Sunday, April 14, 2013

3. தேவபூமியில் சில நாட்கள்.

3. தேவபூமியில் சில நாட்கள். 

ஓம் நமசிவாய.

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 658
-அச்சோப்பதிகம்(திருவாசகம்)

ஜாகேஷ்வர் பயணக் கட்டுரை தொடருகிறது..

நாங்கள் பயணம் மேற்கொண்டிருந்த அந்த நேரம் (மார்ச் 2012) ஹோலிப் பண்டிகைக் காலமாக அமைந்திருந்தது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஹோலிப் பண்டிகையை வெகு விமரிசையாக ஒருவார காலத்துக்குக் கொண்டாடுவார்களாம். வட மாநிலங்களில் நிலவிய உறைய வைக்கும் குளிர்காலம் போய் வரவிருக்கும் கோடைக்காலத்திற்கு முகமன் கூறும் வசந்த(இளவேனில்)காலத் திருவிழாவாக காமன் பண்டிகை(ஹோலி)கொண்டாடப்படுகிறது.

‘குமாவுன் பிரதேசத்து ஹோலி கொண்டாட்டங்கள் மற்ற எல்லா மாநிலத்து ஹோலிப் பண்டிகையை விட மிகச் சிறப்பாக இருக்கும். நீங்கள் சரியான நேரத்துக்குத் தான் வந்திருக்கிறீர்கள் என்றார் திரு.மனோஜ் பட் அளவிலா மகிழ்ச்சியுடன்.

ஹோலிப் பண்டிகைக்காக எட்டாம் தேதி அன்று அரசு விடுமுறையாக உத்தர்கண்ட் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது நாங்கள் ஐந்தாம் தேதி காத்கொதாமில் இருந்து ஜாகேஸ்வருக்கு பயணித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் உ.பி. மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களும் அடங்கி இருந்தன. ஆறாம் தேதி (நாளைக்கு) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

‘இந்த சூழலில் எங்கள் பயணம் பாதுகாப்பானதாக இருக்குமா? என்று கேட்டதற்கு, ‘உத்தரகண்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீராக இருக்கும். அச்சம் வேண்டாம் என்று திரு.மனோஜ் எங்களுக்கு உறுதி அளித்தார். நேரம் கேட்ட நேரத்தில் வந்து விட்டோமோ என்ற ஐயத்தில் இருந்த எங்களை அன்பர் மனோஜின் வாக்குறுதி சற்று மன அமைதி கொள்ளவைத்தது.

அன்பர் மனோஜ் எங்களது பயணத் திட்டத்தைப் பற்றி விரிவாக விசாரித்தார். எந்த தேதியில் நாங்கள் காத்கோதாம் திரும்ப வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டார். அதன் அடிப்படையில் எங்களது சுற்றுலா திட்டத்தை நாங்கள் வகுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார். உண்மையில் குளிர்காலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் உத்தர்கண்ட் மாநிலத்தின் மலைப்பாதைகள் மும்முரமாக சீர்செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றன. உத்தர்கண்ட் அமைந்திருக்கும் இமய மலைப்பகுதி அடிக்கடி நிலநடுக்கங்களினாலும், நிலச் சரிவுகளாலும் பாதிப்படைக்கூடியவை. எனவே குளிர்காலத்தில் நிகழ்ந்த பணிப்போழிவுகளால் ஏற்படும் நிலச்சரிவுகளை கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னர் சரிசெய்தாக வேண்டும். 

கோடை முடிந்ததும் ஒரு மழைக்காலம் துவங்கும் போது மீண்டும் நிலச் சரிவுகள் ஒருமுறை ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன. பாரத இராணுவத்தின் பார்டர்ஸ் ரோடு ஆர்கனைசேஷன் (BRO) இந்த சாலைகளை செப்பனிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தோ திபெத்தியன் எல்லை படைக் காவல் பிரிவும் (ITBP) இமயமலைச் சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளது. சாலைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து அறிவிப்புப் பலகைகளில் தங்களை இமயத்தின் நண்பன் என்று ITBP பெருமையுடன் கூறிக் கொள்கிறது.

காத்கோதாமில் இரயிலில் இருந்து இறங்கியதும் அந்த அதிகாலைக் குளிரைச் சமாளிக்க சூடான பானம் ஏதாவது அருந்தலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்த நாங்கள் காரில் பெட்டி படுக்கைகளை காரின் டிக்கியில் வைத்து விட்டு ஏறி அமர்ந்ததும் நண்பர் மனோஜிடம் எங்களது தேநீர்த் தேவையை சொல்லத் தவறி விட்டதால், அவர் காரை ஓட்டத் துவங்கிவிட்டார். அந்த அதிகாலை நேரத்தில் காத்கோதாமை விட்டால் மலைப்பாதையில் வேறெங்கும் தேநீர்க்கடைகள் திறந்து இருக்காது என்பது எங்களுக்கு பிற்பாடு தான் தெரியவந்தது!

எனது சஹாயாத்திரியான திரு.மங்களீஸ்வரன் ஒரு காப்பிப் பிரியர். காப்பியை விரும்பி சாப்பிட நேரம், காலம், காரணம் எதுவும் பார்க்காத அன்பர். நானும் நண்பர் நடராஜனும் கிடைத்தால் சரி, கிடைக்காவிட்டாலும் சரி என்கிற ரகத்தைச் சார்ந்தவர்கள். மனோஜிடம் காலைக் காப்பி/தேநீர் பற்றிய காலம் கடந்த கோரிக்கையை நாங்கள் வைத்தபோதுதான் தெரியவந்தது காலை ஏழு மணி சுமாருக்கு வழியில் ஏதாவது கடை திறந்திருக்கலாம் என்பது.

'அடடே. இவங்களை நம்பினது தப்பாப் போச்சே!  காத்கோதாமிலேயே காப்பி சாப்பிட்டிருக்கலாமே' என்று மனசுக்குள் நொந்து கொண்டே நண்பர் மங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு எங்களுடன் பயணித்துக் கொண்டிருந்தார். எனது பென் டிரைவினை மனோஜிடம் தந்து அதில் உள்ள பாடல்களை கார் ஸ்டீரியோவில் இசைக்கச் சொல்லிக் கேட்டேன். செவிக்குணவில்லாத போது தானே வயிற்றுக்கு ஈய வேண்டும்? சுவைநீர்/தேநீர் மோகத்தை சற்றே மறக்கக் கொஞ்சம் நல்ல தமிழில் பக்தி இசை கேட்டுக் கொண்டே வருவோம் என்று எண்ணிய எனது வேண்டுகோளை அன்பர் மனோஜ் தயங்காது நிறைவேற்றவும் காதிற்கினிய நெஞ்சை அள்ளும் அருமையான பக்திப் பாடல்கள் பின்னணியில் இசைக்கத் துவங்கின. நண்பர் மனோஜ் இசையை பாராட்டி ரசித்தார். 


எங்களது கார் பீம்தால் (Beemtal) என்ற ஊரை நெருங்கத் துவங்கியது. காத்கொதாமில் இருந்து நைனிதால் (Nainital) செல்லவும், முக்தேஷ்வர் செல்லவும் பீம்தால் என்ற இந்த ஊரில் இருந்துதான் சாலைகள் பிரிகின்றன. நைனிதால் போன்றே பீம்தாலிலும் ஒரு அழகிய ஏரி இருக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளைக் வெகுவாகக் கவர்ந்த இடங்களில் ஒன்று இந்த பீம்தால். சரியாக வெளிச்சம் இல்லாத சூழலில் நாங்கள் பயணித்த கார் பீம்தால் ஏரியைக் கடந்து சென்ற போது, ‘பகல் நேரத்தில் பார்த்தால் இந்த ஏரியின் உன்னத அழகு புரியவரும் என்றார் மனோஜ் சற்றே கர்வத்துடன்.

மூடுபனி மூடிய அந்த ஏரியை அரையிருட்டில் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே நாங்கள் அந்த ஊரைக் கடந்து சென்றோம். மெதுவாக பொழுது புலரத் தொடங்கியதும் சாலையின் இருமருங்கிலும் கண் கொள்ளா இயற்கைக் காட்சிகள் எங்களுக்குக் காணக் கிடைத்தன. ஓக் மரங்களும், பைன் மரங்களும் பசுமையாக ஓங்கி வளர்ந்து சாலையின் இருமருங்கிலும் நிறைந்திருக்க, குமாவூன் பூக்கள் என அவ்வூர் மக்கள் செல்லமாக அழைக்கும் காட்டுப்பூக்கள் பல நிறங்களில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. கண்ணுக்கும் செவிக்கும் கிடைத்த விருந்தில் மெய்ம்மறந்து நாங்கள் பயணித்தோம். 

சுமார் முக்கால் மணிநேரப் பயணத்துக்குப் பின்னர் ராம்கர் (Ramgarh) எனும் இடத்தில் திறந்திருந்த ஒரு தேநீர் விடுதியில் மனோஜ் காரை நிறுத்தினார். ராம் கர் ஒரு அழகிய சிற்றூர். மேகங்கள் சாலையைக் கடந்து கொண்டிருக்க, நாங்கள் காரை விட்டு இறங்கியதும், சிலீர் என்று காற்று முகத்தில் அடித்தது. நிச்சயம் தேநீர் சாப்பிட்டே ஆகவேண்டும் என்கிற உணர்வினை இந்த குளிர் எங்கள் அனைவருக்குமே உருவாக்கி விட்டது.

தேநீர்க் கடையில் அமர்ந்து நாங்கள் நால்வரும் தேநீர் அருந்தினோம். அடுத்து சிற்றுண்டி எங்கு கிடைக்குமோ/எப்போது கிடைக்குமோ என்ற பயத்தில் ரஸ்க் மற்றும் உப்புச் சப்பில்லாத பஃப் என்று தேநீரோடு சேர்த்து அவற்றையும் எதற்கும் இருக்கட்டும் என்று உள்ளே தள்ளி வைத்தோம். சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஒரு சில புகைப்படங்களை அந்த இடத்தில் எடுத்துக் கொண்டு ராம்கரில் இருந்து காரில் ஏறி அமர்ந்து கொண்டு பயணத்தை தொடங்கினோம்.

(பகிர்தல் தொடரும்)

No comments: