகவும் விளங்குகிறது. சுமார் ஏழு மின் உற்பத்தி நிலையங்களை உத்தரகண்ட் மாநிலம் பெற்றுள்ளது. தனது பயன்பாட்டுக்குப் போக உபரி மின்சக்தியை தனது அக்கம்பக்கத்து மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உ.பி., மற்றும் டெல்லி உட்பட பல மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது இந்த மின்தடை இல்லாத மாநிலம்.

கோடை/மழைக்காலம் என எல்லா நேரங்களிலும் வற்றாத நீர்வளம் இருப்பதினால் தண்ணீர்ப் பற்றாக்குறை இந்த மாநிலத்தில் இருப்பதில்லை. விவசாயத்திலும் மலைப்பகுதிகளில் Terrace farming எனப்படும அடுக்குமாடி விவசாய உத்தியைப் பயன்படுத்தி நெல், கோதுமை, மற்றும் காய்கறிகளை பயிரிட்டுக் கொள்கிறார்கள். கால்நடைகளை வளர்ப்பதால் தேவையான பால், தயிர், நெய் போன்றவை தங்கு தடையின்றிக் கிடைக்கின்றன. பள்ளிச் சிறார்கள் மட்டுமின்றி எல்லா வயதினரும் குறைந்தது ஆறேழு கி.மீ தூரமாவது நடந்தே சென்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாலும், விவசாயம் போன்ற கடின உடல் உழைப்பில் மாநில மக்கள் ஈடுபடுவதாலும் தேவபூமியான உத்தரகண்டின் மலைப்பகுதி எல்லா வளங்களும் பெற்று கொழிக்கிறது. தேவபூமி என்பதால் இறையருள் நிறைய இருக்கிறது. செல்லும் வழி தோறும் கோவில்களைக் கண்டேன். மக்கள் மிகவும் இறைநேசம் கொண்டு விளங்குகிறார்கள். அன்புமயமாக விளங்குகிறார்கள். இமயத்தில் வாழ்வதால் நற்குணங்களில் இமயமாக விளங்குகிறார்கள்.

அடுத்த ஒரு மணிநேர நீண்ட நெடுகிய மலைப்பாதை பயணத்தில் நாங்கள் அல்மோராவை நெருங்கி கொண்டிருந்தோம். அல்மோரா உத்தரகண்ட் மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்று. அல்மோரா ஒரு புராதனமான நகரும் கூட. ஒரு காலத்தில் ராஜவமிசத்தினரின் தலைநகரமாக விளங்கிய அல்மோரா இப்போது மாவட்டத் தலைநகராக இருக்கிறது. இந்தப் பகுதி கத்யூரி மற்றும் சாந்த் வமிச மன்னர்கள் ஆண்ட பகுதி. சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக அரசர்கள் இந்த பகுதியை பரிபாலனம் செய்து கொண்டிருந்தார்கள். சுவாமி விவேகானந்தர் தனது பரிவ்ராஜக வாழ்க்கையின் போது அல்மொராவில் அரச விருந்தினாராக சில காலம் இருந்தது குறித்து எழுதி இருக்கிறார். ஆங்கிலேய ஆட்சியாளர்களும் உத்தரகண்ட் பகுதியை ஆண்டிருக்கிறார்கள். நேபாள கோர்காக்களின் படையெடுப்பு, முகலாயர் படையெடுப்பு என்று இந்த வளமான பூமியை தொன்று தொட்டு சமவெளி மக்கள் ஆக்கிரமித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

மகாபாரத காலத்து மன்னர்களைப் பெற்ற இடம். உண்மையை மட்டுமே பேசுவதற்காக தனது ராஜ்யம், குடும்பம் அனைத்தையும் இழந்து, மயானத்தில் பிணம எரிக்கும் தொழிலை மேற்கொண்ட ராஜா ஹரிச்சந்திரன் உத்தரகண்டின் சாந்த் வமிசத்தினை சார்ந்தவர் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பலபகுதிகளில் இருந்தும் மக்கள் திருக்கயிலை-மானசரோவரம், பத்ரினாதம், திருக்கேதாரம் என்று தொன்று தொட்டு யாத்திரை வருவதால் இனக்கலப்புகள் நிறைய நேர்ந்திருக்கின்றன. கன்னியாகுமரி, கருநாடகம், ஆந்திரப்பிரதேசம் என்று பலபகுதிகளில் இருந்து மக்கள் இங்கே வந்து உத்தரகண்ட்வாசிகளாக மாறிவிட்டார்கள் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். நமது சங்க இலக்கியங்களில் கூட மகாபாரத்து போருக்கு படைகளும், உணவும் தந்து உதவிய பெருஞ்சோற்று உதியன் எனும் மன்னனைப் பற்றிய செய்திகள் வருகின்றது. இமயவரம்பன் சேரலாதன் ஆரியமன்னர்களுடன் போரிட்டு, இமயத்தில் சேரனின் இலச்சினை கொடியை பறக்கவிட்டு, கண்ணகிக்கு சிலை செய்யக் கல்லினை கங்கையில் நீராட்டி இமயத்தில்  இருந்து கொண்டு வந்ததாக பள்ளி நாட்களில் படித்தது நினைவுக்கு வந்தது.

ஆதி சங்கரரரின் தொடர் இமாலய விஜயம் நிறைய நம்பூதிரிகளையும், தந்திரிகளையும் இம்மாநிலத்தின் கோவில்களில் கொண்டு சேர்த்திருக்கிறது. அதன் காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கோவில்களில் கேரள தந்திரிகள் பல நூற்றாண்டுகளாக பணி புரிந்துவருகிரார்கள். ஆதிசங்கரர் வகுத்துத் தந்த பூஜாவிதிகள் படிதான் இன்றளவும் கோவில் பூசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் தங்கள் நீண்டநாளைய வாழ்க்கை முறைகள் காரணமாக பட் எனவும், பண்டிட் எனவும் தங்களை அழைத்துக் கொண்டாலும், பூர்வாசிரமத்தில் இவர்கள் ஆதிசங்கரரின் நியமனம் பெற்ற நமது நாட்டுத் தந்திரிகளே என உத்தரகண்டின் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. நேபாளத்தின் பசுபதிநாதரின் கோவிலில் கூட இன்றளவிலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தந்திரிதான் பூசை செய்கிறார்.

(பகிர்வுகள் தொடரும்)

No comments: