5. தேவபூமியில் சில நாட்கள்.
அல்மோராவை நெருங்கும் சமயத்தில் சாலையில் ஒரு ஊர்வலத்தைப் பார்த்தோம். ஹோலி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு ஆடவர் பெண்டிர், இளைஞர் மகளிர் குழந்தைகள் என பலதரப்பட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தார்கள். எதிரில் வருவோர் போவோரிடம் கை குலுக்கி, மென்மையாக அனைத்து வண்ணங்களை மற்றவர் கன்னங்களில் தடவி மகிழ்கிறார்கள். தாரை தப்பட்டைகள் வாசித்துக் கொண்டும், வாத்தியங்களை இசைத்துக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் சென்று கொண்டிருந்த அவர்கள் எங்கள் காரை வழிமறிக்கவில்லை.
அல்மோரா சுற்றுவட்டார மக்களின் ஹோலிக் கொண்டாட்டங்கள்.
உத்தரகண்ட் மாநில பதிவு எண் கொண்ட எங்கள் கார் தனியார் கார்; வாடகை டாக்சி அல்ல. எனினும் நாகரீகமாக எங்கள் காருக்கு வழி விட்டார்கள். எங்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கை அசைத்த அவர்களை நோக்கி நாங்களும் கை அசைத்து வாழ்த்துச் சொன்னோம்.
ஆண், பெண் எல்லா பாலரும் ஹோலி கொண்டாட்டங்களில்.
நல்ல வேளையாக காரின் கண்ணாடிக் கதவுகளை முன்னதாகவே மூடி இருந்ததால் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி பீய்ச்சிய வண்ண நீர் எங்கள் மீது படவில்லை. காரின் கண்ணாடிக் கதவுகள் மீது அவை பட்டுத்தெறித்தன. பொதுவாகவே தமக்குத் தெரிந்தவர்கள் மீது மட்டுமே வண்ணங்களை பூசுவது என்ற நயத்தக்க நனிநாகரிகத்தை அந்த ஊர் மக்கள் கடைப்பிடித்தார்கள்.
எங்களுடன் பயணித்த அன்பர் நடராஜனுக்கு காரில் இருந்து இறங்கி வண்ணங்களைப் பூசவும், பூசிக் கொள்ளவும், ஆனந்த நடனம் ஆடவும் ஆசை. யார் இவர்? சாட்சாத் அந்த நடராஜன் அல்லவா?!!! நான் அவரிடம், ‘இந்த மாதிரி முன் பின் தெரியாத ஊரில் மக்களிடம் பழகுவதை தவிர்த்து விடுவது நல்லது’ என்றேன். ‘அந்த ஊர்க்காரரான மனோஜ் வண்டியை விட்டு கீழே இறங்காத போது தமக்கு எதற்கு வேண்டாத வேலையெல்லாம்?’ எனக் கேட்டு அவரது ஆசைக்கு அணை போட்டேன். நிலைமையை புரிந்து கொண்ட அவர் பின்னர் இதற்கு ஆசைப்படவில்லை.
வேதகாலத்தில் இருந்தே அல்மோரா நகரம் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தியர்களே உருவாக்கின நகரம் இது என்கிறார்கள். குமாவுன் பகுதியில் ஆறாயிரம் அடி உயரத்தில் இத்தனை அழகான நகரம் இயற்கையாகவே அமைந்திருப்பது வியப்பான ஒன்று. நிறைய கோவில்களையும், புராதனக் கலாசாரச் சின்னங்களையும், பாரம்பரியங்களையும், பல அரசர்கள் ஆட்சி புரிந்த பெருமையையும் கொண்டது இந்நகரம்.
நந்தாதேவிக்கு கோவில் இருக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் மற்ற பகுதிகள் நவீன மயமாக்கப் பட்டுக் கொண்டு பாரம்பர்யத்தை இழந்து வரும் வேளையில் அல்மோரா நகரம் தனது கலாச்சார பெருமையை இன்றளவிலும் கட்டிகாத்துக் கொண்டு வருகிறது. அல்மோராவில் உள்ள கல்வி நிலையங்களில் சிறந்த கல்வி போதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். உத்தரகண்டின் தலைநகர் டேராடூனுக்கு அடுத்து பிரபலமான மலைநகர் அல்மோரா. கல்வி, ஆன்மிகம், வாணிபம், விவசாயம், கம்பள விரிப்புக்கள், கலாசாரப் பெருமைகள் என பன்முகங்களைக் கொண்டது இந்நகரம்.
அல்மோரா நகரை நெருங்க நெருங்க மக்கள் சந்தடியும், கட்டிடங்களின் நெருக்கவும்/பெருக்கமும் தெரிய ஆரம்பித்தது. தேவபூமியில் இருந்தாலும் நகரத்துக்கே உண்டான மாசுபடுதல் எனும் சாபத்தில் இருந்து அல்மோராவால் தப்பிக்க இயலவில்லை என்பதுதான் உண்மை.
அல்மோராவின் பிரதான சாலைகளிலேயே குப்பைகளும், சாக்கடைக் கழிவு நீரும் வழிந்து கொண்டிருந்தது. பன்றிகளும் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்ததை கண்டோம். எங்கள் இப்போதையப் பயணத் திட்டத்தில் அல்மோரா இடம் பெறவில்லை.
எனவே நாங்கள் அல்மோராவைக் கடந்து ஜாகேஷ்வர் செல்லும் பாதையில் பயணித்தோம். எங்களது காலை சிற்றுண்டியை எங்கே அருந்துவது என்ற கேள்விக்கு மனோஜ் அல்மோராவை தாண்டி செல்வோம் அங்கேதான் கோலு தேவதா மந்திர் இருக்கிறது அந்த கோவிலை தரிசித்து விட்டு அங்கேயே உள்ள சிற்றுண்டி சாலையில் சாப்பிடலாம் என்று கூறினார்.
அல்மோராவில் இருந்து ஜாகேஷ்வர் செல்லும் வழியில் சித்தாய் (Chitai)எனும் ஊரில் இருந்த கோலு தேவதா மந்திர் என்ற கோவிலுக்கு போனோம். சாக்ஷாத் பரமசிவனின் அம்சமாக இந்த கோலுதேவதா போற்றி வணங்கப்படுகிறார்.
கோலு தேவதாவின் கதை மிகவும் சுவாரசியமானது.
(பகிர்தல் தொடரும்)
2 comments:
புகைப்படங்கள் தெரியவில்லை :(.
நல்ல பயணக்கட்டுரை .
Thanks ji. Photos are visible
Post a Comment