Sunday, August 26, 2012

அமரநாதர் அழைக்கிறார்: பகுதி ஒன்று :விதையும் விருட்சமும்...

ஓம் நமசிவாய.

அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்.
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார். (திருமூலர்)

அன்பு அடியார்களுக்கு என் பணிவான வணக்கங்கள். சென்னைச் சிவனடியார் செந்தில் சகோதர்கள் இந்த ஆண்டு அமர்நாத் சென்று வந்த பயண அனுபவங்களை எழுதி அனுப்பி உள்ளார்கள். அதனை வேதாந்த வைபவம் வலைப்பூவில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

கடந்த 2011 ஜூலையில் நான் அமர்நாத் மற்றும் வைஷ்நோதேவி திருத்தல யாத்திரை சென்று வந்த பின்னர் எனது பயண அனுபவங்களைத் தொடராக இந்த வலைப்பூவில் பகிர்ந்தேன். தமிழ் இணையத் தேடல்களில் அமர்நாத் யாத்திரை பற்றிய விரிவான முதல் தமிழ்ப் பதிவாக அது அமைந்தது. மீண்டும் இந்த சிவனடியார்களின் அனுபவங்களை படிக்கும் போது எனது பயண நினைவுகள் மீண்டும் பூக்கின்றன.

தமிழ் இணையத் தேடல்களில் அமரநாதம் பற்றி அறிந்து கொள்ள தேடுவோருக்கு அரிய தகவல்கள் அடங்கிய மற்றுமொரு பயண இலக்கியம் சிவத்திரு.செந்தில் அவர்களின் கைவண்ணம் மூலமாக சேர்ந்திருக்கிறது. இது இறைவனின் அளவிலாக் கருணையின் பயனால் விளைந்தது என்றே எண்ணுகிறேன்.

படிப்போரின் கருத்துக்கு நல்ல செய்திகளையும், கண்ணுக்கு விருந்தாக வண்ணப் புகைப்படங்களையும் தொடர்ந்து இங்கே வெளியாகும்.. அவற்றினைப் படித்து இன்புற, இந்த புவனங்களைஎல்லாம் படைத்துக், காத்து, மறைத்து, ஒடுக்கி அருளும் எம் தந்தை சிவபெருமானின் இன்னருள் பெற்று மகிழ்ந்திட உங்களை அழைக்கிறேன்.

‘அன்பே சிவம் அஷ்வின்ஜி.
இப்ரபஞ்சத் துகளில் ‘நான் யார்?

இந்த யாத்திரையில் பங்கு பெற்ற அணியினரின் புகைப்படம் வெளியிட்டிருக்கிறேன். 
அவர்களின் ஒரு பால சிவனும் இருப்பதை கண்டு இன்புற்றேன்.

அமரநாதன் அருளாலே அவன் தாள் வணங்கிய அடியார்கள்.

இடமிருந்து வலமாக:
சிவனடியார்கள் ரவி, ராமலிங்கம், ஸ்டாலின், ஜெயந்த், சுரேஷ்பாபு, ஆயிரத்தான், செந்தில் (பதிவாசிரியர்) மற்றும் தங்கம்.
அமர்ந்திருப்போர்:
சிவனடியார்கள்: விஜய், சிவவர்ணேஷ்வர்(பால சிவன்:)மற்றும் பார்த்தசாரதி.

 ஓம் நமசிவாய.
அமரநாதர் அழைக்கிறார்..
சென்னை இறையடியார் செந்தில் குழுவினரின் அமர்நாத் அனுபவங்கள்

பகுதி ஒன்று: விதையும், விருட்சமும்.

இந்து மதத்தில் சைவ நெறியாளர்கள் அனைவரும் தரிசிக்க வேண்டிய சிவத்தலங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றுள் தற்காலகட்டத்தில் அனைத்துக் கோவில்களையும் அனைவராலும் தரிசிக்க இறைவன் ஆணை கிடைத்தாலும்,  சில தலங்களை மிகுந்த பிரயாசைக்கு பிறகே தரிசிக்க முடிகிறது.

அவற்றுள் முக்கியமாக கருதப்படும் சில தலங்கள்: கைலாஷ்-மானசரோவர் (திபெத்-சீனா), அமர்நாத் (ஜம்மு-காஷ்மீர்), கேதார்நாத்-பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி(நான்கும் உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளன), பசுபதிநாத்(நேபாளம்), மற்றும் இமயமலையில் அமைந்துள்ள மற்ற கோவில்கள்.

இவற்றுள் இரண்டாவதாக உள்ள தலமே காஷ்மீரில் அமைந்துள்ள ஸ்ரீஅமரநாதர் அருள்பாலிக்கும் அமர்நாத் குகைத் தலம்கடந்த 7 ஆண்டுகளாக கேதர்நாத் பத்ரிநாத் சென்று வரும் நாங்கள், எங்களுக்குள் அமர்நாத விதை விதைக்கப்பட்ட நாட்களை எண்ணிப் பார்க்கிறோம்.....

விதை:
2010ம் ஆண்டு  கேதாரநாதர்பத்ரிநாதர் தரிசன யாத்திரை முடித்து விட்டு ஹரித்வார் ஐயப்பன் கோயில் மடத்தில் தங்கி இருந்தபோது, சில சிவனடியார்கள் அவர்களின் அமர்நாத்ஜி தரிசனத்தை பற்றி கூறியது, இறைவனால் எங்களுக்கு அனுப்பப்பட்ட செய்திபோல் எங்கள் மனதுக்குள் விதையாய் விழுந்தது. அத்துடன் ஹரித்வார் இரயில் நிலையத்தில் உஜ்ஜைன் செல்லும் இரயிலைப் பார்த்ததும், மஹாகாளேஷ்வரின் ஆசியுடன் அவரையும் தரிசிக்க மனதில் துளி விழுந்தது.

பின்பு 2011ம் ஆண்டிலும் கேதாரநாதர்-பத்ரிநாதர் தரிசன யாத்திரை மேற்கொண்டோம் அந்த ஆண்டும் திரும்ப சென்னைக்கு வரும்போது மனதிற்குள் அமரநாதர் எங்களை இந்த ஆண்டாவது அழைப்பாரா என்ற  கேள்வியுடனேயே வந்து சேர்ந்தோம்.

விதை வளர்ச்சி:
பின்பு பல இணையதள தேடல்கள் மூலம் ஸ்ரீஅமரநாத் குகைக் கோவிலுக்கு செல்லுவதற்குரிய பயண திட்டங்களை வகுத்தோம்..

கோவில் திறந்திருக்கும் நாட்களை [2012ம் ஆண்டு கோவில் திறந்திருந்த நாட்கள்-ஜூன் 25 முதல் ஆகஸ்ட் 3 வரை] இந்த அமர்நாத் நிர்வாகத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் [http://www.shriamarnathjishrine.com] கண்டு அதற்கேற்ப ஜூலை மாதம் 14 முதல் 23 வரையிலான ஒரு விரிவான யாத்திரைத் திட்டத்தை இறைவனின் திருப்பெயரால் ஆணையிட்டு, சகோதரருடன் பகிர்ந்து அவரின் சில திருத்தல்களோடு யாத்திரைத் தேதிகளை வரைமுறைப்படுத்தினோம்.

இந்த ஆண்டு IRCTCல் நான்கு மாதங்களுக்கு முன்பே இணைய தளம் மூலமாக இரயில பயணத் துக்கான முன்பதிவு பதிவுசெய்யலாம் என்று 10-மார்ச்சு முதல் அறிவித்தனர்.

அறிவிப்பைக் கண்டதும் உடனே யாத்திரைக்கான எங்கள் குழுவினரின் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய ஆரம்பித்தோம். சென்னையில் இருந்து ஜம்மு சென்று திரும்பி வரும் வழியில் உஜ்ஜயினி சென்றுவிட்டு சென்னை திரும்பிடத் தேவையான ரயில் டிக்கெட்டுக்களை மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை  (மூன்று தவணைகளில் முன்பதிவு  செய்தோம்.

இடைப்பட்ட காலத்தில் எங்களுடன் வருவதாக இருந்த சில அடியவர்களுக்கு இறைவன் இங்கேயே சில பணிகளை ஒதுக்கியதால் அவர்கள் டிக்கெட்டுகளை கான்செல் செய்தோம்..

சில அடியவர்கள் கடைசி நேரத்தில் வருவதாக கூறி வேறு பெயர்களில் வந்தார்கள்.

.எப்படியாகினும் இறைவன் தரிசனமே முதலாய்க் கொண்டு இறுதியாக11 பேர் கொண்ட யாத்திரைக் குழு தயாரானது

அமர்நாத பயண முன் ஏற்பாடுகள்:

ஸ்ரீஅமரநாதர் குகை தரிசனத்திற்கு செல்லுவோர்  கண்டிப்பாக ஜம்மு&காஷ்மீர் பேங்க்க்கு நேரில் சென்று (மதியம் மணிக்கு மேல்), அவர்கள் தரும் படிவத்தினை (தங்களது திட்ட தரிசன நாளிற்கு ) வாங்கிக் கொள்ள வேண்டும். (படிவத்தின் நிறம்: பால்தால் வழி என்றால் நீல நிறம்,பாஹல்காம் வழி என்றால் ரோஸ் நிறம்).

வங்கியிடம் இருந்து  இந்த படிவத்தை வாங்குவதற்கு தங்களது முகவரி/அடையாள சான்று கண்டிப்பாகத் தேவை.

படிவத்தினை வங்கி நிர்வாகம் மே முதல் வாரத்தில் கொடுக்க ஆரம்பிப்பார்கள். பயணத் திட்டம் வகுத்த உடனே அடியார்கள் மிகுந்த கவனத்துடன் பாங்க்குடன் தொடர்பில் இருந்து கொண்டு, பட்வம் கொடுக்க ஆரம்பித்தவுடன் வாங்கி விடவேண்டும். ஏனென்றால், Travel  Agencyகாரர்கள் மொத்தமாக வாங்கிவிடுவார்கள். பின்பு நாம் விரும்பும் நாளில்  Form  இருக்காது ,அதற்காக  கூறுகிறேன்)

Form வாங்கியவுடன் மருத்துவ சான்றிதழ் (அமர்நாத் கோவிலின் இணையத்தில் மாதிரி சான்றிதழ் உள்ளது, அதை பதிவிறக்கம் செய்து, அதிலேயே மருத்துவரிடம் ஸ்டாம்ப் மற்றும் கையெழுத்து வாங்கி விடலாம்) தயார் செய்யவேண்டும்.

அத்துடன் முகவரி, அடையாள நகல், மருத்துவ சான்றிதழ், மற்றும் Bank Form (4 photo ஒட்டி  fillup செய்தது நகலினை இணைத்துள்ளேன்), அனைத்தையும் மீண்டும் வங்கியில் கொடுத்து Bank ஸ்டாம்ப் பெற்றுக் கொண்டு Form-ஐ வாங்கி கைவசம் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். (இந்த Formபால்தால்-இல் இருந்து குகைக்கு நடக்க ஆரம்பிக்கும் போது நடத்தப்படும் மிலிடரி செக்கிங் போது காண்பிக்க வேண்டும்.

இத்துடன் யாத்திரைக்கான முன் ஏற்பாடுகள்  முடிந்தன. அடுத்ததாக பயணத்தின் போது  என்ன எடுத்துப் போகவேண்டும் என்று தயார் செய்ய ஆரம்பித்தோம்.

அப்போதுதான் சிவனடியார் அஷ்வின்ஜியின் அமர்நாத் பயணக் கட்டுரை தொடராக வேதாந்தவைபவம் வலைப்பூவில் மிகவிரிவாக, எளிமையாக அவரது பயண அனுபவத்தினைப் பகிர்ந்து இருந்ததை இணையத் தேடலில் கண்டு பிடித்து, அதன்படி தேவையான ஒரு பட்டியலைத் தயாரித்து அதை, நம்முடன் வரும் அடியார்களுக்கு தெரிவித்து யாத்திரைக்கு தேவையான பொருட்களை நாமும் தயார் செய்தோம்.

(பகுதி இரண்டில் பதிர்தல் தொடரும்)

No comments: