ஓம் என்ற பிரணாயாமம் செய்யும் போது ஓ என்ற எழுத்தினை உச்சரிக்கும் போது இதயம்,நுரையீரல் துவங்கி ஒலி புறப்படவேண்டுமாம்.'ம்' என்ற ஒலி எழுப்பும் போது கண்,மூக்கு,தொண்டையில் ஒலி அதிர்வுகள் ஏற்படவேண்டுமாம். அதிர்வுகளின் மூலமாக காது,மூக்கு,தொண்டை போன்ற பகுதிகளில் உருவாகும் நோய்களை குணப்படுத்த ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஒரு மருத்துவமனை இயங்குகிறதாம்.உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல மருத்துவர்கள் வந்து பாடம் கற்றுச் சென்று தங்கள் நாட்டில் இந்த ஒலி மருத்துவத்தை பரப்புகிறார்கள்.(குறட்டைக்காக விவாகரத்து வரை வந்து விடுவதால் இந்த மருத்துவத்தை மேலைநாடுகள் அலட்சியப்படுத்தி விடமுடியாது).
அதே மாதிரி தமிழ்நாட்டிலிருந்தும் ஒரு ENT மருத்துவ நிபுணர் இதனைக் கற்றுக் கொள்ள சென்றுள்ளார். ஹங்கேரியில் சொல்லிக் கொடுத்த பாடம் இரு உதடுகளையும் இணைத்து "ப்" என்ற ஒலி வரவும் உதடுகள் இரண்டும் அதிரும்படியும் ஒலி எழுப்புவது. மருத்துவ நிபுணர் இந்த ஒலி மருத்துவத்தை எல்லா நாட்டிற்கும் சொல்லிக் கொடுக்கிறீர்களா என்ற கேட்டதற்கு இந்தப் பாடமே எல்லா நாட்டு வருகையாளர்களுக்கும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்ற பதில் வந்ததாம்.
மருத்துவ நிபுணர் மிகவும் ஆச்சரியப்பட்டு இந்த ஒலி மருத்துவம் நம்ம கிராமத்துப் பசங்க பனங்காய்களை சக்கரமாகக் கட்டிக்கொண்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டு ப்..ப்..ர்..ர்.ர் என்று பனங்காய் வண்டி ஓட்டும் மருத்துவமாச்சே என்று ஆச்சரியப்பட்டுப் போனார்.இதில் இன்னொரு ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் உலகம் முழுதும் பள்ளிப்பருவ குழந்தைகள் இந்த ஒலியை இயற்கையாகவே கையாளுகிறார்களாம்.(வளைகுடா குழந்தைகள் பள்ளி நேரம் போக,வார இறுதி நாட்கள் தவிர கூட்டில் அடைத்த கோழிகளாய்த்தான் வளர்கிறார்கள்)எனக்கும் நண்பர்களுக்கும் பனங்காய் கிடைக்காததால் ஆமணக்கு மர விசிறிப் பட்டம் மட்டுமே விட்டு டுர்ன்னு வண்டி ஒட்டிய பழைய நினைவுகள் திரும்புகின்றது.
நேச்சுராபதி மருத்துவம் அதிகம் உண்டதாலோ என்னவோ சில சமயம் பாலைவனமெல்லாம் கோபப்பட்டுகிட்டு சகாராப் பாலைவனம் மாதிரி,இல்ல...இல்ல... நம்ம ஊர் கதாநாயகன்,நாயகி கட்டிப் புரளும் ராஜஸ்தான் பாலைவன மண்ணு,தூசியெல்லாம் ஒரேயடியா கோபிச்சிகிட்டு மனுசங்கூட சண்டைக்கு வந்தா எப்படியிருக்குமோ அந்தமாதிரி பாலைதேசத்து மண்தூசிகள் மூக்கைத் துளைத்தாலும் முகமூடியெல்லாம் போடாம அன்றைய தேச இயற்கை மருத்துவம் இன்று வரை தூசர்களிடமிருந்து காக்கிறது.
பனம்பழமே,ஆமணக்கே,வேரில் மணக்கும் மஞ்சளே இன்னும் கண்ணுக்கு முன்னால் வலம் வரும் தேவமருந்துகளே வாழ்க!வாழ்க!கூடவே உச்சரிக்க மறந்த ஓம் என்ற மந்திரமும்.
நன்றி: http://parvaiyil.blogspot.com/2009/07/blog-post.html